வண்ணச்சீறடி நாவல் முன்னுரை
அழகிய சிறிய பாதங்கள்
வண்ணச்சீறடி என்னுடைய முதலாவது நாவல். இதனை நாவல் என்று சற்றுத் தயக்கத்துடனே சொல்லிக் கொள்கிறேன். அப்படி சொல்வதற்கு நிச்சயமாகத் தன்னடக்கம் ஒரு காரணம் அல்ல. நாவலின் விரிந்த வடிவம் குறித்த வலுவான நம்பிக்கைகள் என்னிடம் இருப்பதே முக்கிய காரணம். நாவலின் களம், மொழி, காலம் குறித்து தொடர்ந்தும் விரிவாகப் பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். இன்று தமிழில் நெடுங்கதை – குறுநாவல் – நாவல் – தொடர் கதைகள் போன்ற வடிவ பேதங்கள் குறித்த ஓர்மை பலருக்கும் இருப்பதில்லை. எல்லாமும் நாவல் என்ற முன் ஒட்டுடனே வெளியாகின்றன. எனவே எல்லோரும் நாவலாசிரியர்கள் என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் சிற்றிதழ் சூழலில் அந்த வகை வடிவபேதம் குறித்த உரையாடல்கள் நடந்திருக்கின்றன. நாவல் எனும் கலை வடிவ, உள்ளடக்க விரிவு குறித்த உரையாடல்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. நாவலெனும் போது அதன் வடிவ விரிவும், தொகுப்புத் தன்மையும் உடனே என்னில் மனவிரிவு கொள்கிறது. உலக, இந்திய, தமிழகப் பெருநாவல்களின் வரிசை அணிவகுத்து வருகிறது. அதனால் எழுந்த சிறு தயக்கதின் குந்தில் ஏறி நின்றே வண்ணச்சீறடியை நாவல் எனச் சொல்லிக்கொள்கிறேன்.
என்னுடைய முதல் குறுநாவல் சிறகைக்கு ஓரளவு விரிவான வாசிப்புக் கவனம் கிடைத்திருக்கிறது. அதன் மொழி குறித்தும், அதில் எழுதியெடுக்கப்பட்ட ஈழ போர் நிலத்தின் புதிய அடுக்குகள் குறித்தும் நேர்ப்பேச்சில் பலரும் உரையாடியிருக்கிறார்கள். அதன் தொடக்க அத்தியாயங்களில் வெளிப்படும் இறுக்கமான மொழிச் சித்தரிப்பு சார்ந்த இடர்களை களைந்து விட்டால் சரளமாக வாசிக்கக் கூடிய குறுநாவல் தான் அது. ஒரு வகையில் என்னுடைய எழுத்து வகைமை குறித்தும் பலருக்குமிருந்த சந்தேகங்களை ஓரளவிற்கு சிறகை நிரவியிருக்கிறது.
சிறகை குறிப்பிட்ட உணர்ச்சி அல்லது ஒற்றை கேள்வியில் மட்டும் தன்னைக் குவித்துக் கொண்டிருந்ததால் அதில் நாவலுக்கான விரிவின் சாத்தியம் நிகழவில்லை. அது தன்னுடைய ஒற்றைக் கேள்வியை நிமிர்ந்த நேர்மையுடன் எதிர்கொண்டது. ஆனால் அதில் நான் படைப்பூக்கத்துடன் திறந்து வைத்த சில அடுக்குகள், கடந்த காலம் குறித்த சித்திரிப்புகள், கேள்விகள், உரையாடல்கள் அதனைச் சிறுகதையிலும் மீறியதாக மேலெழச் செய்திருந்தது. அதனால் அது தமிழில் எழுதப்பட்ட நல்ல குறுநாவல்களுள் ஒன்றானது. அதன் காலமும், கேள்விகளும் விரிவானவை. அதில் உருவாகி வந்த ஈழப் போர்நிலம் குறித்த காட்சிகளும் புதிதானவை. ஆனால் அழுத்தமும், செறிவுமானவை.அந்த எழுத்தும், அதற்கு கிடைத்த ஓரளவு பரவலான வாசிப்பு அனுபவங்களும் கொடுத்த நம்பிக்கையுடன் வண்ணச்சீறடியை எழுதியிருக்கிறேன்.

இந்த நாவலுக்கு முதலில் வைத்த தலைப்பு நினைவு நதி. ஆனால் எனக்கு இந்த வகையான கவித்துவ, உருவக தலைப்புகளில் ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. நாவல் மொத்தத்தின் சாரம்சமாக அல்லது அதை விளக்குவது மாதிரியாகத் தலைப்பு இருக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனால் தொடக்கத்தில் நாவலின் சூடு என்னில் பற்றியெழவில்லை. மந்தமாக களமும், கேள்விகளும் மட்டும் புனைவில் விரிந்து கொண்டிருந்தன. ஆனால் நாவல் ஒரு கட்டத்தில் தன்னுடைய தலைப்பான ‘வண்ணச் சீறடி’யை தானே கண்டு கொண்டது. அதன் பின் நாவலின் எழுத்து வேகமும், களமும் இன்னும் விரிவு கொண்டது. வண்ணச் சீறடி என்ற இந்தச் சொல்லிணைவு தமிழிலக்கியத்தில் அழகிய சிறிய பாதங்கள் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது. அதுவே அதன் நேரடி அர்த்தமும் கூட. ஆனால் எனக்கு அக-எழுச்சி மிகுந்த தலைப்பாகத் தோன்றக் காரணம் சிலப்பதிகாரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடம். இளங்கோவடிகள் கண்ணகியின் செழிப்பை ஒரு விதத்தில் அவளது சிறுவயது இயல்பைச் செல்லுமிடத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
‘என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’
கண்ணகி மண் மகள் அறியாது வளர்ந்த பெதும்பை. பின்னாளில் அந்த அழகிய சிறிய பாதங்களில் தீ பற்றிக் கொள்கிறது. சீற்றம் எழுகிறது. அவளில் கனன்ற தீ வெம்மை போன்றே ஈழத்திலும் பற்றிக் கொண்டது. அந்த வண்ணச்சீறடி நாவலின் ஏதோ ஒரு புள்ளியில் ஈழப்போராட்டத்தின் களமுனையில் வந்து இணைந்து கொண்டது. அழகிய சிறிய பாதங்கள் ஈழ நிலத்தின் இண்டு இடுக்கெல்லாம் வேட்கையுடன் அலைந்து திரிந்தன. சேற்று வயல்களில் இருந்து, காடுகளுக்கும், கள முனைகளுக்கும் பயணித்தன. அப்படியாக பழந்தமிழ்ச் சித்தரிப்பின் உச்சமான ஒரு வாள் வீசுக் கணம் நவீன ஈழ நாவலில் மின்னிச் செல்கிறது. அத்தகைய மின்னற் கணம் நிகழ்ந்ததும் நாவல் உள் விரிவு கொண்டுவிட்டது. தமிழின் அந்த இடையறாத ஒழுக்கின் தொடர்ச்சியில் நானும் ஒண்டிக் கொள்கின்றேன் என்ற எண்ணமே நாவலை எழுதி முடிக்கும் வரையும் என்னை ஆட்கொண்டிருந்தது.
சிறகை எழுதும் போதிருந்த தயக்கங்கள், போதாமைகளின் வீண் சுமைகளைக் கூட இங்கே தயக்கமில்லா நம்பிக்கையுடன் எதிர் கொள்ள முடிந்திருக்கிறது. சிறகையில் வெளிப்பட்ட செறிவான நிலக் காட்சிகள், சித்திரிப்புகள் சார்ந்து நண்பர்களுக்கு சில கேள்விகள் இருந்தன. அதற்கான காரணம் சமகாலப் புனைவுகளில் இருக்கும் சினிமாவின் காட்சிமொழிகளின் அதீதமான பாதிப்பு. இன்று எழுதும் பல இளம்தலைமுறை எழுத்தாளர்களின் மொழியில், காட்சிபூர்வமான சித்திரிப்பில் சினிமாவின் பாதிப்பு அதிகமிருக்கிறது. அவர்களது மொழி கூட சிடுக்குகள் இல்லாத, இலக்கிய நுட்பம் தெரியாத, தேய்வழக்கான உவமைகள், சித்தரிப்புகள் நிறைந்த தமிழின் பழைய வணிக அரட்டை மொழிக்கு ஒப்பானது. அவர்களுள் பலரால் தமிழ் தீவிர இலக்கியத்தின் அல்லது சிற்றிதழ் மரபின் செறிவான புனைவு மொழியின் சத்தான கூறுகளைச் செரிக்க முடியவில்லை. அதற்கு அருகில் கூட வர முடியவில்லை. யுவ புரஸ்கார் விருது வாங்கிய நம் தலை முறையின் நல்ல எழுத்தாளர் என முன்வைக்கப்படும் ஓர் எழுத்தாளரின் நாவலில் ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள்’ என்றும், ஊரார் ‘அமளிதுமளி’ப்பட்டனர் என்றும், அவர் ‘மூஸ் மூஸ் என்று மூசினார்’ என்றும் கூட எழுதப்பட்டிருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் தான். ஒட்டுமொத்த நாவலிலும் இப்படியான ஒரு சில தேய்வழக்குகள் வருவது குறித்த புகாரல்ல இது. நாவல் முழுவதும் இதுதான் நிலை. ஒரு புதிய உவமை, செறிவான காட்சிச் சித்தரிப்பு, பார்வைக் கோணங்கள் எதுவும் இல்லாத மிகச் சுமாரான நாவல் முயற்சிகள் அவை. இன்னும் சிலர் அதிகமும் வன்முறைகள், காமம், சம்பவங்களைத் திரைப்படக் காட்சிகளாகச் சித்தரிக்கிறார்கள். திகட்ட திகட்ட சித்தரிப்பது அவர்களின் நோக்கம். இந்த வகை பொறுப்பின்மையின் போதாமைகள் பெரும் நச்சுவலையாகச் சமகாலப் புனைவுகளைப் பீடித்திருக்கிறது. அந்தவகைச் விமர்சனங்களில் இருந்து என்னை நோக்கி எழுந்த கேள்வி அது.
சிறகையில் நிலமும், காடும், சித்திரை முகாமும் கூட கதைசொல்லியின் அகமாகவே விரிந்திருக்கிறது. அவை வெறும் புறச் சூழல் அல்ல. அவன் அந்த நிலத்திற்காக வெடித்துச் சிதற இருக்கும் ஓர் உயிர். அதிலிருந்தே அவனது விசாரணைகளும் பார்வைகளும் உருக்கொள்கின்றன. அவன் அந்த நிலத்தைத் திரவம் போல உட்கொள்கிறான். அதுவுமில்லாமல் புனைவுச் சித்தரிப்பில் சூழலின், உணர்ச்சிகளின் பொதுதன்மை சித்திரிக்கப்படுகிறதா அல்லது அந்த புறச் சூழலின் தனித்தன்மையை, உணர்ச்சியை செறிவான நுட்பமான புதிய பார்வை, மொழி வெளிப்பாடுகளுடன் சித்திரிக்கப்படுகிறதா என்பதே கேள்வி. சிறகையில் நிகழ்ந்திருப்பது இரண்டாவது வகை. அதனால் தான் சிறகை வாசித்த பலருக்கும் அது கொடுத்த செறிவான சித்தரிப்பின் அனுபவ வேறுபாடும் அது புனைவனுபவமாக உருமாறிய மொழிச் சித்தரிப்பும் நிறைவாக இருந்ததை உணர முடிகிறது. சமகால எழுத்தாளர்கள் பலருக்கும் சிக்காத மொழியின் ஒழுக்கு என்றே அதைப் புரிந்து கொள்கிறேன்.
சமகால ஈழப் புனைவுகளில் முக்கியமாக இரண்டு பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்கள் குறித்த உரையாடல்கள் விவாதங்களோகூட இல்லாமல் வலுவான உண்மைகள் போல நடு வீட்டினுள் வம்படியாக அமர்த்தி வைத்திருப்பதால் ஈழ இலக்கியம் இழந்தவை, அடையமுடியாமற் போனவை ஏராளம்.
முதல் சிக்கல் அது எளிமையான யதார்த்தவாதக் கதைகளை மட்டும் புனைவு என நம்புகிறது. அந்தப் புனைவுகள் உண்மையாக இருக்கவேண்டும் எனவும் நம்புகிறது. அதில் ஒரு சாட்சியம், அல்லது உண்மையின் விழுக்காடுகளை மட்டுமே அது படித்துப் புரிந்து கொள்கிறது. அது மட்டுமே அளவுகோல். இன்னொன்று மொழி வெளிப்பாடு, உவமைகள், சித்திரிப்பு நுட்பங்கள், புறச்சூழல் எல்லாம் அந்தப் புனைவுகளில் பொருட்படுத்தப்படுவதில்லை. அவற்றைக் கருத்தில் கொள்ளாததால் புனைவுகளில் இரண்டு இடர்கள் நிகழ்கின்றன. ஒன்று மொத்த புனைவுகளுமே அழுத்தமான நிலமோ, பண்பாட்டு வெளியோ இல்லாத வெளுறிய மாதிரி கதைகளின் தொகையாக இருக்கிறது. புனைவுகளில் என்னச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டும் கணக்கிலெடுக்கப்படுகிறது. வாசிப்புக் கொடுக்கும் உணர்வுகள், அனுபவ விரிவுகள் பொருட்டல்ல. அதனால் ஈழ இலக்கியத்தால் புனைவின் உச்ச சாத்தியங்களை, படைப்பூக்கமான வீச்சை அடையமுடியாமல் இருக்கின்றன. இந்த வகைத் தேக்கங்களை என்னுடைய சிறுகதைகளில் இருந்து சிதறடித்தபடியே வருகிறேன். அதன் ஓர் உச்சம் சிறகை என்றால். இன்னும் நுட்பமான வெளியை வண்ணச்சீறடியில் எட்டியிருக்கிறேன்.
இந்த நாவலை ஈழ-புலம்பெயர் இதழியல் முன்னோடிகளுள் ஒருவரான ஓசை மனோவிற்குச் சமர்ப்பணம் செய்கிறேன். இலக்கியத்தில் இடையறாத செயலூக்கத்திற்கு எப்போதும் ஓர் இடமுண்டு. ஓசை, அம்மா, வளர் எனத் தொடர்ச்சியாக இதழ்ச் செயற்பாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும், நாடகங்கள், புனைவுகளூடாக புலம்பெயர்ந்த இளம் தலைமுறையினருடன் உரையாட விழையும், புலம்பெயர் சூழலில் ஓர் இலக்கியச் சுற்றத்தைத் தக்கவைக்க அயராது செயற்படும் அவரது செயலூக்கம் எனக்கும் என்றும் உத்வேகம் கொடுக்கக்கூடிய ஒன்றே.
தர்மு பிரசாத்
07.09.2026




