உள்ளடக்கத்திற்குச் செல்ல
24.10.2026

கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி

கே.டானியல் ஈழ இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டு வெளியை எழுதியவர்களுள் மிக முக்கியமானவர். அவரளவுக்கு நுட்பமான பண்பாட்டுக் கூறுகளுடனான சமூகச் சித்திரத்தைத் தங்கள் புனைவுகளில் மிக விரிவாகவே எழுதியெடுத்திருப்பவர்கள் ஈழத்தில் மிக அரிது. அதிலும் யாழ்ப்பாணத்தில் சொற்பம்.  கே.டானியல் அளவிற்கு யாழ் சமூகத்தை விரிவாக எழுதியிருக்கும் இன்னொருவர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ).  இவர்கள் இருவரது படைப்புகளிலும் யாழின் பண்பாட்டு அகம் ஒன்று உயிர்ப்புடன் விழித்திருக்கிறது. இருவரும் எழுதியிருப்பது நாம் காலத்திற்கு முன்னரான யாழ் சமூகச் சித்திரம்.  குறிப்பாக சாதிய வேறுபாடுகள் மிக வெளிப்படையாக இருந்த யாழ்ப்பாணச் சமூகம். அதன் அத்தனை அடித்தள, மேற்தளக் கூறுகளையும் இருவரும் மிக நுட்பமாகவே எழுதியிருக்கிறார்.  அப்படிச் செறிவான தகவல்கள், நுட்பமான சொந்த வாழ்க்கை அனுபவங்களூடாக  இருவரும் உருவாக்கியளித்திருக்கும் சமூகச் சித்திரமே நாம் யாழ் சமூகத்தைப் புரிந்து கொள்ள எம்மிடம் இருக்கும் பண்பாட்டு ஆவணங்கள்.

இந்த வருடம் கே.டானியலின் நூற்றாண்டு (1926-2026). அவர் மறைந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன.  கே.டானியல் தன் படைப்புக்களில் முன்வைத்த சமத்துவ சமுதாயம் நோக்கிய கனவும், சமூக மாற்றமும் கூட இன்று வெகுவாகப் பின்னகர்ந்துவிட்டன. அவரது படைப்பின் மையமான முற்போக்கு யதார்த்தவாத அலை மெள்ள ஓய்ந்து விட்டது. அதன் மனிதாபிமானத்தின் சீற்றமும் தணிந்துவிட்டது. ஆனாலும் கே.டானியல் படைப்புகள் தொடர்ந்தும் விரிவாகப் படிக்கப்படுகின்றன.  அதற்கு மிக முக்கிய காரணம் அவர் தன் படைப்புக்களில் உருவாக்கியளிக்கும் நுண் தகவல்களிலாலான பண்பாட்டு வெளி. யாழின் சமூகச் சடங்குகள், சாதிய வழமைகள், உணவுமுறைகள், வழக்காறுகள், செலவாடைகள், விவசாயம் என அனைத்துத் தளங்களிலும் கே.டானியல் விரிவான  சமூகச் சித்திரங்களை எழுதியிருக்கிறார். அதுவே ஈழ இலக்கியத்தில் அவரது பிரதான இடமும் கூட.

கூடவே கே.டானியல் நான் விரும்புவதுமாதிரியான ஒரு முழுமையான எழுத்துக்காரர். தீவிரமான சமூகச் செயற்பாட்டாளராகவும், உணர்வு வேகமும் சிந்தனைத் தீவிரமுமான இடதுசாரியாகவும் வாழ்ந்திருக்கிறார். அவரது கடிதங்கள், கட்டுரைகளில் இழையோடும் சமூகக் கோபம் ஒரு செவ்வியல் எழுத்தாளனின் வெம்மை எனலாம். ஆக கே.டானியல் இளம் எழுத்தாளர்கள் பின் தொடரக் கூடிய வசீகரமான ஆளுமையும் கூட.

கே.டானியல்  நூற்றாண்டில் அவரது மொத்த நாவல்களையும் கருப்புப் பிரதிகள் வெளியிட்டிருக்கிறது. இது கருப்பு பிரதிகளின் மகத்தான பணிகளுள் ஒன்று. அதைச் சாத்தியமாக்கிய கருப்பு நீலகண்டனுக்கு நன்றிகள். கே.டானியல் படைப்புகள் ஈழத்தில் இனும் பரவலாகக் கிடைக்க ஆவன செய்யவேண்டுமென நீலகண்டனை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

புத்தக வெளியீட்டு அரங்கில் கே.டானியலின் படைப்புகளில் ஊடுபாவியிருக்கும் பண்பாட்டு கூறுகளைப் புரிந்து கொள்ள; அவரது காலத்தய சமூக, வரலாற்றுச் சித்திரத்தை தொட்டுப் பேசிய சிற்றுரை.