தீபன் – No fire zone

காட்சி  / ஒன்று

ஏழுவருடங்களின் முன்னொரு குளிர் காலத்தில் பிரான்ஸ் வந்த போது மூன்றாம் உலக நாடொன்றின் கிராமப்புறத்தானிற்கு இருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளும் என்னுள் இருந்தன. முதலில் நல்லதொரு வேலை தேடிவிட்டு பின்னர் சாவகாசமாக இருக்கலாம் என்ற நினைப்பே மிகுந்திருந்தது. நல்ல வேலை என்பது குதிரைக் கொம்பாக இருந்த காலம்.

கிடைத்த வேலையில் கொழுவிக்கொள் பின்னர் நல்ல வேலை தேடிக்கொள்ளலாம் என்பதே மூத்தவர்களின் ஆலோசனை. அதற்கு முன்னர் விசாவை எடுக்கும் வழியைப்பார் என்றார்கள். ‘விசா’வெடுக்கும் வழியில் முதலிற் போனது ‘பொபினிக்கு’ விசாப்போடும் விண்ணப்பப் படிவம் எடுப்பதற்கு. அதற்கு ‘வெள்ளைப்போர்ம்’ எடுக்க வேண்டும் திங்கட்கிழமை வா என்றார்கள். தம்பி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே கூட்டிச் சென்று நீண்ட கட்டிடத்தை ஒட்டியிருந்த தாள்வாரத்தில் குந்தியிருக்கச் சொன்னான். அங்கே ஏற்கனவே பத்துப்பேர் வரிசையில் குந்தியிருந்தனர். கழுத்தைசுற்றி இறுக்கிய மப்ளர், கனத்த குளிரங்கி, அவர்களின் வெடித்த உதடுகளை அடிக்கடி நாக்கால் ஈரப்படுத்தினர்.  அனேகமாக அவர்கள் சனிக்கிழமை காலையே வந்திருக்க வேண்டும். மெல்லிய பனித்தூறலில் இருப்பதுநான்கு மணத்தியாலங்கள் காத்திருந்தேன். என்மேல் விழுந்தப் பனிப்பஞ்சுகள் பாறாங்கல்லின் கனத்திலிருந்தன. எட்டு அய்ம்பத்தொன்பதிற்கு அலுவலகம் திறந்தார்கள். வெள்ளைகாரரின் நேரந்தவறாமையை உள்ளுக்குள் மெச்சினேன். அன்று நான்குபேருக்குத்தான் ‘வெள்ளப்போர்ம்’ கொடுத்தார்கள். சனி இரவே வந்து காத்திருக்கும் வைரக்கியம் நெஞ்சில் இரும்பாய்ப்பாய்ந்தது.

‘பொபினியிலிருந்து’ நேரே சென்றது ஒன்லிசுவாவிலிருக்கும் சித்தியின் அடுக்கு மாடிக் குடியிருப்பிற்கு. ஓடிப்போய் லிப்டை அழுத்திவிட்டு நெடுநேரம் காத்திருந்தேன் எந்த அசுமாத்தத்தையும் காணவில்லை. ஏதாவது புதிய தொழிநுட்பமாக்கும் சத்தமேயில்லாமல் ‘லிப்ட்’ கீழிறங்கும் என மேவாயைத் தடவியபடி காத்திருந்தேன். மாடிப்படியால் சிரமப்பட்டு ஏறிய அரபுக்கிழவியை பரிதாபமாகப்பார்த்தேன். லிப்ட் வரவில்லை. ஓடிப்போய் படிகளில் ஏறினேன் முதல் வளைவில் திரும்பியதும் இருண்ட குகையினுள் நுழைந்து விட்டது போலிருந்தது. கருகிக்கிடந்த பக்கச்சுவர்கள். நெளிந்த இரும்புக்கிராதிகள். இறைந்து கிடக்கும் ரின்கள், சொட்டிக்கொண்டிருக்கும் மேற்தளம் என புரதன நகரினை நினைவூட்டும் எச்சங்கள். எங்களது கைவிடப்பட்ட குடியிருப்புகளின் சுற்று முற்றில் தொடர்ந்து எங்காவது கார்கள் திடீர் திடீரென புகையும். படிகள், வாகனத்தரிப்பிடங்கள் எல்லாம் அடிக்கடி பெற்ரோல் வாசனையுடன் பற்றியெரிந்தது. தீயின் நாக்குகள் முளாசி எரிவதை கண்ணாடி யன்னலூடு வேடிக்கைபார்த்தேன். கருகல் வாசனை, புகை என வழிமண்டலம் நிறைந்திருந்தது.  கிபீர், மிக் வரும் சத்தமும் கேட்டிருந்தால் யாழ்பாண இரவுகளுக்கும் அந்த நாட்களுக்கும் அதிக வித்தியாசமிருந்திருக்காது. அதுவொரு நவீன சேரி. பெரும்பான்மையாக புலம்பெயர் சமூகங்கள் வசிக்கும் அடுக்குமாடிக்குடியிருப்பு. மருந்துக்கும் பிரஞ்சு வெளுப்பை காணமுடியவில்லை. அதிகமும் கருப்பர்களும், கொஞ்சமாய் அரேபியர்களும் அடர்ந்திருந்தனர். பின்னிரவு தாண்டியும் ஒரே இரைச்சலும் சத்தமும் தான்.
பிரஞ்சு மக்களும், பிரஞ்சு அரசங்கமும் தாம் சகோதரத்துவமானதும், சமமானதும், சுதந்திரமானவர்கள் என்றும் இங்கு வரும் புலம்பெயர் அகதிகளுக்கும் அதேயளவான சகோதரத்துவத்தை பகிர்ந்தளிக்க தாம் எப்போதும் தயாராகவேயிருக்கிறோம் என்பது போலவும் பொதுமனநிலையைக் கட்டமைத்திருக்கிறார்கள். அவர்களின் விளிம்புநிலை வேலைகளைச் செய்வதற்கு சொந்த நாட்டுமக்களின் ஆர்வமின்மையும் தொடர்ந்த புலம்பெயர் மக்களை உள்ளீர்க்க வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால் எனைய அய்ரோப்பிய நாடுகள் உள்ளெடுக்கும் அகதிகளுக்கான எண்ணிகையை மட்டுப்படுத்தி வைத்திருப்பதோடு, அகதிக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை உடனடியாக் நாடுகடத்தவும் தயங்குவதில்லை.
காத்திருக்கும் நேரத்தினை தவிர்ப்பதற்காக மூலைக்கு மூலை ரசீது கொடுக்கும் எந்திரம் வைத்திருக்கும் பிரஞ்சு அரசாங்கம், இன்னும் அகதிக் கோரிக்கைகளுக்கான விண்ணப்பம் பெறுமிடத்தில் ஒரு இயந்திரத்தையும் பொருத்தவில்லை. முதலாவது அகதிக்கோரிக்கை விண்ணப்பபடிவத்தினை பெற அல்லது மீள் அகதி கோரிக்கை விண்ணப்பத்தினைப் பெற இருபத்தி நான்கு மணிநேரங்கள் வெய்யிலிலும்,குளிரிலும், மழையிலும் காத்திருக்க வேண்டும். காலை ஒன்பது மணிக்குத்தான் அலுவலகம் திறந்து படிவம் கொடுப்பார்கள். திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு படிவம் கொடுக்கிறார்கள் என்றால் ஞாயிறு காலம்பெறவே பனியில் இடம்பிடித்துக் காத்திருக்கவேண்டும். துண்டுபோட்டுவிட்டு வீட்டுக்குப்போய்த் திரும்பவும் முடியாது.  அதிலும் முதலில் காத்திருக்கும் அய்வருக்கோ, பத்துப் போருக்கோதான் படிவம் கொடுப்பார்கள். அந்த எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியிருக்கும். நேற்று பதினைந்து பேரிற்கு படிவம் கொடுத்தால் இன்றும் பதினைந்தவாதாக இடம்பிடித்துவிட்டு தெம்பாக நிற்கமுடியாது வெறும் அய்ந்து பேரிற்கு மாடும் படிவம் கொடுத்து மிகுதிப்பேரை அடுத்த நாள் வரச்சொல்லுவார்கள்.  இப்படித்தான் முதலாவது வரவேற்பிருக்கும் பிரான்ஸில்.
காட்சி / இரண்டு
ஷோபாசக்தி  பிரஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட திரைக்கதையை காட்டியபோது அதை மேலோட்டமாகப் புரட்டினேன். அதன் தலைப்பு ஏரான் என்றிருந்தது. பிரதான பெண்பாத்திரத்தின் பெயர் நாகம்மை என்றிருந்தது. எல்லாவற்றையும் விட என்னை உறுத்தியது உணவகத்தில் ஏரான் பூ விற்கும் காட்சி. பெரும்பாலும் வங்காளிகள்தான் இங்கே உணவங்களில் பூ விற்பவர்கள். வங்காளிகளையும் தமிழர்களாகவே புரிந்து கொண்டிருக்கும் ஜக் ஓடியரினால் எப்படி எம்மை குறித்த நுட்பமான படத்தைக் கொடுத்துவிடமுடியும்.  தீபன் திரைப்படத்திற்கு கான் திரைப்படவிழாவில் தங்கப்பனை விருது கிடைத்ததும் அது குறித்த அதீத எதிர்பார்ப்பிருந்தது. பிரான்ஸில் இத்தனை சமூகங்கள் வாழும் போது ஓதியார் எதற்கு தனக்கு அந்நியமான ஈழத்தமிழர்களின் பிரச்சினையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்வியும் உதிரியாய் எழுந்தது.
தம் மக்களின் வாழ்வுக்கும், விடுதலைக்கும் போரடியவர்களுக்கு இப்புலம்பெயர்வு எத்தகைய வாழ்வைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் மக்களுடன் செயலாற்றியவர்களும், மூர்க்கமாக போரிட்டவர்களும் தமது வேர்களை அறுத்து விட்டு எப்படி இந்த சலிப்பூட்டும் இயந்திர வாழ்க்கையினுள் தம்மைப் பொருத்திக்கொள்கிறார்கள்.  இலட்சியங்களாலும், தியாகங்களாலும் முனைப்போடு செயல்பட்டவர்கள் இங்கே இந்த விளிம்புநிலை வாழ்வினுள் தம் வேர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள். வன்முறையிலிருந்து நீங்கி தாம் உண்டு , தம் சோலி உண்டு என்றிருப்பவர்கள் என்னவானார்கள். அவர்களுக்கு இந்தப் பிரான்ஸ் எப்படியான வாழ்வைக் கொடுக்கிறது?
தீபன் படத்தில் புலம்பெயர் சமூகங்கள் குறித்த நுட்பமான பார்வைகள் பதிவாகியிருக்கிறது. அவர்களின் மொழிச்சிக்கலும் சரி, யாருடனும் ஒட்டாமல் தம் கலாசார, பண்பாடு வேர்களை மண்வாசனையோடு பெயர்த்து வந்து, பரிஸின் சிமெந்துக் கட்டடங்களில் சிறு, சிறு தீவுகளாகச் சிதறிக்கிடக்கும் காட்சியும் சரி, அவர்களின் விளிம்புநிலைவாழ்வும் சரி மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது.
பொலிசாராலும், அரசங்கத்தினாலும் கைவிடப்பட்ட, கவனிக்கப்படாத அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழநேர்ந்த வன்முறைப் பின்புலமுள்ள இருவர் குறித்தபதிவே இந்தத் தீபன் திரைப்படம்.  இருவருக்கும் வெவ்வேறு வன்முறைப்பின்புலங்கள். ஒருவர் ஆயுதமேந்திப்போரிட்ட ஆயுதக்குழுவின் உறுப்பினர். யுத்தம் முடிந்து ஆயுதங்களையும், வன்முறையையும் கைவிட்டுவிட்டு அகதித்தஞ்சம் கோரியிருக்கிறார். மற்றவர் போதைபொருள் கடத்தும் சிறு குழுவின் பிரதானமானவன். சிறையிலிருந்து பொலிஸின் கண்கானிப்பு வளையத்துடன் திரும்பியவர். காலில் கொழுவப்பட்டிருக்கும் அந்த வளையமூடு அவனின் இருப்பும், செயலும் தொடர்ந்து கண்கானிக்கப்படுகிறது. இரு வன்முறைப்பின் புலங்களும் பல ஆதரக்கேள்விகளை முன்வைக்ககூடியன. ஒன்று மக்கள் விடுதலையின் பொருட்டு நிகழ்தப்பட்ட வன்முறை. மற்றயது சமூகசீரழின் பொருட்டு நிகழ்தப்படும் வன்முறை. இரண்டும் பேரழிவைப் அகத்திலும்,புறத்திலும் நிகழ்த்தக்கூடியன.
தீபன் முள்ளிவாய்க்காலில் தன் வரியுடுப்பையும், ஆயுதங்களையும், எரித்துவிட்டு பிரான்ஸ் வந்திருக்கிறார். கடைசிப்போர்களத்திலிருந்து குடும்பங்களாகவே வெளியேற முடியும் என்ற இக்கட்டில்  யாழினியைத் தன் மனைவி என்றும், இளையாளை மகளாகவும் பதிந்துவிட்டு விசாவுக்காகக் காத்திருக்கிறார். விசாக்கிடைத்ததும் யாழினி தனது கனவுத்தேசமான இங்கிலாந்து சென்றுவிடும் முனைப்பிலிருக்கிறாள். யுத்த வடுக்களை வலிகளாகவும், இழப்புகளாகவும் வரித்துக் கொண்ட இவர்கள் எதன் பொருட்டு வாழ்கிறார்கள். தீபன் தன் பெருங்கனவு சிதைக்கப்பட்ட பின்னரும், தன் நண்பர்கள் அழிக்கப்பட பின்னரும் தன் நிலம் பிழக்கபட்டு தசையும், நினமுமான போராட்டம் அழித்துத் துடைக்கப்பட்ட பின்னரும் எதன்பொருட்டு தனுயிரைக் கொண்டலைகிறான். வன்முறையிலிருந்து தப்பித்த அவனுக்கு இந்தப் புதியதேசமும், யாழினியும், இளையாளும், யூசுப்ம் கொடுக்கும் வாழ்வு எவ்வளவு மகத்தானது. கிடைக்கும் வேலைகளைச்செய்து கொண்டும் வாழ்ந்துவிட நினைக்கிறான் அவன். அனால் அது அவ்வளவு இலகுவானதல்ல. புரிந்து கொள்ளமுடியாத யாழினி மீதான அன்பு அவனை அலைக்கழிக்கிறது. வன்முறையின் கரங்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கிறது.
புதியவேலை கிடைத்துச்செல்லுமிடத்தின் பிஞ்சுப்பெயரின் அர்தத்தம் அழகியதாக இருக்கிறது. கடந்து செல்லும் பசுமையான கோதுமைவயல்களைத் தாண்டி அங்கே அவர்களை வரவேற்கும் குடியிருப்போ மிகப் புராதனமானதாகவிருக்கிறது. கைவிடப்பட்டு உடைந்த கடிதப்பெட்டிகள். வேலைசெய்யாத மின்தூக்கி. உடைந்து சிதறிக்கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள். மொத்த எதிர்பார்புகளும் மெல்லச்சுருங்கிப்போகுமிடம் அது. கனவுக்கும், எதார்த்தத்திற்குமான இடைவெளி.  அந்தச் சிறு குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள். கருப்பர்கள், அரேபியர்கள் மற்றும் தீபனின் குடும்பம்.
போரின் நினைவுகளிலிருந்து விடுபட்டு வாழநினைக்கும் தீபனிடம், மீண்டும் ஈழத்தில் போரைத் தொடங்க காசு  சேர்க்கப்போவதாகச் சொல்லுகிறார் அம்மான். அவருடனான தீபனின் உரையாடல். ‘பிக்நிக்’ செல்லுமிடத்தில் எவருடனும் ஒட்டாமல், யாருக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடும் மனநிலையில் அவனுள் போரின் ரணங்களை இன்னும் கணன்று கொண்டிருக்கிறது. இன்னும் யுத்தம்பற்றிய கனவிலிருக்கும் புலம்பெயர்ந்தவர்களைச் சாடுமிடமது.
தீபனின் ஒவ்வொரு மனமாற்றாங்களின் போதும் மதம் கொண்ட யானை திரையில் இருளிளிருந்து ஒளியை நோக்கி அலைவுறுகிறது. இருண்ட இலைகளினூடோ  அசையும் கரிய யானை வன்முறை குறித்த அச்சத்தை நினைவூட்டுகிறது. ஒவ்வொரு திருப்பத்திலும் உன்மத்தம் கொண்ட யானையின் அலைவும் அதன் பின்னரான மனநிலையின் மாற்றத்திலும் யானையை வன்முறையின் குறியீடாக்கிவிடுகிறார். குறுணிக் கண்களும், சோம்பலான உருவமுமாகிய யானை மதம் கொள்ளும் போது அதனால்  நிகழும் அழிவு அளவில்லாதது. தீபனை வன்முறையிலிருந்து தப்பித்து வன்முறையினுள் வீழ்திவிடும் அவலமானதொரு நாடகப் பிரான்ஸ் இருக்கிறது.  அதனால்தான் பின்னர் இங்கிலாந்தில் அவன் இங்கிலாந்து தேசத்தவருடன் ஒன்றிப்போய்வாழ்வதை ஒரு காட்சியில் விபரிக்கிரார். அப்படியானதொரு வாழ்வு அவனுக்கு பிரான்சில் கிடைக்கவில்லையென்பதே பிரான்ஸ் குறித்தான மிகமுக்கியமான விமர்சனம் தான்.
காட்சி – முடிவு
தீபன் திரைப்படம் பார்த்துவிட்டு வந்து ‘பேஸ்புக்Õ திறந்தபோது ஒரு நண்பரின் நிலைத்தகவல் இப்படி இருந்தது.
“கை ரெண்டையும் இடுங்கி, தலையையும் புடுங்கி, முண்டத்தை அலையவிட்டது போலுள்ளது இன்றைய நாள். கான்ஸ் விருது வென்ற தீபன் திரைப்படத்தை பார்க்கப்போன இடத்தில் ‘க £ன்ட்போனை’ களவெடுத்துவிட்டார்கள் அடையும், கறுவலும் (பிரான்சிலுள்ள அறாப் (கிக்ஷீணீதீமீ) மற்றும் ஆபிரிக்க (கியீக்ஷீவீநீணீஸீ) காவாலிகள்) இந்த கவலையுடன் தான் இன்று வெளியான தீபன் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது”
இதுதான் ஓட்டுமொத்த தமிழர்களினதும் மற்றைய புலம்பெயர் சமூகங்கள் பற்றிய பார்வை. ஆழ்மனதில் பதுக்கி வைத்திருக்கும் பிற சமூகங்கள் மீதன வன்மம். ஒரு சிலர் திருடுவதாலும், ஒரு சிலர் ஏமாற்றுவதாலும் ஒட்டுமொத்த இனத்தினையும் பழி போட்டுவிட்டு தாம் தப்பித்துக்கொள்ளும் செயலிது.  கறுவல்கள் காவாலிகள் என்றும் அழுக்கானவர்கள் என்றும் அரசாங்க செலவில் வாழ அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள் என்றும் லா சப்பல் கம்பிகளிலிருந்து வம்பளப்பார்கள். அரேபியர்கள் பற்றி இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களின் மதவெறியில் ஆரம்பித்து,  வாபர்ஸ் மெத்ரோ வாயிலில் திருட்டு தொலைபேசிகள், போலி சிகரட்கள் விற்பது வரை மொத்த இனத்தின் மீது ஆழமான முத்திரையை குத்தி அதன் தழும்பை அவ்வப்போது சொறிந்து கொள்வார்கள்.
தீபன் திரைப்படம் பார்த்து விட்டு வந்த பலரின் கருத்துகளும் போலியான பிம்பங்களைக் கட்டமைப்பதிலேயும், வீராவேசக் கனவுகளைக் கட்டமைப்பதிலும் இருக்கிறது. தீபன் படம் பார்த்து விட்டு அதன் உள்ளடக்கத்தையும், பேசுபொருளையும் இம்மியும் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட இன்னொருபார்வை. இந்த இனவாத எச்சிலை எந்தவித கேள்வியும், குற்றவுணர்வுமில்லாமல் இதனை 56 நபர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.
‘படத்தின் முக்கிய கதை – பிரான்சில் வாழும் வெளிநாட்டு அகதிகள் பற்றியது. ஈழத்தமிழர்களாகிய நாங்களும் அகதிகள்தான். ஆபிரிக்கர்கள், அரேபியர்கள் எல்லோருமே அகதிகள்தான். ஆனால் எல்லா அகதிகளும் ஒன்றா? என்றால், ‘இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த பிரெஞ்சு மனுஷன். அதிலும் ஏனைய அகதிகளை விடச் சிறந்தவர்கள் என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். ஈழத்தமிழ் அகதிகளுள் ஏ.கே, பி.கே, ரொக்கட் லோஞ்சர், ஆட்லரி என்று எல்லாவகையான ஆயுதங்களையும்  கையாளத் தெரிந்த பலர் இருக்கிறார்கள் என்றும் ஆனால் அவர்கள் அனைவரும் அவற்றை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இந்த சமூகத்தோடு ஒத்திசைந்து வாழ்கிறார்கள் என்றும், புதுசா ஆயுதம் தூக்கிய அடை கறுவல் எல்லாம் அதை தப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றும் ஆணி அறைந்து சொல்லப்பட்டுள்ளது.
இப்படத்தை அந்தாள் எடுத்ததுக்கு காரணம் – பிரெஞ்சு மற்றும் ஏனைய வல்லரசுகளுக்கு சில சங்கதிகளை தெளிவுபடுத்தவாகும். அதாவது விடுதலைப்புலிகள் என்ற இயக்கம், மிகவும் கட்டுக்கோப்பானது. அது, தன் இன விடுதலைக்காக மட்டுமே ஆயுதம் தூக்கியது, அது தன் ஆயுதங்களை தவறான முறையில் பயன்படுத்தியதில்லை, சமூகத்தைக் கட்டுக்கோப்பில் வைத்திருப்பதில் அவ்வியக்கம் சிறந்தது முதலான விஷயங்களைத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்’
இப்படிப் புலம்பெயர் சமூகங்கள் குறித்த அடிப்படை அறிவோ, புரிதலோ இல்லாமல் அடித்துவிடப்படும் கருத்துகள்தான் பெரும்பான்மைவகிக்கின்றன. இவர்களின் மனங்கள் தம் இனம் குறித்த அதீதமான பெருமிதங்களாலும், வெற்று வீராவேசக் கருத்துகளாலும் நிரம்பி வழிகின்றன. வரலாறுகளையும், சிறு தகவல்களையும் தமக்குச் சாதகமாகத் திரித்தும், வளைத்தும் பொய், புரட்டுக்களுடனான வரலாறை எழுத முயல்கிறார்கள்.
உண்மையில் பிரான்சில் புலம்பெயர் சமூகங்களின் நிலமை எப்படி இருக்கிறது? பிரெஞ்சு அரசாங்கம் அகதிகளை எப்படி நடத்துகிறது? பிரெஞ்சு மக்கள் ஈழத்தமிழரை மட்டும் பிரத்தியோகமாக வேறுபடுத்திப்பார்க்கிறார்களா  என்ன? திரும்ப ஒருமுறை கண்ணில் எண்ணையை ஊற்றிவிட்டு தீபன் படத்தைப் பார்க்கவும். அதற்கு முன்னர் ஈழத்தமிழன் எனப்புடைத்திருக்கும் நெஞ்சை கொஞ்சம் கீழிறக்கிக் கொள்ளவும்.
Scroll to Top