உள்ளடக்கத்திற்குச் செல்ல
21.11.2026

வண்ணச்சீறடி : விடுதலை மறைக்கும் உண்மைகள்

விடுதலை மறைக்கும் உண்மைகள்

ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பல்வேறு பரிமாணங்களே இந்த நாவல் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். எனினும், முன் பின்னான கதைக் சொல்லாடலில், தர்மு பிரசாத்தின் மொழி வழியே ஒன்றது அத்தியாயங்களையும் கடந்த பின்பு, பெரும் போருக்குப் பின்னான அயர்ச்சியும், ஆழ்ந்த உறக்கம் தேடும் மனநிலையும் வாசகருக்கு வாய்க்கும்.

மொழி வழியான ஆதிக்கம், நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்து உரிமைக்கான அமைதி வழிப் போராட்டங்கள் பயனளிக்காத நிலையில், நிலத்தின் பூர்வகுடி என்ற வரலாற்றுப் பெருமித உணர்வோடு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகிறது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. அதன் விளைவுகள் தம்மளவில் மிகவும் மோசமானவை என்பது உணரப்படும்போது, எழும் அக்கறைகள், வெவ்வேறு வகையில் எதிரொலிக்கின்றன. கணவன், மூத்த மகன், உறவினர்கள் என வரிசையாக ஆயுதத்துக்கு இரையாகும்போது தாய்க்குள் நிகழும் மனப்போராட்டம் ஒருகட்டத்தில் வெகுண்டெழ, அவரைப் போலவே பாதிக்கப்பட்ட தாய்மார்கள் ஒன்றிணைந்து ஆயுதத்தைக் கையிலெடுக்கும் தருணம், விடுதலைப் போராட்டங்களின் இருள் பக்கங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

உணர்ச்சிப் பெருக்கில் ஆயுதம் ஏந்துபவர்கள், இயக்கத்தில் சேராவிட்டால் நிலம் மீதான பற்றுக் கேள்விக்குள்ளாகும் என்ற தயக்கத்தில் ஆயுதத்தைத் தரிப்பவர்கள், வரலாற்றுப் பெருமிதங்களில் மயங்கியவர்கள், தியாகம் என்பது கடமை என்று மூளைச் சலவை செய்பவர்கள், காதலுக்காக இயக்கச் சீருடை அணிந்தவர்கள் என விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு உடல்களையும்; அவர்கள் பிறந்த, வளர்ந்த, போராடிய, குண்டுபட்ட, ஒளிந்துகொண்ட, மாண்டு, புதைக்கப்பட்ட நிலங்களையும் தன் ஆழ்ந்த விவரணைகளுடன் புனைவாக்கியிருக்கிறார் தர்மு பிரசாத்.

— சுடராழி

நன்றி : இந்துத் தமிழ் நாளிதழ்