பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு
ரியாஸ் குரானா கவிதைகளை முன்வைத்து.

ஒரு முறை ஜெயமோகன் ஈழக் கவிஞர்கள் குறித்து இப்படிச் சொல்லியிருந்தார். ஈழம் போன்ற இத்தனை சின்ன நிலத்தில் பந்திப்பாய் விருப்பது போல இவ்வளவு கவிஞர்கள் இருந்தால் ஒருவராலும் தாங்க முடியாது. ஆகவே பூச்சி மருந்து அடிக்க வேண்டும். பகிடிக்குப் புண்படுவது நம் வீர-மரபு என்பதால் சட்டென்று ஈழக் கவிஞர்கள் பலர் கொதித்தெழுந்தனர். கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பார்வதிபுரம் சென்று ஜெயமோகன் வீட்டின் முன்னால் எல்லாம் இல்லை, சமூக வலைத்தளங்களில் தான். அப்போது எனக்கு ஒரு ஐயம் எழுந்தது. அதனை இயல்பான தயக்கத்துடன் பொதுவிலும் கேட்டிருந்தேன். கவிஞர்களைப் பற்றி ஜெயமோகன் சொன்னதற்கு கவிஞர்கள் கோவப்படுகிறார்கள், அவர்களின் கோபத்தில் ஓர் ஞாயம் இருக்கிறது. ஆனால் ரியாஸ் குரானா ஏன் கோவப்படுகிறார்? இதற்கு ஓர் அன்பர் நீ எப்படி ரியாஸ் குரானாவைக் கவிஞர் இல்லை எனச் சொல்ல முடியும் என பகிடிக்குப் புண்பட்டுக் கொதிக்கும் நம் மரபுப்படி கொதித்திருந்தார். ரியாஸ் குரானா அளவுக்குக் கவிதை எழுதிவிட்டுச் சொல்லு அல்லது அவரை மாதிரிக் கவிதை எழுதிக்காட்டு என என்னைச் சவாலுக்கு அழைத்திருந்தார். எனக்கும் சறத்தை மடித்துக் கட்டிக் கொண்டு அன்பரின் கவிதைச் சாவலில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தது. ஆனால் அதில் சிக்கல் இருக்கிறது. என்னால் ஒருபோதும் ரியாஸ் குரானாவுடனான கவிதைச் சவாலில் வெல்ல முடியாது. பிரமிளுக்குப் போட்டியாக கூட எழுதிவிட முடியும். ஆனால் ரியாஸ் குரானாவுடன் என்னால் போட்டியிட முடியாது. முதன்மைக் காரணம் குரானாவின் படைப்பு மேதமையோ, படைப்பூக்கமோ அல்ல. ரியாஸ் குரான அளவுக்கு ஒருவர் கவிதை செய்ய அசாத்திய திறன் வேண்டும். அதற்கு 20 வருடங்கள் பிழையான பின்நவீனத்துவக் கோட்பாட்டுப் படிப்பு வேண்டும். நவீனத்துவம் பற்றிய மேம்போக்கான அபிப்பிராயங்களை மதநம்பிக்கையாளனின் மூர்க்கத்துடன் பல வருடங்களாகப் பற்றிக் கொண்டிருக்கும் மூடத்தனம் வேண்டும். ஆகவே நீங்கள் என்னதான் குட்டிக் கரணமிட்டாலும், நாளுக்கு ஆயிரம் கவிதைப்படி எழுதினாலும் கூட அவரளவுக்கு மோசமான ஒரு கவிதையைக் கூட உங்களால் செய்ய முடியுமா என்பது சந்தேகம். நான் முயற்சித்துப் பார்த்தேன். எனக்குச் சரி வரவில்லை. ஆக நான் அந்தச் சவாலில் கலந்து கொள்ளவில்லை. விமர்சனம், சிறுகதை, நாவல், குறுநாவல் என என் பாயை எதிர்பக்கமாக விரித்துக் கொண்டுவிட்டேன். அப்போதே எனக்கு ரியாஸ் குரானாவின் கவிதை செய்கை மீது சந்தேகமும், அது படைப்பூக்கம் இல்லாத போலி வெளிப்பாடு என்ற வலுவான எண்ணமும் இருந்தது. அவற்றில் வலிந்து உருவாக்கப்படும் படிமங்கள், வாசகனை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் சித்து வேலைகள் மீது ஒவ்வாமை இருந்தது. நவீன இலக்கியத்தின் பெருந்தூண்களில் ஒன்று வாசகரை தொந்தரவு செய்வது. ஏன் அதன் அடிப்படை கூட அதுவென்று சொல்ல முடியும். வாசகரை தொந்தரவு செய்யாத நவீனத்துவ நல்ல படைப்பு ஒன்று கூட இல்லை. அந்தத் தொந்தரவை ரியாஸ் குரானா தன் கவிதைகளில் எரிச்சல் படுத்துவது போல வலிந்து செய்ய கொஞ்சம் அசட்டுத்தனம் வேண்டும். கவிஞர்களுக்கு இருக்கக் கூடிய நல்ல ’அசட்டு’த்தனத்தை சொல்லவில்லை. இது உண்மையான முத்திரை குத்திய அசட்டுத்தனம். இப்போது அவரின் கவிதைத் செய்கையின் போதாமைகளை துல்லியமாகவே வரையறுத்துச் சொல்ல முடியும். உண்மையில் அவருடையது பொருட்படுத்தக் கூடிய முயற்சி கூட அல்ல. இலக்கியத்தில் புதிய சிந்தனைகள், முயற்சிகளுக்கு எப்போதும் ஓர் இடம் இருக்கிறது. தூய கிறுக்குத்தனத்திற்குக் கூட செலவாணி உண்டு. விலகல்களுக்கு எதிர் மரபுகளுக்கு கூட கவனமும் கரிசனையும் உண்டு. அத்தகைய மீறலும், எதிர்ப்புகளும் கூட ஒரு வகையில் இலக்கியத்தின் மைய விசைகளுள் ஒன்று. புதிய சோதனை முயற்சிகள் தோல்விகளில் கூட சென்று முடியும். அப்படித் தோல்விகள் ஆவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் மகத்தான தோல்விகள் அவை. இலக்கியத்தில் அப்படியான மகத்தான தோல்விகளுக்கு பெரும் இடம் உண்டு. பொருட்படுத்தல் உண்டு. உரையாடவும், விவாதிக்கவும் கூட இடம் உண்டு. ரியாஸ் குரானாவினுடைய கவிதை முயற்சி அப்படியான தோல்வியான பாதையோ அல்லது பெரும்பான்மைச் சூழலுக்கு எதிரான மாற்றுச் சிந்தனையோ இல்லை. ஆனால் இதைப் பொருட்படுத்தி எழுதுவதூடாக நம்மிடமிருக்கும் நவீனத்துவ அல்லத நவீன கவிதைகள் குறித்த ஒரு சில நம்பிக்கைகளை தொகுத்துக் கொள்ள விழைகிறேன்.
ரியாஸ் குரானா தன்னுடைய கவிதைகளை தோராயமாக இப்படி வரையறுத்துக் கொள்கிறார். நவீன கவிதைகள் காலாவதியாகிவிட்டன. அவற்றுக்கு மாற்றான கவிதைகள் என்னுடையவை. இது அவரது முதன்மையான முன்வைப்பு. சரி அப்படி நவீன கவிதை காலாவதியாகக் காரணங்கள் என்ன? நவீன கவிதைகள் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கத் துடிக்கின்றன. கூடவே இன்னும் துல்லியமாகப் பிரதிபலிக்க பரிதாபமாக முயல்கின்றன. ஆகவே நான் அதற்கு எதிராக இருக்க விரும்புகிறேன். கவிதையூடாக ஒருவரை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். அதாவது நவீன கவிதைகள் மீதான அவரது விமர்சனம் என்பது மிமிக்கிரி செய்தல், ஒரே போல ஓசையில் கவிதைகள் எழுதுதல், ஒருவரின் வரிகளை இன்னொருவர் கொஞ்சம் மாற்றிப் பயன்படுத்துதல், செயற்கையான நவீனத்துவம் போன்றவற்றை விமர்சனங்களாக முன்வைக்கிறார். அடுத்தது ஒரு பெரும் திரள் அல்லது அதிகார அமைப்புகள் இதுதான் கவிதையென சில வரையறைகளை முன் வைக்கிறது. அதற்கு வெளியே இருப்பவற்றை கவனம் கொள்வதில்லை. ஆக மரபான அந்தக் கவிதை மனநிலைக்கு மாற்றாக தன்னுடைய கவிதைகளை மீறலுடன் முன்வைக்கிறேன் என்கிறார். உண்மையில் இதில் பெரும்பாலான பார்வைகள் அல்லது அனைத்துமே பின்நவினத்துவ உரையாடல்களில் விவாதிக்கப்பட்டவை. 90களில் தமிழில் எழுந்து வந்த சிந்தனைகளில் இருந்து இரண்டாம் கைதழுவலாக ரியாஸ் குரானாவே உருவாக்கிக் கொண்டவை. அப்படி இரண்டாம் கைகழுவலாக அவற்றை உள்வாங்குவதில் சிக்கல் இல்லை. சிந்தனை, இலக்கியம் அப்படித்தான் பரவ முடியும். ஆனால் அவர் பின்நவீனத்தின் கூறுகள் என வரித்துக் கொண்டவை, நவீனத்துவ கவிதைகளின் போதாமை என முன்வைப்பவற்றில் பெரும் சிக்கலும், அடிப்படை புரிதற்குறைபாடுகளும் இருக்கின்றன.
பின்நவீனத்துவ சிந்தனை முறை நவீனத்துவ மனநிலையில் பல விரிசல்களை நிகழ்த்தியிருக்கின்றன.பொதுப்புத்தி சார்ந்த பார்வைக் கோணங்களை உருமாற்றியிருக்கின்றன. நல்ல படைப்பாளி, படைப்பு மேதமை, தனிநபர் திறமை, சமூகத்தின் கூட்டு மனநிலை, மொழியின் இறுக்கம், யதார்த்தத்தை அப்படியே படைப்புக்களில் பிரதிபலிக்க முடியுமா?, மூளை யாதார்த்தத்தை, மொழியை எப்படி புரிந்து கொள்கிறது, பன்மைத்துவம், மைய அதிகாரச் சிதைப்பு என அது ஏராளம் சாத்தியங்களை விரிவாக உரையாடியிருக்கிறது. அதுவே இன்றுவரையான அதன் கொடை. ஆனால் அது தனித்த சிந்தனை போக்கோ அல்லது தரிசனமோ அல்ல நவீனத்துவத்துவக் கசப்பின் அருமருந்து. அது நவீனத்துவத்தின் இறுக்கமான இரும்புடலில் பொத்தல்களை ஏற்படுத்தியிருந்தது. அதன் பொதுப்புத்திசார்ந்த எண்ணங்களை மாற்றியமைத்திருந்தது. அந்த பின்நவீனத்துவ புயல் 1990களில் அது தமிழகத்தில் சுழன்றது. அது 2000களில் கிழக்கிலங்கையைக் கடந்தது. அது கிழக்கிலங்கையைக் கடந்த இரண்டாயிரங்களில் தமிழகத்தில் பின்நவீனத்துவத்தைக் கடந்த அடுத்த அலை உருவாகிவிட்டிருந்தது. பின்நவீனத்துவத்தை அதன் படைப்பு சாத்தியங்களை, மொழி, அரசியல், கலாசார, பண்பாட்டுதளங்களில் தீவிரமாக முன்வைத்தவர்கள், அதன் நல்ல கூறுகளை உட் செரித்துக் கொண்டு படைப்பு சிந்தனை விமர்சனம் பார்வைகளில் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து சென்றார்கள். ரமேஸ்-பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அ.மார்க்ஸ் போன்ற பலரையுமே உதாரணமாகச் சுட்ட முடியும். அதுவரையும் மொழி வெளிப்பாடாகவும், எதிர்ப்பும் அதிகாரச் சிதைப்பு என்பதாகவும் சுழன்ற பின்னவீனத்துவச் சிந்தனை இன்னும் பெரிதாக பண்பாட்டு தளத்தி ஊடுருவி அடுத்த அடுத்த கட்டங்களில் வெளிப்பட்டது. கிட்டத்தட்ட அதனை மொழி தொழிநுட்பமாகப் புரிந்து கொண்டாவர்கள் மட்டும் காணமலானார்கள். படைப்பாளி இறந்துவிட்டான், காய்கறிப்பட்டியலும் படைப்புத்தான், வட்டம், சதுரம், கோடு என பின்னவினத்துவத்தை விளங்கியவர்காளால் அதன் எல்லைகளை மீறமுடியவில்லை. ஆனால் கிழக்கிலங்கையில் அந்தச் சிந்தனைக் கசட்டை மட்டும் பின்நவீனத்துவத்தின் ஒற்றை இயல்பாக பற்றிக் கொண்டார்கள். அந்தக் காலகட்டப் பல படைப்புகள் ஒரு பக்கம் கூட ஒருபோதும் புரட்டிப் பார்க்க முடியாதவாறு நூலகத்தின் மின் அடுக்குகளில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் அதை விபரீத மொழித்திருகலாக புனைவுகள் எழுதினார்கள். குறிப்பாக திசேரா போன்றவர்கள். அல்லது அதனை மாற்றுச் சிந்தனை முறையாக அதாவது மாற்றாகச் சிந்திப்பதாக மட்டும் புரிந்து கொண்டு செயற்பட்டார்கள். இன்னும் சிலர் முக்கியமாக ரியாஸ் குரானா போன்றவர்கள் அதை நவீனத்துவத்தின் எதிர்ப்பாக மட்டும் சுருக்கிக் கொண்டார்கள். அதை அவர்கள் மொழித்திருகலாக, மொழியை எல்லாச் சொற்களிலும் வஞ்சமும், சந்தேகமும் கொண்டிருக்கும் ஒரு வகை போலி மொழி விளையாட்டாக முன்வைத்தார்கள். இன்று பெருவெளிக்கால எழுத்துக்களை வாசிக்கும் போது ஒன்றை உணர முடியும். அங்கு எஞ்சியிருப்பது சிந்தனை தீட்சன்யமோ, சிந்தனைக்கான தேடலோ அல்ல. பின்நவீனத்துவம் சந்தேகிக்கக் கற்றுக் கொடுத்த மொழியின் இயல்பைக் கொண்டு குற்றங்கண்பிடித்தலே அங்கே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் குற்றங் கண்டுபிடித்தல் இருபக்கமும் கூரான கத்தி. இருவரையும் அது குத்தியே தீரும். அந்தக் கட்டுரைகளின் வான் நிறையும் பெரிய பெரிய கலைச் சொற்களில், ஒரே விடயத்தை சுற்றி சுற்றிக் கற்கோட்டை எழுப்பியிருப்பதை வாசிக்க முடியும். அதை மறுப்பவர்களும் அதே வழிமுறைகளைப் பின்பற்றியிருப்பதால் நிச்சயம் புதிர்வட்டம் போலவே அவை இருக்கும். முந்பின் தொடர்ச்சியோ, நீட்சியோ இல்லாத புதிர்வட்டம்.
ரியாஸ் குரான முதன்மையாக வரித்துக் கொண்ட நவீனகவிதைகள் குறித்த பார்வை குறைபாடானது. மிகவும் மேம்போக்கானது. உரைநடையை விபரீதமாக உடைத்தல். தொடர்பற்ற சொற்களை அருகருகே வைத்தல், அபூர்வமான படிமங்களை உருவாக்குதல். தத்துவ அல்லது அரசியல் சொற்களைப் பயன்படுத்துதல். பெரும்பாலும் பால் அடையாளங்கள் சார்ந்து. எதிர்பாராத இடத்தில் வரி முறித்தல். அர்த்தம் முழுமையாகப் பிடிபடாமல் இருப்பதை கவிதைத்தன்மையாகக் கருதுதல். இது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதனைப் பலரும் இதை ஏதோ கவித்துவ உச்சமாக படைப்பூக்கத்தின் மேமதையாகக் கருதுகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. கூடவே விளம்பர மொழியை கவிதைக்குள் கொண்டுவருதல், அரசியல் மொழியை உடைத்தல், செய்தி மொழியை கவிதையாக்குதல், வாசகருக்கு எரிச்சலை உருவாக்கும் மீளுருவாக்கம் அபத்தமான இணைப்புகளை உருவாக்குதல், கருத்தியல் சொற்களை எதிர்பாராத இடத்தில் பயன்படுத்துதல். இவை எல்லாம் உத்திப் புதுமைகள். இந்தவை உத்திப் புதுமைகள் எல்லாக் காலகட்டங்களிலுல் இருந்து கொண்டிருக்கக் கூடியவை. ஆனால் உத்திப் புதுமைகள் மட்டும் படைப்பூக்கம் ஆகிவிடாது. படைப்பூக்கம் என்றால், உலகைப் பார்ப்பதற்கான ஒரு தனித்துவமான பார்வை உருவாக வேண்டும். ஒரு அனுபவம் அவனிடம் வந்து அவனுடைய மொழியில் இன்னொன்றாக உருமாற வேண்டும். சரி. ரியாஸ் குராணா பொதுப்போக்கை மறுப்பதற்காகவே கவிதையின் வடிவம், மொழி, படிமம், நிலைப்பாடு ஆகியவற்றைத் தீர்மானித்தால், அவர் பொதுப்போக்கிலிருந்து வெளியேறிவிட்டாரா என்ன? இல்லை அங்கே அவர் பொதுப்போக்கின் எதிர்மறைப் பிரதியாகவே எஞ்சியிருக்கிறார். அதாவது மட்டமான பொதுப்போக்கின் பிரதிபலிப்பாக. அதை இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். றியாஸ் குரானா பிரதிபலிப்புக் கவிதைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்கிறார். ஆனால் பிரதிபலிப்பிலிருந்து விடுபடுவதும், பிரதிபலிப்பின் எதிர்ப்புறத்தில் தன்னை நிறுவிக்கொள்வதும் ஒன்றல்ல. நவீன தமிழ் கவிதையின் பொதுப்போக்கை மறுப்பதன் மூலம் உருவாகும் அவரது கவிதையியல், அந்தப் பொதுப்போக்கின் போதாமையிலிருந்து இயல்பாக வளர்ந்து அதைக் கடந்து செல்லும் புதிய அழகியலாக உருவாகவில்லை. மாறாக, பொதுப்போக்கு எதைச் செய்கிறதோ அதற்கு எதிர்மாறாகச் செய்வதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆகவே அது பொதுப்போக்கிலிருந்து விடுபட்ட ஒரு தனித்த அழகியல் அல்ல; பொதுப்போக்கின் எதிர்மறைப் பிரதிபலிப்பாகவே நிற்கிறது. பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பும் இறுதியில் மிக மோசமான பிரதிபலிப்பே.
நவீன கவிதை பல உள்ளோட்டங்களும், வகை பேதங்களும் கொண்டது. அதில் நேரடியான வசன கவிதைகள் தொடங்கி, வானப்பாடி கவிதைகள் வரை நீளும் பட்டியல் அது. நேரடியான வசனக் கவிதை, நினைவோடை சார்ந்த கவிதை, அடர்படிமக் கவிதை, மொழியைத் தீவிரமாகச் சிதைக்கும் கவிதை, மிக எளிய, plain poetry என்று சொல்லக்கூடிய கவிதை, அப்ஸ்ட்ராக்ட்/அரூபமான கவிதை, தனிப்பட்ட அனுபவத்தை மையமாக்கிய கவிதை, அரசியல்/சமூக அனுபவக் கவிதை, தத்துவத் தேடல் கொண்ட கவிதை ஒவ்வொரு போக்குகளும் கவிதையின் ஓர் இயல்பை பிரதான அலகாகக் கொண்டிருப்பதை உணரமுடியும். ஆனால் இவையெல்லாவற்றிலும் இழையோடியிருக்கும் ஓர் இயல்பு இருக்கிறது. தொந்தரவு செய்தல். அதாவது நவீனத்துவத்தின் ஆதார இயல்பே ஒருவரை தொந்தரவு செய்வதுதான். ஒருவரது நம்பிக்கைகள், விழுமியங்கள், பொதுப்புத்தி சார்ந்த புரிதல்களை கேள்விகேட்பது. உடைத்துக் கட்டுவது. ஆக புண்படுத்துதல், தொந்தரவு செய்தல் ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படைகள். அது இல்லாவிட்டால் அது வெறும் கேளிக்கை. வணிக எழுத்து. அப்படியானவற்றில் இலக்கியத்திற்கு எந்த மதிப்புமே இல்லை. ஆனால் அந்த தொந்தரவும் பண்படுதல் என்ன இயல்பால் எப்படி உருவாக்கப் படுகின்றது என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.
ரியாஸ் குரானா கவிதைகள் அவை வாசகரைத் தொந்தரவு செய்கின்றனவா? ஆம், சில சமயங்களில். ஆனால் அந்தத் தொந்தரவு எப்படி உருவாகிறது? ஒரு ஆழமான வாழ் அனுபவத்திலிருந்தா? அல்லது ஒரு புதிய பார்வைக்கோணத்திலிருந்தா? அல்லது மொழிக்குள் நிகழும் தவிர்க்க முடியாத ஓர் உள்மாற்றத்திலிருந்தா? அல்லது “வாசகரைத் தொந்தரவு செய்ய வேண்டும்” என்ற முன்கூட்டிய உத்தியிலிருந்தா? ரியாஸ் செய்வது இதைத்தான். நவீனத்துவம் உருவாக்கிய தொந்தரவு, ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வையையே மறுகட்டமைக்கக் கூடியது. அது ஒரு கவிதையை வாசித்த பிறகு உலகத்தை வேறுவிதமாகப் பார்க்கச் செய்யலாம். ஆனால் இங்கே அவர் உருவாகும் செயற்கைத் தொந்தரவு பல இடங்களில் ஆற்றாமையின் வடிகாலாக மட்டுமே தெரிகிறது. ஆக இந்த இரண்டு தொந்தரவுகளும் ஒன்றல்ல. ஒரு தொந்தரவு நம்முடைய பார்வையை விரிவுபடுத்துகிறது. இன்னொன்று நம்மை வெறுமனே எரிச்சலடையச் செய்கிறது. ஒன்றில் படைப்பூக்கம் இருக்கிறது. மற்றொன்றில் உத்தி மட்டுமே இருக்கிறது. ஒன்றில் கவிதை வாசகருக்குள் தொடர்ந்து வேலை செய்கிறது. மற்றொன்று “நான் வழக்கமான கவிதையை எழுதவில்லை” என்ற அறிவிப்போடு முடிந்துவிடுகிறது. அதனால்தான் ரியாஸ் குரானாவின் கவிதைச் செய்கை மீது எனக்கு உள்ள அடிப்படை விமர்சனம், அது அர்த்தமற்றது என்பதல்ல. அதுவும் ஒரு காரணம்தான் என்றாலும். அது தனது கவிதை அர்த்தத்தை மறுப்பதற்காக உருவாக்கும் இடத்தில், அதற்குப் பதிலாக ஒரு புதிய கவிதை அனுபவத்தை உருவாக்கத் தவறுகிறது என்பதே. ஆக அவர் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு சரியான மாற்றாக அவரது கவிதைகள் வெளிப்படவேயில்லை. அவற்றின் கவிதை செயற்பாடு என்பது வெறும் எதிர்ப்பாக, மாற்றாக மட்டுமே எஞ்சியிருப்பவை. நவீன கவிதைகள் வடிவவெளிப்பாடாக மட்டும் சுருக்கியதன் விளைவு.
அப்படியானால் மாற்று அல்லது எதிர்ப்பு இன்னொரு அழகியலை அல்லது கவிதைப் பார்வையை உருவாக்க முடியாதா? முடியும். தமிழிலே அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. சித்தர்பாடல்கள். அவை பக்திமரபு என்ற பெருந்திரளான மக்கள் ஏற்புக்கு எதிராக உருவானவை. மீச் சிறு வட்டத்தால் உருவானவை. ஆனால் எதிர்ப்பு மட்டுமே அல்ல அவற்றின் தரிசனம். அதன் நோக்களுள் ஒன்று எதிர்ப்பு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அவை பக்திமரபின் சாரத்தை, அதன் தரிசனங்களை எதிர்பதால் மட்டும் இன்று வரையும் அழியாது நின்றிருப்பவை அல்ல. எதிர் மரபிடையே கூட ஓர் அகத்தரிசனத்தைக் கொண்டிருக்கிறது. வைரத்தின் உள் ஒளி போல பொது மரபின் முன்வைப்புகள் எள்ளலுடன் இழையோடுகின்றன. கடவுள் பற்றிய நிலவும் கருத்துக்களை மறுவரையறை செய்தனர், உருவவழிபாட்டை மறுத்தனர், சடங்குகளை கேள்விக்குட்படுத்தினர், உடல், அனுபவம், ஞானம் ஆகியவற்றை வேறொரு தளத்தில் இணைத்தனர், சமூக நிறுவனங்களையும் அதிகாரங்களையும் எதிர்த்தனர், தங்களுக்கென ஒரு மொழியையும் உருவக உலகையும் உருவாக்கினர். இந்த விரிவால் மட்டுமே அவற்றின் கவித்துவ இடம் இன்றுவரையும் இத்தனை வீரியமாக இருக்கிறது. பொதுப்போக்கை எதிர்க்கிறது, அல்லது மாற்றாக இருக்கிறது என்பதாலே அது இலக்கியம் ஆகிவிடுவதில்லை. தீவிர இலக்கியமும் கூட அதனையே செய்கிறது. அந்த எதிர்ப்பை பிரகடனப்படுத்தி அதனையே தன்னுடைய முதன்மை இயல்பாக அது முன்வைப்பதில்லை என்பதே இங்கே வித்தியாசம். அது இலக்கியத்தின் ஆதார நோக்கத்தை எப்படி நிவர்த்தி செய்கிறது என்பதே அதன் ஒற்றை அளவுகோல். அதற்கு நவீன கவிதைகளை ஒற்றைப்படையாக சுருக்கிப் புரிந்து கொள்ள முடியாது. அதனுள் பல ஓட்டங்களும் முரண்களும் இருக்கின்றன. அவை ஒன்றை ஒன்று மறுத்தபடியும் நிரப்பியபடியுமே இன்ருவரையும் இருந்து கொண்டிருக்கின்றன. இன்னொன்று ஒரு காலகட்டத்தின் படைப்புகள் அல்லது வெளிப்பாட்டு வடிவங்கள் ஒரு போதும் காலாவதியாவதில்லை. நவீன கவிதைகளின் பின்னும் இன்னும் மரபுக்கவிதைகள் அதே மன எழுச்சியுடன் படிக்கப்படுகின்றன, சிலாகிக்கப்படுகின்றன. அவற்றின் சமூகப் பெறுமானம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக அந்த காலவதியாகிவிட்டது என்ற கூற்றுக் கூட அதிர்ச்சி மதிப்பீடு அன்றி வேறல்ல.

உண்மையில் ரியாஸ் குரானாவின் கவிதை செய்கை நாவீன கவிதைகளுக்கு மாற்றோ அல்லது எதிரானதோ அல்ல அவற்றின் பிரதிபலிப்புத்தான். அவற்றின் சொல்முறை, தொனியையே பல இடங்களிலும் பிரதி செய்கிறது அது தவிர்க்க முடியாததும் கூட. அது உருவாக்கும் அர்த்த மற்ற பிளாஸ்ரிக் தனமாக படிமங்கள் மட்டும் அவற்றுக்கு மாற்றாக இருக்கின்றன மாற்றாகக் கூட அல்ல அவற்றின்மிக தொலைவான எதிரொலியாக. அதனால் தான் அவற்றினால் எதிர்ப்பு என்பதற்கு அப்பாலான கவிதை அனுபவமாக விரியமுடியவில்லை. கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதிக்குப் பிறகு வைரமுத்துதான் தமிழின் பெருங்கவிஞர் எனச் சொல்லுபவர்களுக்கு வேண்டுமானால் மாற்றாக புதிய அனுபவமாக இருக்கக் கூடும். அவர்கள் நம்பும் கவிதைகளுக்கு மாற்றானதாக இருக்கக் கூடும். உண்மையில் ரியாஸ் குரானா நவீனத்துவத்தின் இயல்புகள் என எளிமைப்படுத்திப் புரிந்து கொண்டவை உள்ளுர் திண்ணைக் கவிஞர்களதும், மழைக்கும் கவிதை எழுதுபவர்களினுடையதுமான கவிதை இயல்புகளை. அது தமிழின் மகத்தான நவீனத்துவ கவிஞர்களின் கவிதை வெளிப்பாட்டு இயல்புகள் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக வானில் பறக்கும் பறவையில் இருந்து இறகுகள் உதிர்ந்தபடியே தான் இருக்கிறது. ஆனால் அது பிரமிள் ஒருவருக்குதான் பறவையின் வாழ்வை எழுதிச் செல்லும் கவியமாகப் பார்க்கும் அகக்கண் அல்லது கவிமனம் வாய்திருக்கிறது. அந்த மகத்தான நவீனத்துவ கவிஞர்கள் போலி செய்வதில்லை. ஒசை தொனியை பின்பற்றுவதில்லை. அவர்கள் தங்களுக்கேயான தனித்த தரிசன சொல் வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தவர்கள். மொழியின் கூர் முனையெனத் திகழ்ந்தவர்கள். அவர்களின் இயல்புகளே நவீனத்துவத்தின் இயல்புகளாக இருக்க முடியும். ஆனால் ரியாஸ் குரானா, பூச்சிமருந்து அடிக்க வேண்டுமென ஜெயமோகன் சென்ன உள்ளுர் திண்ணைக் கவிஞர்களை நவீனத்துவத்தின் முகங்களாக எடுத்துக் கொண்டது அவரது தீயூழ். அல்லது நவீனத்துவம் குறித்த அவரது மிக பிழையான புரிதல். அல்லது அது இலகுவானது. கருத்தியல் எதிரியை மீச் சிறியவராக சுருக்கிக் கொள்ளுதல். சித்தர்கள் தங்கள் காலத்தின் பக்திப் பொதுப்போக்குக்கு வெளியே ஒரு மாற்றுத் தரிசனத்தை உருவாக்கியவர்கள் என்றால், நவீனக் கவிஞர்கள் தங்கள் காலத்தின் வெகுஜனக் கவிதை உணர்வுக்கு வெளியே ஒரு மாற்று கவிதை அனுபவத்தை உருவாக்கியவர்கள். ஒருவகையில் தற்காலச் சித்தர் மரபினர். அப்படியென்றால், ஏற்கெனவே தமிழின் வெகுஜனக் கவிதை மரபுக்கு எதிராக ஒரு சிறிய மாற்று மரபாக இருக்கும் நவீனக் கவிதையை மீண்டும் ‘பொதுப்போக்கு’ என்று அறிவித்து, அதற்கு எதிராக இன்னொரு மாற்றை முன்வைப்பது உண்மையில் என்ன? அது சித்தர்களைப் போன்ற இன்னொரு எதிர் மரபாக இருக்க வேண்டுமென்றால், நவீனக் கவிதையைத் தாண்டி தன்னுடைய அக தரிசனத்தையும் கவிதை உலகையும் உருவாக்க வேண்டும். வெறும் எதிர்நிலையால் அது உருவாகாது. குறிப்பாக நவீனக் கவிதையின் சில வடிவங்களை மறுப்பது மட்டுமே நவீனக் கவிதையை மீறுவதாகாது. அந்த மரபின் உச்சமான கவிதை அனுபவங்களை உள்வாங்கி, அதன் போதாமையை உணர்ந்து, அதிலிருந்து வேறொரு கவிதை அனுபவத்துக்குச் செல்லும்போதுதான் அது உண்மையான மாற்றாகும்.
***

