“தடம்: ஈழத் தமிழர்கள் மத்தியில் தமிழகத் தமிழர்களிடம் உள்ளதைப் போலவே சாதி என்பது மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அது புலம்பெயர்ந்தோர் மத்தியிலும்கூட உயிர்த்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அ.முத்துலிங்கம்: உங்களுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒருபோதும் வெறியாக மாறியது இல்லை. புலம் பெயர்ந்தபோது சாதியும் புலம் பெயர்ந்தது. ஆனால் ஒரு தலைமுறை கடந்த நிலையில் சாதி வித்தியாசம் எங்காவது அபூர்வமாகவே தென்படுகிறது“
ஈழத்தில் சாதிய ‘வித்தியாசம்’ மட்டுமே இருக்கிறது, அது வெறியாக மாறிவிடவில்லை என்கிறார் அ.முத்துலிங்கம். ஈழத்தின் சாதி வெறி மிக வெளிப்படையானது; அதை நாம் வலிந்து நிறுவவேண்டியதில்லை. கே.டானியலின் நாவல்கள், நந்தினி சேவியரின் சிறுகதைகள், தெணியானின் படைப்புகள், என்.கே.ரகுநாதனின் ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ மற்றும் யோகரட்ணம் எழுதிய ‘தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ போன்ற பிரதிகளில் யாழ்ப்பாணச் சாதிய வெறி மிக வலிமையாகப் பதிவாகியுள்ளன. அவை நிணமும் சதையுமான உள்ளிருந்து ஒலித்த படைப்புக்குரல்கள். அதை உணர்ந்து கொள்ள விரும்பாத சாதி மனநிலை மிக நுட்பமாகத் தகவமைந்துள்ளது. இந்திய மனம் என்று அறியப்படும் ஒன்று முற்றிலும் சாதி வர்ணம் என்பதால் மட்டும் அமைந்தது1 என்பதைப் புரிந்துகொண்டால் சாதியத்தின் இருப்பையும், வெறியையும் நாம் புரிந்து கொள்ளலாம். ஈழத்தில் பலரும் சாதியம் குறித்து இப்படியான மேம்போக்கான கருத்துக்களைக் காவித்திரிபவர்களாகவே இருக்கிறார்கள். தங்கள் நம்பிக்கையைக் குலைக்கும், கலைத்துப் போடும் உண்மைகளை வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முயற்சிப்பதில்லை. தலித்தியம் குறித்து முன்வைக்கப்படும் கருத்துகளை, உரையாடல்களை ஒவ்வாமையுடன் கடந்து சொல்ல முயற்சிக்கிறார்கள் அல்லது ‘தலித்’ என்ற சொல்லை மட்டும் பிடித்து அது அந்நியச் சொல் எனத் தொங்குகிறார்கள். தலித்திய உரையாடல்கள் உள் முரண்பாடுகளைக் கூர்தீட்டும், பிளவுபடுத்தும் வேலை என்பவர்கள் தேசியத்திற்கு நேரெதிராகக் கற்பிதமும் செய்பவர்கள் வசதியாக ஒன்றைப் பேசுவதில்லை. யாழ்ப்பாணச் சிவில் சமூகம் என்பது பொதுச்சுடுகாடுகளோ, பொதுப்பள்ளிக்கூடங்களோ, பொது அதிபர் நியமனங்களோ, பொது வழிபாட்டிடங்களோ, பொது வேட்பாளார்களோ இல்லாத பிளவுண்ட சமூகங்களாகச் செயற்படுகிறது. அவர்களிடம் இப்படிச் சாதியாகப் பிளந்திருக்கும் சிவில் சமூகத்தின் வன்முறையற்ற பொது இணைப்பாக எதை முன்வைப்பதென்றால் அவர்களிடமிருந்து உடைக்கமுடியாத மெளனமே பதிலாகக் கிடைக்கிறது. அது தமிழ்மொழி என்பவர்களுக்கு இணைப்பு மொழியின் போதாமைகளை நம் சூழலில் சலிப்புற உரையாடப்பட்டிருக்கிறது. அவ்விணைப்புக்கூட இதுவரை வன்முறையால் மட்டுமே சாத்தியமாகியிருந்தது. பின்நவீனச் சூழலின் பன்மைத்துவத்தையும், மற்றமையின் இருப்பையும் உள்வாங்கினாலன்றி ஒன்றையொன்று வெட்டியும், இறுகிப் பிணைந்திருக்கும் நுண்ணதிகார அலகுகளைப் பட்டியலிட முடியாது. சாதிய நுண்ணொடுக்குதலுக்கு எதிராகப் பேசவும், செயற்படவும் முடியாது. சாதிய அதிகாரம் என்பது மிக வெளிப்படையானதும், நிச்சலனமானதும் ஆகும். அது தனியே ஒரு தளத்தில் மட்டும் செயற்படுவதுமில்லை.
ஈழத்தில் சாதியம் உள்ளுறைந்து கிடக்கும் அதிகார வெளியென்பது வெள்ளாளருக்கு மட்டுமானது. இங்குள்ள தலித் மக்களுக்குச் சிவில் சமூக வெளியெதிலும் துளியும் இடமிருப்பதில்லை. சாதி மனநிலையே பொது மனநிலையாக, ஆதிக்கத் தரப்பாக இருக்கிறது. 90களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த தலித்தெழுச்சி, தலித்திய விமர்சனமுறை, தலித்திய ஆய்வுகள், தலித்திய மதிப்பீடுகள் ஈழத்தில் முன்மொழியப்படவில்லை. தேசியத்தின் பெயரால் அவை அரசியல் நீக்கம் செய்யப்பட்டன. சாதியம் குறித்துப் பேசுவதும், உரையாடுவதும் தடைசெய்யப்பட்டன. தலித் விமர்சன முறையும் மதிப்பீடுகளும் முன்மொழியப்படாத இங்கு இன்னமும் யாழ் வெள்ளாள மதிப்பீடுகளும், நம்பிக்கைகளுமே சிவில் வெளியை அடைத்துக் கொள்கின்றன. அதற்கு மாற்றான தலித்துக்களின் பக்கம் இன்னும் வலிமையாக முன்வைக்கப்படவில்லை. ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளும், மதிப்பீடுகளும், மனநிலையும் தலித்தியக் கண்ணூடு ஒப்புநோக்கி ஆய்வுக்குட்படுத்தி வெள்ளாளச்சாதி உளவியலைக் கேள்விகேட்காததாலும், அவர்களின் மதிப்பீடுகளைக் கலைத்துப் போடாததாலும் வெள்ளாளத்தரப்பே வலிமையான தரப்பாக இருக்கிறது. சாதியத்தை மனநிலையாகப் புரிந்துகொண்டாலே அதன் நுண் ஒடுக்குதலையும்,அதிகாரச் செயற்பாட்டையும் நாம் அடையாளாம் காண முடியும். அதுவொரு தகர்க்கமுடியாத பேரிருப்பாக இன்னும் நம்முன் வியாபித்திருக்கிறது என்பதை உணரமுடியும். அதனொரு எளிய வெளிப்பாடே முத்துலிங்கத்தின் இந்தப் பதிலும். சரியாக, இங்கே அவர் அந்த வெள்ளாள உளவியலின் எச்சமாக மீந்திருக்கிறார்.
ஈழத்து இடதுசாரிகளும் சாதியத்தை ‘பெளதீக’ இருப்பாக மட்டுமே புரிந்து செயற்படுகிறார்கள். அவர்களது அக்டோபர் எழுச்சியால் சாதிய வேறுபாடுகளின் பெளதீக இருப்பை மட்டுமே சிதைக்க முடிந்திருக்கிறது. சாதியத்தின் வெளிப்படையான வேறுபாடுகள் உதிர்ந்து அதுவொரு மனநிலையாக உள் ஒடுங்கிவிட்டிருக்கிறது. இடதுசாரியப்பிரதிகளில் சாதியப்போராட்டமானது வர்க்கப்போராட்டமாகவே முன்மொழியப்படுகிறது. கே.டானியலின் பஞ்சமரிலும் வெள்ளாளருக்கு எதிராக மற்றைய சாதிகளின் ஒருங்கிணைவை டானியல் பேசியிருக்கிறார். எழுபதுகளின் சூழல், போராட்ட முறைமையில் இடதுசாரிகள் தங்கள் வர்க்க எல்லையினுள்ளிருந்தே சாதியப்போராட்டங்களையும் முன்னெடுத்தார்கள். ஆனால்,பின்நவீனத்துவம் கரைந்து2 அது கவனப்படுத்திய அதிகார, விளிம்புநிலை உரையாடல்களுக்கான இந்த அமைதியான சூழ்நிலையைப் பேண அல்லது தக்கவைக்க தலித் அரசியலைப் பலிகொடுக்க வேண்டிய சூழலே இன்னும் தொடர்கிறது.
• ஆக்காட்டியில் வெளியாகியிருந்த கட்டுரை