தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப் பொட்டின் அளவில் முகில்களுள் மறைந்து திரியும் அவ்ரோவின் உடைந்த பிரும்மாண்டம் கண்களின் முன் பேருருவமாக இருந்தது. அதன் வளைந்த முன்பக்கத்தில் தன்னிரு கைகளையும் வைத்து அழுத்தினாள். எரிந்த அலுமினியச்சூடும், மழைக்குளிரும் அதில் மிச்சமமிருந்தன. அவளுடைய பத்து விரல்களின் அழுத்தலில் பிருமாண்ட அவ்ரோ விமானம் அசைவற்று செம்பாட்டு மண்ணுள் புதைந்திருந்தது.

தீப்பற்றி எரிந்த அவ்ரோ விமானம் நிலாவரைக் கிணறு தாண்டியிருந்த தோட்டக்காணியினுள் வீழ்ந்து நொருங்கியபோது பலாலியிருந்து இராணுவத்தினர் நிலாவரை நோக்கி ஷெல் அடித்தனர் . வீழ்ந்த அவ்ரோ பாகங்களை மீட்டுப்போக ராணுவம் முன்னேறி நிலாவரைக் கிணறுவரை வரக்கூடும் என்ற அச்சத்தையும் மீறி அக்காவும், அப்பாவும் அவ்ரோ விமானத்தைப் பார்க்கச் சைக்கிளில் புறப்பட்டனர். அம்மா அப்பாவின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டும், கால்களை உதறிவிட்டுத் தன்னுடைய அகலக் கரியல் சைக்கிளில் வெள்ளிப்பூண் போட்ட கொட்டன் தடியையும், அக்காவைவும் அப்பா ஏற்றிக் கொண்டார். அக்கா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். பள்ளிகூட வெள்ளைச் சட்டையைக் கூட கழட்டியிருக்கவில்லை. புத்தகப்பையை விறாந்தையில் தூக்கி எறிந்துவிட்டு வெள்ளைச் சட்டை சிறுமியின் குதூகலத்தில் சைக்கிளில் அவள் அவ்ரோவைப் பார்க்கப்போன நாளினை செம்பகமாச்சி இப்போதும் கதையாகச் சொல்லுவார். அன்று அக்காவின் கண்களில் அம்மளாச்சியின் மூர்க்கம் வந்திருந்ததைப் பார்ததாகச் சொன்னார். ஊர்ச்சனம் ஆமிக்குப் பயந்து உரப்பை மூட்டைகளுடன் கப்பூதுத் தரவை வெளிக்கு இடம்பெயர்ந்தபோது அக்காவும் அப்பாவும் சனங்களைக் கிழித்து எதிர்திசையில் பலாலி நோக்கி அவ்ரோவைப் பார்க்கச் சென்றனர். கிட்டினன் செதிலுதிரும் மீன்பெட்டி கட்டிய சைக்கிளை வேலியோரமாகச் சாய்துவிட்டிருந்தார். மீன் வெட்டும் கூர் ஒடுங்கிய கத்தியுடன் உடைந்த அவ்ரோவினைச் சுற்றி நோட்டமிட்டபடியிருந்தார். சனங்கள் சுற்றி நின்றிருந்தாலும் யாருக்கும் அருகில் செல்லும் துணிச்சல் வரவில்லை. அக்கா அப்பாவின் சைக்கிளிலிருந்து குதித்தோடி தன்னிரு கைகளையும் பிரும்மாண்ட அவ்ரோவில் வைத்து அதனைத் தள்ளிப்பார்த்தாள்.

பின்னொரு போதும் அக்கா, கிட்டினனிடம் மீன் வாங்கிச் சமைக்க விடவில்லை. அவளுக்கு தெரியாமல் அம்மா ஒரு மதியம் வாளை மீனைக் கிட்டினனிடம் வாங்கிச் சமைத்திருந்தார். நீண்ட முட்களுடையை நேர்த்தியாக நறுக்கப்பட்டிருந்த வாளை மீனின் சிறு துண்டைக் கூட வாயில் வைக்காமலே இது கிட்டினனின் பெட்டியிலிருந்த மீன் என்றபடி சாப்பாட்டுத் தட்டை முன்னால் தள்ளிவைத்துவிட்டு எழுந்து சென்றாள். அம்மா அச்சம் மண்டிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தார். அப்பா எட்டி அம்மாவைப் பிடரியைப் பொத்தி அடித்தார். ‘தோறை எண்ட பிள்ளையை ஏமாத்தப் பாக்கிறியோ’ என்றபடி சாப்பிடாமல் எழுந்து சென்றார். நானும் அம்மாவுமே அன்று வாளை மீன் முழுவதையும் சாப்பிட்டு முடித்தோம். எனக்கு அந்த வாளை மீனில் எந்த வித்தியாசமும் தெரிந்திருக்கவில்லை என்று செம்பகமாச்சியிடம் கேட்ட போது `உவன் கிட்டினன் அண்டைக்கு அவ்ரோவுக்கை செத்துக் கிடந்த ஆமிக்காரன்ரை பத்துவிரல்லையும் உப்பிடி கொத்தாக் கிடந்த மோதிரங்களைக் கழட்டப் பாத்திருக்கிறான். எப்பிடி இழுத்தாலும் உடும்பு போல விரலோடை ஒட்டிக் கிடந்த மோதிரம் கழரேல்லை மோனை, மீன் வெட்டுற கத்தியால ஒரு நறுக்கிலை ரண்டு கையையும் வெட்டிக் மீன் பெட்டிக்கை வைச்சுக் கொண்டு வதுட்டான்` என்றார் தன்னுடைய பூஞ்சனம் படர்ந்த கண்கள் விரிய. அக்காவிடம் கேட்ட போது அவள் ‘நீ சின்னப் பொடியன் உனக்கு இதுகள் விளங்காது’ என்றாள்.

இரண்டாம் கோடை ; ஈரப்பிசுபிசுப்பான இருளில் புதிய மண் வாசனையில், வியர்வை வளிய இறுக்கிய கரிய தேகம் நுரையாகப் பொங்கியது. புதிதாக வெட்டப்பட்டிருந்த L வடிவ பங்கரினுள் கால்விரித்து நிலவை நோக்கிப் படுத்திருந்த போது தொடைகளின்வழி அக்காவின் பெண்குறியில் உணர்ந்த வலி அதீத கிளர்வு தருவதாக இருந்தது. பங்கரின் அருகில் நின்ற மா மரத்தில் கொழுவியிருந்த பாரமான கோல்சரின் பச்சைநிறம் நிலவொளியில் பழுத்த மாங்கனிகள் போலத் தெரிந்தன. வெண்மையான நிலவின் கரும்புள்ளித் திட்டுகள் உறுத்துவாதாகத் தோன்றிய நொடியில் உச்சம் வந்த ஆண்குறி அக்காவின் யோனிப்பிளவுக்குள் வதங்கிச் சுருண்டது. அதுவே, முதுகின் கீழ் விரித்திருந்த பழைய உரைப்பையில் மிச்சமாயிருந்த நாட்பட்ட உரத்தின் மலவாசனை, வியர்வையோடு சேர்ந்து கலவியின் வாசனையாய் அக்காவின் நினைவின் மடிப்புகளில் தங்கியிருந்தது.

வீட்டையொட்டிக் கிடந்த வெள்ள வாய்க்காலின் முடிவில் போராளி பங்கர் வெட்டத் தொடங்கியபோது அவன் தண்டனையில் வந்திருக்கும் போராளி என்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டனர். தெருவலை மண்வெட்டியும், சிறிய நார்க்கூடையுடனும் அவர் இரவு பகலாக L வடிவத்தில் மிக மெதுவாக நிலத்தைக் கொத்தியபடி இருந்தான். நார்க்கூடையில் சேர்ந்த மண்னை வெள்ளவாய்காலின் முடிவிலிருந்த பள்ளத்தில் இட்டு நிரவினான். தன்னுடைய பாச்சை நிறக் கோல்சரை மாமரத்தில் கொழுவிவிட்டிருந்தான், அவன் கோல்சர் கட்டியிருந்ததை ஊரார் ஒரு போதும் பார்த்திருக்கவில்லை. பின்னேரங்களில் தோட்டக் கிணற்றில் நீர் அள்ளிக் குளிக்க வாளி வேண்டி வீட்டிற்கு வருவான். மண் அழுக்கும், புழுதியும் அப்பிக் கிடக்கும் தொளதொளப்பான நீளக் கால்சட்டையும், வெளிறிய வட்டக் கழுத்து பெனியனும் அவனை போரளியாகவே நம்ப முடியாத தோற்றத்தைக் கொடுத்திருந்தது. பலம்பொருந்திய, அதீத புனைவுகளால் பின்னப்பட்ட போராளிகள் குறித்த கதைகளிலிருந்து தப்பி வந்துவிட்ட தோற்றத்தில் அவனின் உடல் மெலிந்திருந்தது.

இருபத்தியெழு பங்கர்களை வெட்ட வேண்டியது அவனது தண்டனை என்று ராணாசிங் பேக்கரியில் வைத்துச் சொன்னார். இரவில் ராணாசிங் அவனுடன் பங்கரையொட்டி நிற்கும் ஒற்றை மா மரத்தின் கீழ் சாய்ந்திருந்து உரையாடுவதையும், சேர்ந்து சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன்.வாளி வாங்க வந்தபோது இது எத்தனையாவது பங்கர் என்று கேட்டேன். சிரித்தபடியே இருப்பதியேழாவது பங்கர் என்றவன், ‘மெல்லாமா வெட்டுறன் களத்திலை ரத்தமும் ஓலமும் சலிப்பையே தரூது இந்தப் பங்கரை சாகும்வரை வெட்ட விட்டாலே நல்லா இருக்கும்’ என்றான்.
‘சாகும் வரை பங்கர் வெட்டினால் ஊரில் மண்குழிகள் தான் மிச்சம் இருக்கும்’ என்றேன்.
‘எங்களுக்கு இப்ப குழிகள் தான் கனக்கவேனும் ஒளிஞ்சு இருக்கிறதுக்கு இல்லாட்டி அழுகிற வித்துடல்களை போட்டு மூட’ என்றபடி வாளியுடன் திரும்பி நடந்தான். அன்றிரவு அக்கா நெடுநேரமாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை. ஊர் முழுவதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. அக்காவின் சைக்கிள் பள்ளிகூடத்தின் தேமா மரத்தின் கீழ் நின்றிருந்தது. அப்பாவும் அம்மாவும் ஊரைச் சுற்றியிருந்த இயக்க காம்புகள் எல்லாம் ஏறி இறங்கினார்கள். பொறுப்பாளர்களின் கால்களில் விழுந்து எழுந்தார்கள். அக்கா எந்தத் தடையமும் இல்லாமல் ஊராரின் கண்களிலிருந்து மாயமாக மறைந்துபோயிருந்தாள். அக்காவையும், பங்கர் வெட்ட வந்த பெடியனையும் தொலைதூர பஸ்ராண்டில் பார்த்ததாக சில நாட்களின் பின்னர் சுப்பு சொன்னார். அப்பா காண்கள் சிவக்க மீசையில் வழியும் கள்ளைப் புறங்கையால் துடைத்தபடி ‘எளிய சாதி தன்ரை சாதிப்புத்திய காட்டிட்டான்’ என்று கால் கெண்டைத்தசை துடிக்க உறுமினார். தன் கொட்டன் தடியை எடுத்துக் கொண்டு சுப்பு சொன்ன தொலைதூர ஊருக்கு அக்காவத் தேடிப்போகப் போவதாக இரைந்தார். அம்மா அவருடைய காலைப் பிடித்து அழுது குழறினார். ‘அவளை எண்டாலும் நிம்மதியா இருக்க விடுங்கோ’ என்று கத்தியதையும் கேட்காமல் அம்மாவை வேலியோரமாக உதைத்து வீழ்த்திவிட்டு புறப்பட்டு போனார்.

மூன்றாம் கோடை; பச்சை வோக்கிடோக்கியின் மிகச் சிறிய கம்பி வலையுள்ளிருந்து கரகரத்து ஒலித்த குரல்கள் தடித்து புகையாகிக் கரைந்தது. அக்காவிற்கு குரல்களின் வசீகரம் குறித்த அதீத கற்பனைகள் கிளார்வு தருவதாய் இருந்தன. வாக்கிடோக்கியில் கட்டளையிடும் குரல்கள், உதவி கோரி இறைஞ்சும் குரல்கள், பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நடுங்கும் குரல்கள், பாடலை இசைத்தபடி தாக்குதல் அனுமதிக்காக காத்திருக்கும் குரல்கள், உடைந்த குரல்கள், தேம்பி அழும் குரல்கள், நீண்ட மெளனங்களைக் கலைக்கும் கரகரப்பு ஒலிகளின் அரூப ஸ்பரிசம் வோக்கிடோக்கியின் கம்பிவலையுள்ளிருந்து கசியும் போதில் பாடலைப் போல ரசித்துக் கேட்டபடியிருந்தாள்.

அக்காவை அப்பா ஊரிற்கு இழுத்து வந்தபோது அவருடன் இரண்டு பேர் துனைக்கு வந்திருந்தனர். அப்பாவின் கொட்டன் தடியில் ரத்தம் காய்ந்து இறுகிக்கிடந்தது. அக்காவை அம்மம்மா எழுபது வருடங்களாக குனிந்திருந்து கூன் விழுந்த முதுகுடன், புகையூதிச் சமைத்துப்போட்ட பழைய குசுனிக்குள் தள்ளிப் பூட்டினார். தழ்ந்த கூரையுடன் அடுப்புக்கரிபடிந்த பழைய குசினி வீட்டையொட்டிய பத்தியுள்ளிருந்தது. அக்கா கால்கள் இடறி நூற்றாண்டின் பழமைக்கு விழுந்துவிட்டது போல உணர்ந்து கொண்டார். அப்பா குசினிக்கதவை அடித்துச் சாத்தி, இறுகப் பூட்டி கதவருகில் தன் வெள்ளிப்பூண் போட்ட கொட்டன் தடியையும் நிறுத்தி வைத்திருந்தார். அம்மம்மாவின் குசினியில் அடைக்கப்பட்ட பின்னர் அக்கா நிலத்தை, கதவை, பழமைபடிந்த சுவரை நகங்களால் பிறாண்டும் சத்தம் கேட்டபடியிருந்தது. வேலுப்பிள்ளை பரியாரியின் மகனும் ஒட்டாவி வைத்தியரும் அக்காவின் மஞ்சள் படிந்த நாக்கை நீட்டச் சொல்லிப் பரிசோதித்தும், பச்சைக்களி உருண்டைகளைச் சாப்பிடக் கொடுத்தும் அக்கா இரவுகளில் பிறாண்டுவது நிற்கவில்லை.

இந்தியாவிலிருந்து அம்மன் கோயிலில் சின்னமேளம் ஆடவந்து ஊரின் மிகவும் நம்பிக்கையான வைத்தியரும், நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லவருமான வேலுப்பிள்ளைப் பரியாரியின் அறைக்குள் பல வருடங்களாக அடைபட்டுக்கிடந்து ஆடுவதையும், பாடுவதையும் மறந்து உடல் பருத்து நடக்கவே சிரமப்படும் மகாமணிதான் அக்காவின் பிறாண்டும் பழக்கத்திற்கு மருத்துவம் சொன்னார். நீர் கோத்திருக்கும் வெளிர் கால் மூட்டுக்கள் வரை சேலையை உயர்த்திவிட்டு கால்களுக்கு எண்னை பூசியபடி அக்காவின் பிறாண்டலிற்கான மருத்துவத்தைச் சொன்னார். அவர் எங்களூர் ஊர் அம்மன் கோயிலில் கடைசியாக ஆடிய ஆட்டம் ஊராரின் நினைவுகளில் இப்போதும் இருக்கிறது என்று நான் சொன்னபோது. அந்த ஆட்டத்துகுத்தன் வேலுப்பரியாரியார் தன்னுடைய சொத்தில் பாதியை எழுதிவைத்திருக்கிறார் என்று சிரித்தார். மகாமணிணியின் ஆலோசனைப்படி – மகாமணியைக் வேலுப்பரியாரிக்காக கடத்தி வந்து கொடுத்த – அப்பா இரவுகளில் அக்கா அடைக்கப்படிருந்த குசினிக்கதவை திறந்துவிட்டார்.

அதன் பின்னர்தான் இரவில் ஊர்ச் சந்திவேம்பு தாண்டிக் கப்பூதுத் தரவைவெளி, மஸ்கன் சீற்கொம்பனியொட்டிய வெங்காயத் தோட்டங்கள், கைத்தொழிற்பேட்டையின் குட்டைப் பத்தைகளில் எல்லாம் அக்காவைப் பார்த்ததாக ஊரார் பேசிக்கொண்டனர். அம்மன் கோயிலின் கருவறைக்குள்ளும், வைரவர் கோயிலின் சூலத்திலும் குருதிக்கறை படிந்த துணித் துண்டுகள் தொங்கத் தொடங்கியதும் அதன் பின்னர்தான். அதை அச்சத்தின் குறியீடாக்கி செம்பகமாச்சி ‘இது மூதன்னை வெளிக்கிருக்கும் காலம்’ எனச் சொன்னார். நிலம் வெளுக்கமுன்னர் அக்காவீட்டு முற்றத்தைக் கூட்டுவதையும், நித்தியகல்யாணிப் பூக்களை கொய்வதையும் படிக்க வேளைக்கு எழும்பும் நாட்களில் பார்த்திருக்கிறேன். நிலம் வெளுக்கத் தொடங்கியதும் அக்கா குசினிக்குள் நுழைந்து உள்பக்கமாகப் பூட்டிக் கொள்வார். இரண்டு நாட்களாக வீடு திரும்பியிருக்காத அக்கா திரும்பிவந்தபோது அவளிடமிருந்து நீரின் பாசிவாசனை வந்தது. அவர் கையில் செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த வாக்கிடோக்கி ஒன்றையும் மறைத்துக் கொண்டுவந்திருந்தார். அக்கா தொலைந்து போனதை முற்றம் கூட்டாமல் இருப்பதையும், கொய்யப்படாத நித்திய்கல்யானிப் பூ வாடி உதிர்வதையும் வைத்தே நாங்கள் அறிந்து கொண்டோம். மணியம்மாமா குட்டியப்புலம் செம்பாட்டுத்தறையைத் தாண்டி பலாலிப்பக்கமாக பத்தைகளை விலத்தி விரிந்த முடி காற்றில் பறக்க அக்கா போவதைப் பார்த்திருந்ததாக் பலகாலம் களித்து என்னிடம் சொன்னார். அப்போது அக்கா பலரின் நினவுகளிலிருந்தும் அழிந்துபோயிருந்தார். என்னிடம் வாக்கிடோக்கியிருந்து வரும் குரல்களளைக் கேட்டபடி அதன் முன்னால் தன்னிரு கால்களயும் விரித்து அமர்ந்திருக்கும் வாடல் உருவமாகவே மிஞ்சியிருந்தார்.

***

தாக்குதலிற்குத் தொடக்கக் கட்டளையிடும் தளபதியின் குரலைக் கேட்கும் நாட்களில், வாக்கிடோக்கியின் முன்னால் தன்னிரு கால்களையும் விரித்து புழையில் விரல்களை நுழைத்து மைதூனம் செய்யும் வேட்கை துப்பாக்கிப் படையை நெஞ்சிற்கு நேர எதிர்கொண்ட அன்றும் அக்காவிற்கு அரூபமாய் எழுந்தது. அக்காவின் மைதுனம் செய்யும் கைகள் சந்திவேம்பின் தாழ்ந்தகிளைகளில் கிழித்த சாரத்துணியால் மடக்கிக் கட்டப்பட்டிருந்தது. வற்றியுலர்ந்த தேகத்தின் எலும்புகளில் முழு நீளக் கத்தரிப்பூ நிற சீத்தைத் சட்டை படிந்துபோயிருந்தது. நிமிர்ந்ததலையில் அடர்த்தியான செம்படை மயிர் முகத்தில் பிரியாகப் படர்ந்திருந்தது. விரிந்த கால்களின் தளர்வான விரல்கள் நிலத்தில் கோடுகளாக இழுபட்டன. உச்சியில் வெய்யில், உக்கிரமாக எரித்த கோடையின் தகிப்பில் ஊரே முச்சந்தியில் கூடியிருந்தது. அச்சமும், கிளர்வும் உச்சியில் எரிக்கும் வெய்யிலை இன்னும் உக்கிரமாக்கியது. பின்னிருக்கைகளில் ஆயுதம் தாங்கிய மோட்டார் சைக்கிள்கள் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வீட்டையொட்டி சரிந்துகிடந்த கல்லில் அப்பா அமர்ந்திருந்தார். அவருடைய காலின் கெண்டைத்தசை துடித்துக் கொண்டிருந்தது. ஆளுயரமான பூண் போட்ட கொட்டன் தடி அவரருகில் வேலியில் சாய்ந்துகிடந்தது. அதன் பழமையின் வழுவழுப்பில் வெய்யில் எண்னைபோல வழிந்தது. கிணற்றடி வேலிகளில் பெண்களின் அடுப்புக் கரிபடிந்த முகங்கள் இருளடைந்து கிடந்தன. கிட்டினன், ஒற்றைக் காலை நிலத்தில் ஊன்றியபடி சைக்கிளில் சரிந்து நின்றார். கரியலில் கட்டப்பட்டிருந்த செதில்கள் உதிரும் மர மீன் பெட்டி சரிந்து அதிலிருந்து சிவந்த நீர்க் கோடுகள் ஒழுகியபடியிருந்தன. சுப்பு வெற்றிலையை மென்ற வாயைத் தூக்கி கிரவல் வீதியில் எட்டித் உமிழ்ந்தார். வெள்ளைச்சட்டை சிறுவர்கள் கிணற்றடி வேலியை ஒட்டிக் கிடந்த நீண்ட சீமெந்துக் குந்தில் நெருக்கி அமர்ந்திருந்தனர். செம்பகமாச்சி நெடுநாட்களுக்கு முந்திய வைரவர் வேள்வியை குருதிப் பிசுபிசுப்பில் நினைவு கூர்ந்தார். பண்டா பேக்கரியின் கடைசி எச்சமாக ஊரில் மிஞ்சியிருக்கும், வலதுகை முடமாகிப்போன சுதுபுஞ்சே மேவாயைத்தடவியபடி, குந்தியிருக்க தோதான இடம் தேடினார். விமலா அன்ரி வீட்டோடு தங்கிவிட்ட ‘கூர்க்காஸ்’ ரணாசிங் தன்னுடைய அழுக்குப்படிந்த பச்சைநிற ‘டர்பன்’ துணியை தலையிலிருந்து அவிழ்த்து, கைகளில் பந்தமாகச் சுற்றினார். அறுக்கப்படாத நீளக் கூந்தல் வெள்ளை முதுகில் கறுப்பு அருவியய் சரிந்து இறங்கியது. முதுகின் ஓரமாக, வலது தோற்பட்டைக்கு மேலாக, நெடுநாளாக ஆறத வெட்டுக்காயம் சிவந்து, வாய்பிளந்தபடி வெய்யிலில் காய்ந்தது. காயத்தைச் சுற்றி செதில்களாய் சீழ் இறுக்கிக் கிடந்தது.

அக்கா பிரி, பிரியாக முகத்தில் படர்ந்திருக்கும் மயிரை விலத்தி வீதியைப் பார்த்தாள். போராளி மிகவும் பழைய மெடலான சி-ஸட் 75 பிஸ்ட்ரலின் விசையை இழுத்துச் சரிபார்ப்பது கலங்கலாகத் தெரிந்தது. போரளிகளும், துவக்குகளும் தூரத்திலிருப்பது போல தடித்த திரையொன்று அக்காவின் கண்களுக்கு அருகில் கலங்கலாக அசைந்தது. செத்தல் மிளகாய் வரும் சாக்கினால் முகத்தை மறைத்து கழுத்தில் சனல்கயிறால் கழுத்தில் சுருக்கிட்டிருந்த போராளியின் கண்கள் சிறிய துளைகளின் ஊடே அக்காவை ஊடுருவிப் பார்த்தது. மிளகாய்ச்சாக்கின் துளை அவனுடைய முகத்தில் சுருஙகிக் கிடந்தது. சுருக்கை இழுத்து சரி செய்த போராளி துப்பாக்கியைத் வான் நோக்கி தூக்கி அமைதியாக இருக்கும் படி விரல்களால் ஊராரைப்பார்த்ச் சைகை செய்தான். கூட்டத்தில் கடும் இரைச்சலும், கத்தலும் அலையாய் எழுந்தது. ’வெடிக்காத துவக்குக்கு ஆரும் பயப்பிட மாட்டினம்’ என்றாள் அக்கா. செருப்புக்கால்களை தரையில் ஓங்கிக் உதைத்தபடி வான் நோக்கி இரண்டு முறை சுட்டான். சனங்களின் இரைச்சல் இன்னும் அதிகமாகியது. போராளியின் துவக்கு அக்காவின் நெஞ்சிற்கு நேராயிருந்து அவளுடைய தலையைக் குறிபார்த்தது. சிறிய தாளில் கவனமாக எழுதப்பட்டிருந்த சொற்களை அழுத்தம் திருத்தமாக வெள்ளைச் சட்டை சிறுவன் வாசித்தபடியிருந்தான். ஊரின் இரைச்சலையும் விலத்தி மிக கூர்மையாக கேட்டபடியிருந்தது அவனது குரல். அக்கா உதட்டைச் சுழித்துச் சிரித்தாள் வெண்மையான பற்கள் அழகாக இருந்தன. சீத்தைத் துணி காற்றில் அசைந்தது. துவக்கின் விசை இழுபடும் சத்தம் இரைச்சலிலும், வெள்ளைச் சட்டை சிறுவனின் குரலிலூடும் துல்லியமான ஓசையாக் கேட்டது. அக்கா ‘இது இனி ஒருக்காலும் வெடிக்காத துவக்கு என்றாள்’ அவளுடைய கண்கள் துவக்கின் முனையை ஊடுருவிப்பார்த்தப்டியிருந்தது. துவக்கினுள் சுருள் விசை உடைந்த சத்தம் கேட்டது. வெள்ளைச் சட்டை சிறுவன் தாளிலிருந்து கண்களைத் தூக்கி துவக்கைப் பார்த்தான் அது இனி ஒரு போதும் வெடிக்கவே வெடிக்காது என்பது தெழிவாக அவனால் உணரகூடியதாக இருந்தது. அப்பா வேலியில் சாத்திவைக்கப்படிருந்த கொட்டன் தடியை எடுத்துப் போராளியிடம் நீட்டினார். ‘ஒரடீல கனக்க நெத்திச் சில்லுகளை தேங்காய் சிரட்டை மாரி உடைச்சிருக்கு உவளுக்கு ஒரு அடி போதும் சீவன் போய்டும்’ என்றார். கிட்டினன் மீன் பெட்டியில் கையைவிட்டு முனை ஒடுங்கிய கத்தியை எடுத்து மர மீன் பெட்டியின் மீது வைத்தார். செம்பகமாச்சி துவக்கு வெடிக்காதது அம்மளாச்சியின் அருள் என்றார். அம்மளாச்சி தன் கண்களின் முன்னால் இரத்தப்பலியை எடுக்க ஒருநாளும் விடமாட்டாள் என்று நிலத்தில் அடித்துச் சத்தியமும் செய்தார். இனி ஒருபோதும் மூதன்னை அம்மளாச்சி ஊருக்கு திரும்ப வரமாட்டாள் என்றும், அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது என்றபடி எழுந்து சென்று அக்கா கட்டப்பட்டிருந்த சந்திவேம்பின் வேரில் தொட்டு ‘எண்ட அம்மளாச்சி’ என்று கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

சுருள் வில் உடைந்த துப்பாக்கியை அவர்களால் சரி செய்யமுடியவில்ல. அதை அவர்கள் தூக்கி வீசிடாமல் மிகவும் பத்திரமாக செய்தித்தாளில் பொதிந்துவைத்தனர். அக்காவுக்கான மாற்றித் தண்டனை வகைகள் பலராலும் உரத்துச் சொல்லப்பட்டது. போராளிகளால் அந்த தண்டனை முறைகள் மூர்க்கமாகவும், உடனடியாகவும் நிராகரிக்கப்பட்டது மட்டுமில்லாது அவை காட்டுமிராண்டித்தனமான முறமைகள் எனவும், மீறி முயற்சிப்பவர்கள் பாரிய விழைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கவும்பட்டனர். ‘துவக்குகளைத் விட துல்லியமான கருவி இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை புதுத் துவக்கு நாளைக்கு வந்துவிடும் ஒரு நாளில் இந்த அழுகிய உடலுக்கு ஒன்றும் நடந்துவிடது’ என்றான் மிளகாய்ச்சாக்கைப் போர்த்தியிருந்த போராளி. அக்காவின் தண்டனை அடுத்த நாளிற்கு தள்ளிவைக்கப் பட்டிப்பதை அறிவித்த போராளிகள் மோட்டார் சைக்கிள்களில் ஏறிச் சென்றனர். ஊரார் சந்திவேம்பை விட்டுக் கலைந்து சென்ற போது இருளத் தொடங்கியிருந்தது. புதிய கைத்துவக்கை பெரிய காம்பிலிருந்து எடுத்துவர இருவர் மோட்டார் சைக்கிளில் உடனடியாக விரைந்து சென்றார்கள். விரந்து சென்றவர்கள் பின் ஒரு போதும் ஊர் திரும்பிவரவில்லை. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் நெடுநாட்களின் பின்னர் ஊர்ச் சுடலையின் தூர்ந்த கிணற்றை தூர்வாரிய நாளில் ஊராரால் உக்கிய இரும்பாக கண்டெடுக்கப்பட்டது. அதில் கட்டப்படிருந்த வெளிச் சிலுவையை வைத்து மொறிஸ் அண்ணன் தன்னுடைய அப்பாவின் மோட்டார் சைக்கிள் தான் அது என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் ஊராரின் நினைவுகளில் இருந்து துப்பாக்கி எடுத்து வர விரைந்து சென்றவர்களின் முகங்கள் முழுவதுமாக அழிந்து போயிருந்தது.

அக்கா அந்தக் குளிர் இரவில் வேம்பின் கிளைகளில் கட்டப்படிருந்த கைகளில் முழுப்பாரத்தையும் கொடுத்து ஆழ்ந்து தூங்கிப் போயிருந்ததைத் தான் பின் இரவில் மூத்திரம் பெய்ய வெளியில் வந்தபோது பார்த்ததாக சுதுபுஞ்சே பஸ்ஸிற்குக் காத்திருந்த ஒரு மழைநாளில் நாளில் கொடிகாமத்தில் வைத்து என்னிடம் சொன்னான். நான் திரும்ப ஊருக்கு போகப்போவதாக அவனிடம் சொன்னேன். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட ஊருக்கு தான் ஒருபோதும் திரும்பிவரப்போவதிலை என்றும், வன்னிப்பக்கமாகப் போகப்போவதாகவும் சொன்னான். அதன் பின் ஒருநாளும் அவன் ஊருக்குத் திரும்பியிருக்கவில்லை. நான் அன்றைய பின்னிரவில் யன்னலூடே பார்த்த போது அப்பா தூக்கம் வராமல் கயிற்றுக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார். அவருடைய கொட்டன் தடி அவரருகில் கிடந்தது. அக்காவின் உடல் எடையற்று காற்றில் மிதப்பது போல தூரத்தில் தெரிந்தது. நான் அதிகாலையில் துப்பாக்கிவேட்டுக்கள் கேட்டுக் கண் விழித்த போது மேற்கில் பலாலிப் பக்கமாக வெடிச்சத்தங்களும், ஷெல்லும் ஓயாமல் கேட்ட படியிருந்தது. கூர்ந்து கேட்ட போது சில துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டன. அம்மா உரப்பையில் சாமான்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தார். எட்டி யன்னலூடு வெளிவாசலைத் தாண்டி அக்காவைப் பார்த்தேன். சந்திவேம்பின் கீழ் தன்னிரு கைகளிலும் அக்கா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

செம்பகமாச்சி தானொருபோதும் ஊரைவிட்டு வரப்போவதில்லை என்றும், உக்கி மண்ணோடு மண்ணாகப் போனாலும் அம்மளாச்சியின் நிலத்திலேயே இருக்கப்போவதாகவும் உறுதியான குரலில் சொன்னார். குட்டியப்புலம் தோட்டாத்திற்கு நீர் இறைக்கச் சென்ற மான்மணியம் மாமா ‘பெடியள் ரவோடை ரவாகவே விற்றோ பண்ணிப் போய்ட்டங்கள் ஒரு நாயளையும் கானல்ல அவங்களுக்கு தெரியும் ஆமி வெளிக்கிடப் போறங்கள் எண்டது துலைஞ்சுபோவார்’ என்று அழுவாரைப் போல சொன்னார். ‘ஆமி அரைமணத்தியழம் பிந்தி வெளிக்கிட்டிருந்தாங்கள் எண்டா செம்பாட்டுத் தறைக்கு தண்ணி கட்டி முடிச்சிருப்பன்’ என்று அங்கலாய்த்தார். நான் அப்பாவின் அகலக்கரியல் சைக்கிளில் இருந்தபடி சந்திவேம்பைக் கடந்து சென்ற போது அக்கா கைகளில் மிண்டு கொடுத்துத் தொங்கியபடி வீதியை வேடிக்கை பார்த்தபடியிருந்தார்.

நாங்கள் தார்வீதியைக் கடந்து மட்டொழுங்கை முடிந்து சுடலை தாண்டிப் போகும் போது ஊரைத் திரும்பிப் பார்த்தேன் அக்காவின் மெலிந்த சீத்தைத் துணிபோர்த்திய உடல் கற்றில் அப்படியே எழும்பி முகில்களோடு முகில்களாக மிதந்து முழுநிலவு போல எங்களுடனே வந்தது. அக்காவின் புனிதவுடல் காற்றில் எழுந்து வான்நோக்கிச் சென்ற அந்த நாள் அக்டோபர் ஆயிரத்தி தொல்லாயிரத்தி தொன்னூறு என்று சொன்னால், நீ அதை மறுத்து இல்லை அது ஆயிரத்தி தொளாயிரத்தித் தொன்னூற்றைந்து அக்டோபர்  என்று சொல்லக் கூடும்.

***

அப்பாவின் வெள்ளிப் பூன் போட்ட கொட்டன் தடி : கொட்டன் தடி பலரின் நெற்றிச் சில்லுகளை உடைத்ததை அப்பா கதை கதையாகச் சொல்லுவார். ஊரின் சித்திர வாத்தியாரான ‘வைட் அண்ட் வைட்’ ரகுமாஸ்டர் தலமையில் அம்மன் கோயில் நுழைவுப்போராட்டம் நடந்தபோது நைனார் பெரியமணியத்தின் பக்கத்தில் அப்பாதான் முக்கிய கையாக இருந்தாவராம். கோயிலின் முன்வாசல் மரக்கதவுகளை இழுத்துச் சாத்தி இரும்புச்சங்கிலியால் கட்டிவிட்டு. இரவு பகலாகத் தனி ஆளாக கதவின் ஓரமாக கொட்டன் தடியுடன் குந்தியிருந்தாராம். அம்மா பெரியமணியம் வீட்டிலிருந்து இரண்டுவேளைச் சாப்பாட்டையும் கோயில் வாசலிற்கே கொண்டு போய்க் கொடுப்பாராம். பூன் போட்ட கொட்டன் தடியால் அப்பா ரகுமாஸ்டருடைய நெற்றிச் சில்லைக் கோயில் வாசலில் வைத்துப் பிளந்தாராம். மாஸ்ரரின் ‘வைட் அண்ட் வைட்’ முழுச் சிவப்பாக ரத்தம் ஊறித் தொப்பலாக நனைந்த போதும் மாஸ்டர் ஒரு அடிகூட பின்னுக்கு எடுத்து வைக்கவில்லையாம். மாஸ்ரருடையதுதுதான் அப்பாவின் கொட்டன் தடி கடைசியாகப் பிளந்த நெற்றிச் சில்லு என்றார் அம்மா. அப்பாவிடம் கேட்டால் ‘மூத்திரம் பெய்யப் போன இடைவெளியிலை கோயிலுக்கை போய்ட்டாங்கள் திருட்டு நாய்கள்’ என்பார். பின்னொருநாளில் வெள்ள வாய்க்காலை ஒட்டி கிடந்த L வடிவ பங்கரில் தேங்கியிருந்த வெள்ளத்தில் அப்பாவைச் சுட்டுப் போட்டிருந்த அன்றும் வெள்ளிப் பூண் போட்ட கொட்டன் தடியும் அவரின் பக்கத்தில் இருந்தது. பலூன் போல ஊதி பெருத்திருந்த உடலை அவசரமாகச் சுடலையில் எரித்த போது அந்தத் தூமைக் கொட்டனையும் அவருடன் சேர்த்து எரிக்க சொல்லி அம்மா இரைந்து அழுதார். காடாற்ற வேண்டி அப்பாவின் சாம்பலைக் கிளறியபோது கொட்டன் தடியின் வெள்ளிப் பூண் தீயில் எரியாமல் பளபளப்புடன் மிஞ்சியிருந்தது.

L வடிவ பங்கர் : தண்டனை பெற்ற போராளியால் நேர்த்தியாக வெட்டப்பட்ட பங்கருள் தொடக்கத்தில் குறை பீடி துண்டுகளும், சாராயப் போத்தல்களுமே இறைந்து கிடந்தன. அடியில் கிழிந்த உரம் வந்த உரப்பையும் கிடந்தது. விமலா அன்ரி வீட்டுக் குப்பைகளை அதனுள் கொட்டுவதையும் சில தடவை பார்த்திருக்கிறேன். அடுத்து வந்த மாரிகாலத்தில் வெள்ள நீரால் நிரம்பி வழிந்த பங்கரினுள் வாற்பேத்தைகளும், தவளைக் குஞ்சுகளும் முதலில் வளார்ந்தன. கோடையில் அந்த வெள்ளநீர் பங்கரின் அடியில் சிறு குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. மிக உக்கிரமான கோடை நாட்களிலும் நீர்ததும்பும் மாட்டின் கண்கள் போல நீர் வற்றாமல் ஈரலிப்பாக இருந்தது. அப்பாவினது உட்பட ஆறு உடல்கள் அந்தக் குட்டை நீரில் அழுகி மிதந்திருக்கிறது. ஊர், பெயர் தெரியாத பெண்னின் நிர்வாண உடல் நெடுநாட்களுக்கு கவனிப்பாரற்றுக் கிடந்தது. அப்பாதான் உருக்குலைந்த அந்தப் பெண்னின் உடலை தனியாளாக தேசிமரத்தின் கீழொரு ஊரடங்கு இரவிற் புதைத்தார். அந்த பங்கர் ஊரின் வீ.சிக்காணியில் இருப்பதால் யாராலும் தூர்த்திட முடியவில்லை. இப்போதும் வற்றாத நீரின் அடியாழ ஈரலிப்புடன், பச்சை மண்வாசனையுடன் படுகுழிபோல அங்கே இருப்பதை ஊர்பக்கம் போனால் வெள்ளவாய்க்காளின் முடிவில் காணலாம்.

பச்சை வாக்கிடோக்கி : ஓரங்களில் உடைந்து பச்சை நூல் நேர்த்தியாக வரியப்பட்டிருந்த பச்சை வாக்கிடோக்கி கனமானதாக இருந்தது. அதன் சிறிய வட்டமான கம்பி வலை தூசிபடிந்து எண்ணைப் பிசுபிசுபில் இருந்தது. அதன் ஒலி அச்சமூட்டுவதா இருந்தது. அக்கா அதில் வரும் ஆண் குரல்களை ஆர்வமாகக் கேட்டபடியிருப்பார். பெண்குரல்கள் வரும் போது அவசரமாக அதன் சிறு முனையைத் திருப்பி விடுவார். வாக்கிடோக்கி இருண்ட குசினியின் ஒட்டறை படிந்த புகைபோக்கிப் பொந்திலும், பழைய காய்கறி போடும் கூடையிலும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் ஊரின் தளபதி குசினிக் கதவை உடைத்துத் திறந்து அக்காவைக் கைதுசெய்த போது ஊரின் முதலாவது வாக்கிடோக்கி வைத்திருந்த பெண் என்ற பெயர் அக்காவிற்கு வந்தது. அந்தப் பச்சை நூல்வரிந்த வாக்கி-டோக்கியை அக்கவிற்கு எதிரான முக்கிய சாட்சியாக ஊரின் முன் வைத்த போது அது ஒருநாளும் வேலை செய்யாத துருப்பிடித்த வாக்கிடோக்கி என்றாள் அக்கா. அதை அப்பாவும், தளபதியும், ஊராரும் யாருமே நம்பவில்லை.

(கப்ரியல் கர்சியா மார்க்கோஸ் நினைவுகளுக்கு..)

Scroll to Top