காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

கபாடபுரத்தில் வெளிவந்த தமிழ்நதியின் சிறுகதை காத்திருப்பு வாசித்தேன். அதன் மொழி, சொல் முறை குறித்து கவனம் செலுத்தவில்லை எனிலும் அதன் உள்ளடக்கம் குறித்து உரையாட முடியும். நாம் எவ்வளவு தூரம் ஒடுங்கிய சிந்தனையும், புரிதலுமாக இந்த முப்பது வருட யுத்தத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறித்த உள்ளடக்கமது. இந்த முப்பதுவருடப் போர் அனுபவங்களிலிருந்து எதையும் அறிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது. இன்று போர் முடிந்து இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் இலங்கையர்களாகி விட்டோம். இதன் பின்னர் இந்த விடுதலைப் போரட்டத்தை எப்படிப் பார்க்கிறோம், புரிந்து கொள்கிறோம். விடுதலைப் போராட்டத்தினுளிருந்த சனநாயக மறுப்பையும், மதரீதியான அர்ப்பணிப்பையும், சகிப்புத் தன்மையின்மையும், அதிகார வன்முறையையும், அதன் படுகொலையரசியலையும் எப்படி விளங்கிக் கொள்கிறோம். யுத்தத்தில் பலியிடப்பட்ட உடல்களை இன்று நாம் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறோம்.

நூறு ஆண்டுகளின் முன்னர் பிறந்து இந்திய- பாகிஸ்தான் பிரிவினைக்காலக்  கலவரங்களில் எரித்தும், வன்புணர்ந்தும், வெட்டியும் கொல்லப்பட்ட உடல்களின் மத/கலாச்சார அடையாளங்களை அழித்து விட்டு உரையாடிய சாதத் ஹசன் மண்டோவின் கதைகள் போல  ஏன் நமக்கு கதை சொல்ல வாய்க்கவில்லை?  எந்த உடலினதும், எந்த லட்சியத்திற்காகவும் பலியிடப்பட்ட  உடல்களின் இழப்பை, இழப்பாக மட்டுமே உணர்ந்து கதை சொன்ன மாண்டோவிடமிருந்த விசாலமான அறிவின் புரிதல் ஏன்,  இனவாதத்தால் எழுச்சியூட்டப்பட்ட, இன்னும் அப்படியே தகவமைக்கப்பட்ட நம்மிடம் இல்லாமல் போனது. சிங்களப் பேரினவாதத்தின் எதிர்வினையாக உருவாகியதாக காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் தமிழடிப்படைவாதம் இஸ்லாமியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததை எப்படி விளக்குவது/புரிந்துகொள்வது?  போர்ப் பின் சூழலிலும் இவற்றின் போதமைகள் குறித்த உடையாடல் நம்மிடம் வலிமையாக இல்லை திரும்பவும்  இனவாதச் சகதிக்குள்ளேயே அழுந்திக்கிடக்கும் மனநிலையே வாய்த்திருக்கிறது.

தமிழ்நதியும்  இந்த கடக்கமுடியாத கனத்த தமிழ்மனதினுடே கதைகளைச் சொல்கிறார். அவை எவ்வளவு தூரம் போராட்டம்/ போர் குறித்த அபத்தமான புரிதலுடன் இருக்கிறது என்பதை  காத்திருப்பு கதையை வாசிப்பதனூடே புரிந்து கொள்ளலாம். இராணுவதால் 24 வருடங்கள் முன்னர் கைது செய்யப்பட்டு காணமலாக்கப்பாட மகன் கோகுலனின் நினைவிலும் தேடுதலுடனும் வாழும் தாயின் கதைதான் காத்திருப்பு. ஊன், உறக்கமின்றி காணமலாக்கப்பட்ட கோகுலனினை தேடி இராணுவமுகாற்கும், கண்டனப் போராட்டங்களுக்குமாக அலைகழிக்கபடும் தாய்க்கு 24 வருடங்களின் பின்னர் மகன் குறித்த  உண்மையை அறிகிறார். மகன் இராணுவத்தால் காணமலாக்கப்படவில்லை, அவன் இரணுவத்தால் கைது செய்து விடுவிக்கப்பட்டவுடன்  நேரகச் சென்று புலிகளில் சேர்ந்து (வீரச்?) சாவடைகிறான் என்ற உண்மை தெரியவருகிறது. 24 வருடங்களாக  மகன் உயிரோடு இருக்கும் நம்பிக்கையில் அலைந்து திரிந்த தாய் இந்தத் தெரியவரும் உண்மைக்கு  இப்போது – அர்த்தமற்ற போர் முடிந்த போர்-பின் சூழலில் – எப்படி எதிர்வினையாற்றுவார். தாய்க்கு இராணுவத்தால் மகன் காணாமல் செய்யப்படுவதற்கும், போராட்டத்தில் இணைந்து சாவடைந்து போவதற்குமான தர்க நியாயங்களை பகுத்தறியும் மனநிலையா வாய்க்கும்? புனிதமாகப்பட்ட வீரவுடலின் புளகாங்கிதமும், பெருமையும்  போர்ப் பின் சூழலில் என்னவாக இருக்கிறது? தாய்  சாவடைந்த மகனையிட்டுக் கவலை கொள்வாரா இல்லைப் புளகாங்கிதம் அடைவாரா? தாய்க்கு மகனின் இழப்பு இழப்புத் தானே?

மகன் இராணுவத்தால் காணமலாக்கப்படுவதற்கும், போரட்டத்தில் இணைந்து சாவடைவதற்குமிடையான இழப்பின் வேறுபாடு போர்-பின் சூழலில் என்னவாக இருக்கிறது? இரண்டும் இல்லாமலாக்கப்படும் உடலின் வெறுமைதானே?

தமிழ்நதியோ புலியை முறத்தால் விரட்டிய, வீரத் திலகமிட்டுப் போரிற்கு அனுப்பிய வீரத்தாயின் மனநிலையை இயல்பான, மகனைத்தேடி ஊன் உறக்கமில்லாமல் 24 வருடங்களாக அலைந்து திரிந்த தாயின்மீது போலியாக ஏற்றிவைக்கும் கயமையைத் தான் செய்கிறார். இவ்விடத்தில் கதை போலியானதாகவும், அர்த்தமற்றதாகவும் மாறிவிடுகிறது. இயல்பான தாய்க்கு பெருமிதமும், புளகாங்கிதமுமாக அவர் 24 வருடங்களும் ஊன் இன்றியிருந்த பாசி பெரும் பசியாகப் பசிக்கிறது. அவர் புட்டும் முட்டைப் பொரியலையும் தீரா வேட்கயோடு, பல வருடங்களின் பின்னர் மகிழ்ச்சியோடு சப்பிடுவதாகக் கதையை முடிக்கிறார். இதுதான் அந்தத் தாயின் 24 வருடங்களின் காத்திருப்பும், விருப்பமுமா?

சுயந்தனுக்கான பதில் – 

தனி நாட்டுக் கோரிக்கை என்பது ஜனநாயகமும், சமத்துவமும் தற்சூழலில் சாத்தியமுமற்ற கோரிக்கையாகவே பார்க்கிறேன். இதை போராட்ட ஆரம்ப காலங்களில் குறிப்பாக முறிந்த பனையில் இது நன்றாகவே வலியுறுத்தபட்டிருக்கும். மற்றது புலிகளால் தமிழர்பரப்பை சரியக முன்வைக்க முடியவில்லை அவர்கள் வெறும் ஒரு மினி எதிர் ராணுவ அமைப்பாக மட்டுமே இயங்கினார்கள் என்பதும் என்புரிதல்.

முஸ்லீம் வெளியேற்றத்தின் அந்த மன்னிப்பின் தசாப்தம் குறித்து உங்கள் பதில் நகைப்பிற்குரியது. துன்பியல் நிகழ்வு என்று கடந்து போகும் விடையமா அது ? ஒரு மினி அரசாங்கத்தையே வழிநடத்திய புலிகள் முஸ்லீம் மீள் குடியேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் என்ன மாதிரியான செயற்திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தினார்கள்? எத்தனை வீதமான முஸ்லீம் மக்கள் திரும்ப அந்த மன்னிப்பின் பின் மீள் குடியேறினார்கள் ? அந்த மன்னிப்பும் எந்தச் சந்தர்பத்தில் கோரப்பட்டது. சமாதனப் பேச்சு வார்த்தையில் முஸ்லீம்கள் தனித்தரப்பு கோரியபோது அவர்களையும் தமிழர்களாக அங்கீகரித்து தாமே அவர்களின் பிரதிநிதித்துவர்கள் என்று காட்ட வேண்டிக் கேட்கப்பட்ட மன்னிப்பது என்பது தெரிந்த உண்மை. அதுவுமில்லாம அந்த மன்னிப்பின் பின்னும்  படுகொலைகள் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவரா நீங்கள் ?

தமிழ்நதியின் கதை வாசித்தீர்களா ? மாண்டே வை நான் அங்கு சுட்டியிருப்பது அவர் உடலின் / உடலின் இழப்பை எப்படி நோக்கினார் ஆனால் நாம் தேசியம் / சாதியம் போன்ற வற்றால் பீடிக்கபட்டிருந்து எப்படி அந்த உடலின் இழப்பைக் கொண்டாடுறோம் அல்லது கொண்டாடுவதாக போலியாக உருவகித்துக் கொள்கிறோம் என்பதிலுள்ள அபத்தத்தைச் சுட்டவே. உடல்களின் இழப்பையும், கும்பல் மனநிலையின் நியாயபடுத்தும் வன்முறையுணர்வையும் தனிமனித அகத்திலிருந்து உக்கிரமாக எழுதிய படைப்பாளி என் வாசிப்புபுரிதலில் மாண்டோ தான். தமிழ்நதியின் கதையில் 24 வருடக் காத்திருப்பின் முடிவில் – அதவது போர் பின் சூழலில் – மகனின் சாவை அறியும் தாய்க்கு தனது போலியான அடிப்படைவாத தமிழ் வீரத்தாயின் மனநிலையை தமிழ்நதி கொடுக்கிறார் அந்த இடத்தில் கதை புரண்டுவிடுகிறது. மற்றும்படி அந்தக் கதையின் மொழியோ, சொல்முறையும் மிகவும் பின்தங்கியது பொருட்படுத்தி வாசிக்க வேண்டியதும் அல்ல. ஆனால் அதன் உள்ளடக்கத்தில் உருவாகிவந்திருந்த போலித் தமிழ்மனநிலையின் அபத்தத்தைச் சுட்டவே அந்தக் குறிப்பை எழுதினேன். நாம் ஒடுக்கப்படும் இனமாக இருக்கும் அதேவேளை எம்மிடம்மிருக்கும் அதிகார அலகுகளை / ஆயுதங்களைக் கொண்டு ஒடுக்கும் இனமாகவும் இருக்கிறோம் என்ற அந்த மனநிலையின் வெளிப்பாடகவே ஒரு படைப்பாளி இருக்கமுடியும். தமிழ்நதி, குணா கவியழகனை நிராகரிப்புஅதும் இதனால்தான். தங்களுக்கு (தமிழ்மனதிற்கு) நிகழ்ந்ததாக நம்பும் படுகொலைகளையும், வன்முறையையும் எழுதுவார்கள் ஆனால் தம்மால் நிகழ்த்தபட்ட வன்முறைகளையும் படுகொலையையும் குறித்து கனத்த அமைதிகாப்பார்கள். அல்லது அதை மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துபோய்விடுவதை தம் படைப்புகளில் செய்வார்கள்.   

மற்றது தமிழ்நதி, குணா கவியழகனை நான் நிராகரிப்பதும் – வாசிக்காமல் இருப்பதல்ல வாசித்து நிராகரிப்பது – இதனால் தான் அவர்கள் தங்களுக்கு (தமிழர்களுக்கு) நிகழ்த்தபட்டதாக கருதும் படுகொலைகள், வன்முறை, ஒடுக்குமுறையை திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள் இது தவறோ, நிராகரிப்பிற்குரியதோ அல்ல ஆனால் தங்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலை, சனநாயகமறுப்பு, மதரீதியான அர்பணிப்பு, அரசியல் புரிதலின்மை, சகிபுத்தன்மையின்மை குறித்து கனத்த அமைதியே காப்பார்கள் அல்லது அவற்றை ஒரு மன்னிப்பினூடு கடந்துவிட முயல்வார்கள். அவர்கள் முஸ்லீம்களிடம் கோரும் அந்த ஒற்றை வார்த்தை மன்னிப்பை நாளை இலங்கை ராணுவமோ, அரசோ கோரினால் கொடுத்துவிடுவார்களா?

தமிழ்நதியின் நாவல், கதைகள் இந்தியாவின் பொதுப்புத்தி வாசகர்களுக்கானவை. அதில் ஈழச் சிக்கலின் ஆழமும், பன்முகத்தன்மையும் வெளிப்படுவதில்லை. 80 பதுகளின் பொது அரசியல் உரையாடலாக இருந்த போரட்ட நியாங்களை இன்னும் இந்தியர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார். இதன் தேவை தற் சூழலில் என்ன? போராட்டமும், அதன் தேவையும் ஒடுக்குமுறையும் சலிப்புற உரையாடப்பட்டாகிவிட்டது. பாத்தீனியம் நாவல் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். புலிகள் தரப்பை எழுதுவதாகச் சொல்லும் தமிழ்நதியால் கூட அவர்களின் சிக்கலையும், வன்முறையின் பன்முகதன்மையையும், நடமுறை யதார்த்தத்தையுமே சரியாக முன்வைக்க முடியவில்ல. கதைகளில் ரொமாண்டிசப்படுத்தி உணர்சியூட்டச் செய்கிறார். இந்திய இராணுவந்தின் கோர முகத்தின் உருமாற்ற முரண்  நாவலில் எங்கும் இல்லை. இப்படித்தான் அவரின் சிறுகதைகளும். நீங்கள் அவரின் சிறுகதைகளில் கண்டுகொள்ளும் உள் ஒளியையும், தரிசனத்தையும் எனக்கும் கூறினால் நானும் தான்யன் ஆவேன்.  குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு முக்கிய நாவல் பின்னால் அவர் எழுதியவை வடுக்களுக்கு பூசும் களிம்பு போன்றவை. அவை இரண்டு ராணுவங்களின் இடையில் சிக்கிய மக்கள் குறித்து ஒரு வர்த்தையேனும் பேச மறுப்பவை.

தோழர் இன்னொன்று இங்கே தமிழ் மனம் கேலிக்குரியதோ, அவமானத்துக்குரியதோ அல்ல ஆனால் அதன் அடிப்படைவாத மனநிலை என்பது கேள்விக்குரியதும், குற்றவுணர்வுக்கானதும். சாதிரிதியாக ஒடுக்கப்படும் தலித்கள் தங்களை தலித்களாக முன்வைது போராடுவதும், தலித் மனநிலையில் சிந்திப்பதும் விடுதலைக் கருத்தியல் ஆனால் வெள்ளாளர் ஒருவர் சாதியப் பெருமிதமும், சாதிய அடையாளத்துடனும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டால் அவமானத்துக்கும், கேள்விக்குமுரியது. அதுதான் தமிழ் அடிப்படைவாத மனநிலைக்கும் பொருந்தும். தமிழ்ப்பொது மனநிலை போலிப் பெருமிதங்களாலும் போலி நம்பிக்கைககளாலும் நிரம்பிகிடக்கிறது பிறரை வெறுக்கவும் ஒதுக்கவுமே செய்கிறது. இங்கே தமிழ் பொதுமனநிலை என்பதும் வெள்ளாள மனநிலையாலே மரமாத்துச் செய்யப்படுகிறது

 

Scroll to Top