உள்ளடக்கத்திற்குச் செல்ல
24.11.2026

தர்பாரி ராகம் :  உண்மையும்,  கொஞ்சம் மேலான உண்மையும்.

நவீனத்துவ படைப்புகளின் ஆதார இயல்புகளுள் ஒன்று, விமர்சனம் மட்டுமான பார்வை. விமர்சனங்கள் கடும் சீற்றமாக, அறக் கோபமாக, எள்ளலாக, கசப்பாக, கரிய பகிடியாகப் பலவிதங்களிலும் அப்படைப்புகளில் வெளிப்படும். நவீனத்துவ விமர்சனங்கள் மரபை, நம்பிக்கைகளை, சமூக விழுமியங்களை, மதிப்பீடுகளை,  வாழ்க்கை முறையை தங்கள் சமூக விமர்சனங்களூடே கடுமையாக நிராகரிக்கும். விமர்சனமே அதன் ஆதார விசையோ என எண்ணும் அளவிற்கு அவற்றில் விமர்சன வீச்சுக் கூரியதாக இருக்கும். ஆனால் புனைவுகளில் வெறுமனே ‘நிராகரித்தல்’ போதுமானதல்ல. அவை நிகழ ஓர் எதார்த்த வாழ்க்கைச் சூழல் வேண்டும். விரிவான வாழ்க்கைச் சித்திரங்கள் ஊடே புனைவுக் களங்களை நம்பகமான மொழியில் உருவாக்கி அளிக்கவேண்டும். அத்தகைய நம்பகமான புனைவுச் சூழலில் காலூன்றி நின்றபடியே விமர்சனங்கள் எழ வேண்டும். நம்பும்படியான நிகர் வாழ்வனுபவச் செறிவு புனைவுகளில் உருவாகிவரவில்லை என்றால் வாசகர்கள் சலிப்படைவார்கள். அத்தகைய புனைவுகளில் வெளிப்படும் விமர்சனங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் கொள்வார்கள். அது அவர்களை புனைவுகளுள் நுழைய முடியாமற் செய்யும். ஆக விமர்சனங்களுக்கு அப்பாலான ஓர் செறிவான வாழ்க்கையனுபவம் அந்தப் படைப்புகளில் உருவாகியிருக்க வேண்டும். வாழ்வது போலான அசலான வாழ்க்கை, சமூகச் சித்திரங்களூடே வாசகர்களுடன் நவீனத்துவ பார்வை விமர்சனங்களுடன் உரையாடும்  பல இந்திய நாவல்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைக்கின்றன. அவை திரட்டியளிக்கும் விரிவான வாழ்க்கைப் பார்வை, பண்பாட்டு நோக்கு, சமூகச் சித்திரங்கள் அவற்றில் ஆதாரமாக வெளிப்படும் நவீனத்துவ விமர்சனங்களையும் மீறி புனைவனுபவமாக விரியக் கூடியனவாக இருக்கின்றன. இந்த அம்சங்களே அந்தப் ‘பழைய’ நாவல்களை இன்று வரையும் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசிக்கச் செய்கின்றன.

மேற் சொன்ன நவீனத்துவ இயல்புகளுக்கு வெளியே சற்றே விலகலுடன் இருப்பது தர்பாரி ராகம் நாவல். அது காலகட்டத்தால் நவீனத்துவ நாவல். அதன் ஆதார விசையும் நவீனத்துவ நாவல்கள் போல விமர்சனம் மட்டுமேயான பார்வை. அதாவது தர்பாரி ராகத்தின் மைய உந்துதல் விமர்சனமே. ஆனால் அந்தச் சமூக விமர்சனங்கள் கருத்தாகவோ தீர்ப்பாகவோ மட்டும் வெளிப்படுவதில்லை; அது சமூகத்தின் இயல்பான நடத்தை போல உருமாறியிருக்கும் சீரழிவை உயிரோடு நிறுத்துவதன் வழியாக வெளிப்படுகிறது. கூடவே தர்பாரி ராகம் பிற யதார்த்தவாதப் பெருநாவல்கள் போல விரிவான வாழ்க்கைச் சித்திரங்களையோ, பண்பாட்டு சித்தரிப்புகளையோ,  குடும்ப வாழ்வு, உணர்ச்சி உறவுகள், பண்பாட்டு விவரணைகள் வழியாகத் தன்னுடைய புனைவுலகை உருவாக்குவதில்லை; மாறாக சமூக நிறுவனங்களின் செயல்பாடு, அதிகார உறவுகள், அன்றாட அபத்தங்கள், அரசியல் மொழி, மனிதர்களின் கீழ்மை ஆகியவற்றின் வழியாகத் தன் வாழ்வுலகை உருவாக்குகிறது. அதனால் அது  வாசகர் நம்பும்படியான எதார்த்தவாத நாவல்கள் போல சித்தரிப்பதில்லை. அதாவது அதனால் அதன் எதார்த்தம் குடும்ப வாழ்வின் அல்லது பண்பாட்டு விவரணைகளின் செறிவிலிருந்து உருவாவதில்லை; சமூக நிறுவனங்களின் அன்றாட அபத்தமான இயக்கத்திலிருந்தே உருவாகிறது. கூடவே  அது கடந்த கால மதிப்பீடு, விழுமியங்களை அல்ல அதன் சமகால  சூழலையே விமர்சிக்கிறது. பகிடி செய்கிறது.  அந்த வகையிலே பிற யதார்த்தவாதப் பெரு நாவல்கள் அளவிற்கு மிக முக்கியமான நாவல் ஸ்ரீலால் சுக்ல எழுதிய தர்பாரி ராகம். அது சிவ்பால்கஞ்ச் எனும் கிராம வாழ்க்கையை புனைவதூடாக ஓர் இந்திய மாதிரியை நமக்கு உருவாக்கி அளிக்கிறது. அதன் காலகட்டம் நேருவிய லட்சியவாத அலை வடிந்து அதன் போதாமைகள் மேலெழுந்து வந்த காலம். சனநாயகச் சமூக நிறுவனங்கள் வேடிக்கையாக தெரியத் தொடங்கிய காலகட்டம். கேலியுடனும், விளையாட்டுத்தனத்துடனும் நாம் எல்லோரும் அதில் பங்கெடுக்கத் தொடங்கிய காலம்.

தர்பாரி ராக நாவலை சுதந்திர இந்தியாவின் சனநாயக ‘சீரழிவின்’ மீதான முதன்மையான விமர்சன நாவல் எனலாம். பெரும் கனவும், லட்சிய உத்வேகமுமாக எழுந்த இந்தியாவின் அரசியல், சமூக, பொருளியல் எழுச்சிக்கான பெரும் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்து, கதையாய், பழங் கனவாய் சோர்ந்து சிறுத்துவிட்டதொரு அகாலத்தின் விமர்சனக் கீற்று அந்த நாவலில் வெளிப்படுகிறது.  அடிமட்ட சமூக நிறுவனங்கள் மீதும் கசப்பும், ஏளனமும் கசப்புடன் பதிவாகிறது. குறிப்பாக சனநாயக அரசியல், நீதித்துறை, நிதி, காவல், கல்வி என அதன் அனைத்து தளங்களிலும் ஊழலும், பொறுப்பின்மையும், அசண்டையும் துலக்கமாக பகிடி செய்யப்படுகிறது. இத்தகைய சனநாயக உரிமைகளுக்கெல்லாம் இன்னும் இந்தியச் சமூகம் தயார் இல்லையே என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

தர்பாரி ராகம் செவ்வியல் நவீனத்துவ நாவல்கள் போல கடந்த கால விழுமியங்கள், வாழ்க்கை முறையை பகிடி செய்யவில்லை. அது தன்னுடைய சம கால சமூக நிறுவனங்களில் புரையோடியிருக்கும் அடிமட்ட சனநாயகத்தின் வீழ்ச்சியை, மக்களின் பொறுப்பின்மையை, அவர்களின் ஊழல் விருப்பை அல்லது பங்களிப்பை,  சீரழிவை  பகிடி செய்கிறது. இடித்துரைக்கிறது. தர்பாரி ராகத்தின் சிவ்பால்கஞ்சில் கல்விச்சாலை இருக்கிறது. கூட்டுறவுச் சங்கம் இருக்கிறது. பஞ்சாயத்து இருக்கிறது. தேர்தல் இருக்கிறது. காவல், நீதி, நிர்வாகம் என சுதந்திர இந்தியா பெருமையுடன் நிறுவிக் காட்டிய எல்லா அமைப்புகளின் சிறு வடிவங்களும் அங்கு இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே மக்களின் பொது வாழ்வை உயர்த்தும் நிறுவனங்களாக இயங்குவதில்லை. அவை வைத்யார்ஜி போன்ற உள்ளூர் அதிகார மையங்களின் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கின்றன. அவற்றுள் இயங்குகிறவர்களும் இந்தச் சீரழிவுக்கு எதிரானவர்களல்ல; அதனூடாகத் தமக்கான சிறு வெற்றியைப் பெற முயல்பவர்கள். இந்த இடத்தில்தான் தர்பாரி ராகத்தின் பகிடி ஒரு கிராமத்தைக் கடந்த இந்திய மதிப்பீடாக விரிகிறது. 

ஈழப் புனைவுகளுள் பெரும் விழுக்காடு மனிதாபிமானத்தின் எளிமையான குரலாக, அநீதிக்கு எதிரான அறக்கோபமாக செயற்கையான ’மாதிரி’ கதை சம்பவங்களாக, முதிராத முற்போக்குக் கருத்துக்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. சிடுக்கும், முரணுமான வாழ்க்கையை விரிவாகச் சித்தரித்துச் செல்லும் பெருநாவல் வரிசை நம்மிடம் இல்லை. சலிப்பூட்டக் கூடியதாக வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் நுண்மையாகச் சித்தரிக்கும்,  உணர்ச்சி மோதல்களை, சீரழிவுகளை,  பண்பாட்டு வீழ்ச்சிகளை செறிவாக அடுக்கி உருவான நாவல் அலையும் நம்மிடம் உருவாகவில்லை.  தர்பாரி ராகம் போன்ற கூரிய சமூக விமர்சனத்தை வாழ்வுலகாக மாற்றிய நாவல் வரிசையோ, அல்லது மரபை பண்பாட்டை அவற்றின் சத்தான கூறுகளைக் கொண்டே கூர் தீட்டிப்பார்க்கும் செறிவான புனைவனுபவங்களைக் கொடுக்கும் நாவல் வரிசையோ நம்மிடம் இல்லை. அல்லது  மிகச் சொற்பமாகவே இருக்கின்றன. ஒரு சில சிறுகதைகள் மட்டும் அத்தகைய வீச்சை அடைந்திருக்கின்றன. பிற மொழி நாவல்களுடன் ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கை மிகச் சொற்பமே. அதனால் புனைவுகளில் நாம் இழந்தவை மிக அதிகம். இன்று வரை அந்த வெற்றிடத்தின் எதிர்மறையான தாக்கம் எங்கள் வாசிப்பில் இருக்கிறது. அதனால் வாசகர்கள் என்ற ஒரு தரப்பே இல்லாமல் இருக்கிறது. வாசிப்பு இயக்கமாகவோ,  புனைவுகள் செயலூக்கமிக்கப் பண்பாட்டுச் செயற்பாடாகவோ உருமாறவில்லை. தீவிரமும், தொகுப்புப் பார்வையும் கொண்ட படைப்பு வரிசை இல்லை. பண்பாட்டின் அடி வேர்களை சிறிதேனும் அசைக்கும்  குரல்கள் மேலெழ முடியாமைக்கும் இந்த தேங்கிய குட்டைச் சூழலே காரணம்.

ஈழத்தில் புனைவு வாசிப்பு வெறுமனே  கதையைத் தெரிந்து கொள்வதிலே ஆர்வமுள்ளதாக இருக்கிறது. அப்படி வெறுமனே தெரிந்து கொள்வதையே வாசிப்பின் உச்சமாகக் கருதுகிறது. புனைவு நிகழும் களமோ, அல்லது அந்தக் களத்தின் நுண்மையான பண்பாட்டுக் கூறுகளோ, ஊடும் பாவுமான வாழ்க்கை சித்தரிப்புகளோ அவர்களுக்கு முக்கியம் அல்ல. புனைவில் நிகழும் கதையைத் ‘தெரிந்து’ கொள்வதை விட புனைவை நிகர் வாழ் அனுபவமாக்கும் வாசிப்பே இலக்கியத்தின் உயிர்நாடி. இத்தகைய வாசிப்புப் பயிற்சியின்மைக்கு மிக முக்கிய காரணம் எங்களுடைய கலை இலக்கிய வரலாற்றில் அப்படியான அனுபவவிரிவைக் கொடுக்கும் பெரு நாவல்கள், விரிவான பண்பாட்டுச் சித்திரங்களை அளிக்கக் கூடிய புனைவுகள் இல்லை. காரணம் நவீனத்துவ விமர்சன அலை ஈழத்தில் செயற்கையான ‘மாதிரி’ கதைமாந்தர்கள், கதைச் சம்பவங்களையே அதிகமும் எழுதியிருக்கிறது. மிகு கற்பனையான ஒற்றைபடையான கதாபாத்திரங்கள், நுட்பமான பண்பாட்டுச் சித்திரமற்ற வாழ்க்கைச் சூழல், நுண் தகவல்களால் உருவாகாத புறச் சூழல் என இதன் போதாமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மொழிபெயர்ப்பில் கிடைக்கும் பிற மொழி யதார்த்தவாத நாவல்களை படிக்கும் தோறும் அவற்றின் அவசியமும், பண்பட்டுத்தேவையும் சிரசில் உறைக்கிறது. 

ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம் நம் விமர்சன மரபிற்கு மிக நெருக்கமான புனைவு. ஆனால்  நம்முடைய புனைவுகளால் தர்பாரி ராகம் நாவல் அடைந்த அக வீச்சையோ, காலம் கடந்து நிற்கும் சாசுவதமான தன்மையையோ, இயல்பான பகிடியையோ, சமூக நிறுவனங்களை நுட்பமாக சித்தரிக்கும் மேதமையையோ அடைய முடியவில்லை. நம்முடைய கடந்த காலப் புனைவுகளில் வெளிப்பட்டிருக்கும் ‘முற்போக்கு விமர்சனம்’ மட்டுமான தன்மைக்கு அப்பாலான ஒரு ரசவாதம் தர்பாரி ராகத்தில் நிகழ்ந்திருக்கிறது. அது நேரடியாக சமூக யதார்த்தத்தை ‘அப்பட்டமாகச்’ சித்தரிப்பதில்லை – அது நிகழ்வுகளின் கேளிக்கையை மிகையாக்கி அவற்றுள் உறைந்திருக்கும் அபத்தத்தைப் பிதுக்கிக் காட்டுகிறது. அத்தகைய சமூக நோக்கு, சமூக நிறுவனங்கள் மீதான எள்ளல் துல்லியமாக தர்பாரி ராகத்தில் மீட்டப்படுவதாலே அதனால் ஈழ புனைவுகள் அடைய முடியாத ஆழத்தையும், விரிவையும் அதனால் அடைய முடிந்திருக்கிறது. அதாவது தர்பாரி ராகத்தில் வெளிப்படும் கூரிய அங்கத விமர்சனம், மிகக் குறைவான சமூகப் பண்பாட்டுச் சித்தரிப்புகளுக்கு அப்பாலும் அதனால் இன்றுவரை ஆழமாகத் தாக்கம் செலுத்தக் கூடிய புனைவுவெளியை உருவாக்க முடிந்திருக்கிறது. அந்தப் புனைவு  உச்சமே எங்கள் புனைவுகள் ஈட்டத் தவறவிட்ட இடம்.

புனைவுகள் குறித்து பிரபலமான ஒரு கூற்று உண்டு. உலகில் எழுதப்பட்ட பெரும்பாலான புனைகதைகளின் அடிப்படை ஒன்றே ஒன்று தான். ஒருவர் புதிதாக ஓர் ஊருக்கு வருகிறார். உடனே அங்கே நாவலோ, கதையோ ஆரம்பித்துவிடும். அதாவது ஊர் அல்லது இடம் சலனமற்று நூற்றாண்டுகளாக தேங்கி அப்படியே இருக்கிறது. அங்கே ஒரு புதியவரின் பிரசன்னம் நிகழ்கிறது. புதியவரிடம் இருப்பது வேறுபட்ட வாழ்க்கைக் கோணம், பார்வை.  அந்த மாற்றுப் பார்வையே தேங்கிய நூற்றாண்டுகளின் தனிமையில் விழும் சலனம். அதனுடன் எதிர்வினையாற்றியே ஊர் உயிர்ப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது. அந்த புதியவனுடன் எதிர்வினை புரிந்தே அந்தக் கதையோ நாவலோ வளர்கிறது. தர்பாரி ராகத்தின் அடிப்படையும் அதுதான். அதன் கதாநாயகன் ரங்கநாத். அவன் வரலாற்றில் பட்டம் பெற்றவன். தன்னுடைய உடல் நலத்தை மீட்க மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப கிராமத்திற்கு வருகிறான். அங்கே அவருடைய வைத்திய மாமனார் வசிக்கிறார். ஆனால் தர்பாரி ராகத்தில் இந்த நிகழ்ச்சிச் சுழல் எதிர்வளமாக நிகழ்கிறது. சிவ்பால்கஞ்சுக்கு புதிதாக வரும் ரங்கநாத், மற்ற நாவல்களில் நிகழ்வதுபோல அந்த ஊரின் தேக்கத்தை உடைக்கும் நாயகனாக மாறுவதில்லை. முதலில் அவன் அதை வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாகவே இருக்கிறான். பின்னர் அதன் அபத்தங்களையும் கீழ்மைகளையும் உணர்ந்து கொண்டே, அவற்றை மாற்ற முடியாத செயலற்ற சாட்சியாகச் சுருங்குகிறான். நகரக் கல்வியும் வரலாற்றறிவும் நவீன மனச்சாட்சியும் அவனிடம் இருக்கின்றன; ஆனால் அவை சிவ்பால்கஞ்சின் அதிகார வலைக்கு முன் செயல்வல்ல சக்தியாக உருமாறுவதில்லை. இந்த ‘செயற்பட முடியாத’ தன்மைதான் ரங்கநாத்தை இந்திய அறிவுஜீவியின் மிகக் கசப்பான உருவகமாக மாற்றுகிறது. 

ரங்கநாத் செயலற்ற நவீன அறிவுஜீவியின் உருவகம் என்றால், அவனுடைய மாமனார் வைத்யாஜி சிவ்பால்கஞ்சின் செயலூக்கமிக்க அதிகாரத்தின் உருவகம். அவர் சட்டத்திற்கு வெளியே நின்று சமூகத்தை ஆளும் முரட்டு வில்லன் அல்ல. மாறாக கல்வி, கூட்டுறவு, பஞ்சாயத்து, தேர்தல் என எல்லா சனநாயக நிறுவனங்களுக்குள்ளும் இயல்பாக ஊடுருவி, அவற்றின் மொழியிலேயே தன் அதிகாரத்தை நிகழ்த்துபவர். அதனால்தான் அவர் ஒரு தனிமனித வில்லனாகச் சுருங்காமல், சுதந்திர இந்தியாவின் அடிமட்ட அரசியல் இயக்கத்தின் உருவமாக விரிகிறார். இந்த இருவரும் இரு வேறு அந்தங்களிலும் நின்றிருப்பவர்கள். நாவல் முழுவதும் இருவரும் செயலும் – செயலின்மைகளும் பகிடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் வெளிப்படும் அபத்த தரிசனத்தின் சாட்சியாகிறார்கள்.

 தர்பாரி ராகம் நாவலின் பகிடி அதன் முதல் வரியிலேயே தொடங்கிவிடுகிறது. அது தேங்கிய சமூகத்தின் இயல்பிலேயே ஊடுருவி இருக்கும் மனநிலை மீதான அங்கதம் அல்லது விமர்சனமாக இருக்கிறது.  நாவலின் ஒவ்வொரு வரியிலுமே அப்படியான சொற்களின் அர்த்த வேறுபாடுகளைக் காண முடியும். இதுவே நாவலின் ஒட்டுமொத்த உடலாகவும் இருக்கிறது. 

// நகரத்தின் எல்லை இது. இங்கிருந்து தொடங்குவதுதான் இந்தியக் கிராமம் எனும் பெருங்கடல்// 

இதுதான் நாவலின் தொடக்க வரி.  கிராமத்துக்குச் செல்லவேண்டிய ரங்கநாத் இரயில் நிலையம் வருகிறான். வழமையாக இரண்டு மணிநேரம் தாமதித்து வரும் இரயில் அன்று ஒன்றரை மணி நேரம் மட்டும் தாமதித்து வந்து அவனை ஏமாற்றிவிட்டது. அந்த ‘ஏமாற்றத்துடனே’ அவன் சிவ்பால்கஞ்ச்  கிராமம் நோக்கி வாடகை டிரக்கில் செல்கிறான். வாடகை வண்டி ஓட்டுநருக்கு வீதி பொது இடம் என்பதே, அவரைப் போலவே வேறு பலரும் பயணம் செய்யும் இடம் என்றே நினைப்பு இல்லை. வீதியின் ஓரமாக மக்கள் நடந்து செல்வார்கள் என்ற யோசனையும் அவருக்கு இருப்பதில்லை. அவரது வண்டிக்கான தனித்த சாலை என்ற இயல்புணர்வுடன் ஹெலிகாப்டர் மாதிரி வண்டியை ஓட்டுகிறார். அந்த வண்டியோட்டி ரங்கநாத் ஒரு சி.ஐ.டி என நம்புகிறான். ஆகவே அவனிடம் பணிவும், கூழைக் கும்பிடுமாக இருக்கிறான். அதிகாரத்தில் உள்ள நபர்களின் மீது இயல்பாக வரக்கூடிய பணிவு. ஆனால் அவன் ரங்கநாத்தை பார்த்த உடனேயே சிஐடி என   அடையாளம் கண்டு கொண்டது ரங்கநாத் அணிந்திருந்த உடையின் மூலம்.  இந்த உடைக் காரணம்தான் விஷேடமானது.  “சிஐடி இல்லை என்றால் இந்த கதர் சட்டையெல்லாம் ஏன் போட்டிருக்கிறீர்கள்” என்கிறான் வெறுப்புடன். சுதந்திர இந்தியாவில் சிஐடியினர் தான் மாறுவேடத்தில் கதர்வேட்டி சட்டை அணிகிறார்கள். காந்தியின் கதர்.  ரங்கநாத் சிஐடி இல்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின் ஓட்டுநரின் முகபாவம், கவனிப்பு எல்லாம் மொத்தமாக கீழிறங்கிவிட்டது. அதாவது ரங்கநாத்தை ஒரு புழுவைப்போல கவனித்தான். அதிகாரியாக இருக்க முடியாத நீயெல்லாம் ஒரு மனிதனா என்ற தோரணை. அதுவும் இயல்பானதுதானே.

 தர்பாரி ராகம் என்றால் நேரடி அர்த்தம் அரச தர்பாருடைய ராகம். இங்கே ராகம் என்றால் நிச்சயமாக குழைவான இசையல்ல. அதிகாரத்தின் இரும்பு ராகம். சனநாயகம் போன்ற புதிய வஸ்து இந்தியாவில் இசைக்கும் ராகம்.  

நாவலில் கூரிய அங்கதங்கள் இரண்டு வழிகளில் உருவாகிவருகிறது. ஒன்று ஸ்ரீலால் சுக்லா யதார்த்த எல்லைகளை குறித்துக் கவலை கொள்ளவில்லை. அதனால் நிகழ்வுகளின் வேடிக்கைகளை மிகையாகச் சித்தரிக்கிறார்.  அதனூடாகச் சம்பவங்களை  வேடிக்கையாக கோமாளிக்கூத்தாக அங்கதத் தொனியில் மாற்றிவிடமுடிகிறது. ஒரு கட்டத்தில் அந்த கிராமத்தின் மொத்த இயல்புமே அதுதானே; அதில் என்ன சந்தேகம் என்று நாமே நம்புமளவிற்கு அவரது அங்கதத் தொனி மொழி நம்மை நுட்பமாக ஏமாற்றிவிடுகிறது. நுட்பமான அங்கதம் அவர் விபரிப்பிலேயே இயல்பில் இருக்கின்றது. // இன்ஸ்பெக்டர் அமர்ந்துகொண்டிருந்த, இல்லை சாய்ந்து கொண்டிருந்த அந்த ஆசனம் முகலாயர் காலத்தில் சிம்மாசனமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அது தேய்ந்து மாய்ந்து சாய்வுநாற்காலியாக மாறிவிட்டிருக்கிறது// //அதிகாரி போல பியோனும், பியோன் போல அதிகாரியும்//  // படிக்காதவர்கள் கொம்பும் வாலும் அற்ற மிருகம் என்ற கூச்சல் இந்த நாட்டில் எழுந்ததல்லவா?//   அவர் நிகழ்வுகளின் தொடர்ச்சியை மிக அரிதாகவே கவனிக்கிறார். ஆனால் இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலுக்கு இடறலாகவில்லை. அது வாசிப்பைத் துண்டிப்பதோ, குழப்புவதோ இல்லை. ஒருவகையில் அதன் அங்கதத்திற்கு அதன் கனமில்லா நிகழ்வுகளின் சிதறலும் காரணமாகிவிடுகிறது. 

இரண்டாவது தன்மை எளிமையான கிராம அறியாமைக்கு ஸ்ரீலால் சுக்லா கொடுக்கும் அர்த்த வேறுபாடுகள்.

“வண்டி ஓடியது.. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தி வேளையின் மங்கலான ஒளியில் பாதையின் இருபுறமும் உருட்டிவிட்ட மூட்டைகள் மாதிரி தெரிந்தன. மூட்டைகள் அல்ல; பெண்கள்தாம் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. மிகவும் சாவகாசமாய் அரட்டை அடித்தவாறு காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்கள் அதே சமயத்தில் மல, மூத்திரமும் கழித்துக் கொண்டிருந்தார்கள்.”  ஆக கிராமம் வந்து விட்டது.  சும்மா பேசிக் கொண்டிருப்பவர்கள் மலமும், மூத்திரமும் கழிக்கிறார்கள். இந்தவகை எடுத்துரைப்பின் மூலம் ஒரு கிராமத்தின் மொத்த சனநாயக அடிப்படை நிறுவனங்களில் புரையோடியிருக்கும் பாவனைகளைக் பகிடி செய்கிறார். அவை இயல்பானவை என்பது போலவும், காலம் காலமாக இதுதானே நடைமுறை என்பது போலவும், இதையெல்லாம் ஏன் மாற்ற வேண்டும், எல்லாமே அதன் அதன் இயல்பில் மிக ‘நன்றாக’தானே இருக்கின்றன என்கிறார்கள் கிராமத்தவர்கள். அவர்கள் மாலைகளில் மசாலா போட்ட பங்க் கலக்கிக் குடித்துக் கொண்டு இனிமையான நூற்றாண்டுகளின் சோம்பலில் மூழ்கி வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறார்கள்.

நாவலில் வரும் பள்ளிக்கூடமாக இருக்கட்டும், பஞ்சாயத்து தலைமையாக இருக்கட்டும், பொதுமைதானமாக இருக்கட்டும், பொது நிலமாக இருக்கட்டும் யாருக்கும் எந்தக் கேள்விகளும் இல்லை. இராணுவக் குதிரைக் கொட்டில் பள்ளிக்கூடமாகிவிடுகிறது. மைதானத்தின் பாதி பள்ளிக்கூடத்தின் சொத்தாக இருக்கிறது. மிகுதி வைத்யர்ஜீ எடுத்துக் கொள்கிறார். ரங்கநாத்துக்கு ஊரார் காளி  சிலைமேல் கூடச் சந்தேகம் இருக்கிறது. “காளிக்கு மார்பில் கொஞ்சம் புடைப்பாக இருக்குமே, இது ஏதோ கிரேக்கச் சிற்பம் போல இருக்கிறது” எனச் சந்தேகிக்கிறான். அவன் சந்தேகிப்பது ஞாயம்தானே. ஆனால் ஊராருக்கு அது காளி சிலைதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருப்பதில்லை. அவன் கொஞ்சமாகப் படித்து தன்னுடைய பாரம்பரியப் பட்டறிவை தொலைத்துவிட்டவனாக எண்ணி அவன்மீது பரிதாபப்படுகிறார்கள். அவர்களது காளி அப்படித்தான் நெஞ்சில் கொஞ்சமும் சதையில்லாமல் இருக்கிறாள். என்ன செய்ய? 

காந்தியைப் பற்றிய குறிப்பு இப்படி வருகிறது- காந்தி என்ற ஒரு மகான் வாழ்ந்தார். அவர் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். பின் அவரை கொன்று திரிவேணி சங்கமத்தில் அவரு உடலையும், யாருக்கும் உதவாத அவர் கொள்கைகளையும் கரைத்துவிட்டு நாம் நிம்மதியாகத் திரும்பியிருக்கிறோம். 

ஊர் தலைவர் வைத்தியரும் கூட. அவர் பிரம்மச்சாரியத்தை தன்னுடைய வைத்திய நெறியாகப் பரிந்துரைக்கிறார். அது போது உடலை நலமாகப் பேண. அவர்  தன்னுடைய வீட்டு வேலையாளை பஞ்சாயத்து தலைவராக்குகிறார். தேர்தல் ஊடாகத்தான். வைத்தியரின் தயவில் தேர்தலில் நின்று, வென்று விடுகிறான். வென்றதும் ஊர் பிரமுகராகி, அரசு நிலத்தில் கொஞ்சத்தை தன் பரம்பரைச் சொத்திலிருந்து உருவுவது போல உருவிவிடுகிறான். பஞ்சாயத்து தலைவருக்கு இல்லாத நிலமா? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஊரார். யாருக்கும் எந்தக் கேள்வியும், மறுப்பும் இல்லை. அந்த நிலத்தில் கடை கட்டி,  கடைக்கு முதலாளியும் ஆகிவிடுகிறான். பாங் அரைந்துக் கொடுக்கும் வேலையாள் பஞ்சாயத்து தலைவராகி, கடைமுதலாளியும் ஆகாவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்.  ஊர்தலைவர் தனக்கு விசுவாசமான ஆசிரியரை பள்ளித் தலைமையாசிரியர் ஆக்குகிறார். ஊர்தலைவருக்கு விசுவாசமாக இருப்பதுதான் பள்ளித்தலைமை ஆசிரியராக நீடிப்பதற்கு அவருக்கு இருக்கும் ஒரே ஒரு தகுதி. என்ன அந்தத் தகுதிபோதாதா என்ன?  இப்படிப் பல.. போலீஸ் அதிகாரி. இவர்களது தொல்லை தாங்க முடியாமல் மாற்றலாகிப் போகிறார். வழக்குகளுக்கு பொய்ச்சாட்சி சொல்பவர். பொய்ச்சாட்சி சொல்ல அவர் ஏறி இறங்காத நீதிமன்றங்களே இல்லை. அவரும்  எந்தக் குற்றம், வழக்கு என்றெல்லாம் கவலை இல்லை. பொய்ச்சாட்சியை அபாரமாக நம்பும்படி சொல்வார். அவருக்கும் நீதிபதிக்குமான உரையாடல்கள் நீதியில் நம்பிக்கை உள்ளவர்களின் தடித்த தோலிலும் கூடக் கொஞ்சம் அரிப்பை எழுப்பக் கூடியவை. சொறிந்து கொடுத்தால் சுகமாக இருக்கும் அரிப்பு. 

நாவலில் முக்கியமான போர் நிகழ்வது லங்கட்டிற்கும் அரச அதிகாரிக்கும் இடையில். ஒருவகையில் அதுவொரு துவந்த யுத்தம். பாரதப் போர் அளவுக்கு நிகழும் ‘காவிய’ போர். ஒன்றும் இல்லாத பிரச்சனைக்கான போர். அதுவும் சனநாயக அமைப்பில் இலகுவாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சனை. லங்கட் கபீர் பக்தன்; கபீரிடம் பாடிப் பாடி முறையிட்டுக் களைத்துவிடுகிறான். ஆகவே சிவில் வழக்கு தொடுக்கிறான். அந்த நீதிமன்ற வழக்குக்காக ஒரு பழைய நகல் அரச அலுவலகத்திலிருந்து வேண்டியிருக்கிறது. நகல் அதிகாரிக்கு சிறுதொகை கையூட்டாகக் கொடுத்தால் முடிந்திருக்கக் கூடிய பிரச்சனை. லங்கட்டும்  பரஸ்பரம் கையூட்டு வழக்கத்தை மீறாமல் கையூட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அவர் வார்த்தை தடித்துவிட, அரச அதிகாரி சபதம் எடுத்துவிடுகிறான். அதிகாரி சபதமெடுத்தால்; சாமானியனுக்கு ஆணவம் சீண்டப்படாதா; அவனும் நீ சட்டப்படியே நடந்துகொள் நானும் அதை ‘நேர்மையான வழியில்’ பெற்றுக் கொள்வதாக சபதமெடுத்துவிடுகிறான். அதாவது அதிகாரி சட்டப்படி கொடுப்பேன் என்கிறான். லங்காட்டும் சட்டப்படி பெற்றுக் கொள்வேன் என்கிறான்.  இந்த உச்சமான நாடகீய தருணம் போதாதா சனநாயக அமைப்பில் ஓர் காவியப்போர் நிகழ்வதற்கு?  பிறகு நிகழ்வது உண்மைக்கும் உண்மைக்குமான போர். எந்த உண்மையாவது அதிகாரியுடன் மோதி வெல்ல முடியுமா என்ன? அதுவும் கையூட்டு வாங்க மறுக்கும் ‘போலி நேர்மையான’ அதிகாரியுடன். அப்படியான பேரிடர்கள் சனநாயக அமைப்பில் எங்கும் நிகழ்ந்ததாக இதுவரையும் சரித்திரமில்லை. அரச இயந்திரம் சாமானியர்கள் மோதி வெல்லக் கூடாது என்பதற்காகவே கவனமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. அதற்காகவே அசண்டையும், பொறுப்பின்மையும் அங்கே உரமிட்டு வளர்க்கப்படுகின்றன. அதற்கு ‘தகுதியான’ அதிகாரிகளும் வாய்த்துவிட்டால், அந்த வினைத்திறனான அமைப்பால் ஒருபோதுமே தோற்றுப் போக முடியாது. லங்கட்டால் அந்த நேர்மையான அரச எந்திரத்துடன் மோத முடியவில்லை. அதிகாரியின் பக்கமிருந்து ஏராளம் தடைகள் மலைபோல எழுந்து வருகின்றன. ஆனால் அவன் சலித்துப் போகவில்லை. மனம் தளரவில்லை. கடிதம் போடுகிறான், மனுக் கொடுக்கிறான். நீதிமன்றம் செல்கிறான். கிட்டத்தட்ட ஒரு வழக்கறிஞராகும் அளவுக்கு அவனுக்கு அறிவு கிடைத்துவிடுகிறது. ஆனால் நீதி மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அதனால் என்ன? அப்படி இலகுவாகக் கிடைத்துவிட நீதி என்ன அவ்வளவு அற்பப் பொருளா? அது அரியது. அதுவும் லங்கட் போன்ற சாமானியர்களுக்கு அதுவெல்லாம் ஆடம்பர வஸ்து. வழமையாக தொலைந்து போகும் அவன் மனுவுக்கு, பதில் வருகிறது. அதாவது மனு நிராகரிக்கப்பட்டதாக. அதுவே பெரு வெற்றி என்கிறான் அவன். நாமும் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மனுக்கள் வழமையாக தொலைந்து போகும், கண்டுகொள்ள மாட்டார்கள்; ஆனால் அவனுக்கு பதில்வந்திருக்கிறது. அது போதாதா  அவன் தன் இருப்பிடத்தைக் கூட நீதிமன்ற வளவிலே அமைத்துக் கொள்கிறான். இலகுவாக வழக்கு நடத்தத் தோதாக. நாவலில் எந்த உண்மையும் தோற்பதில்லை. ஏன் அவை வெல்வதும் இல்லை. கொஞ்சமாக வளைந்திருக்கின்றன. ஆனால் அது வென்று விடும் என்ற அந்த அபார நம்பிக்கை கொடுக்கும் மன எழுச்சியில் எல்லாம் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த ‘அபார’ நம்பிக்கை இல்லையென்றால் நம்மால் வாழமுடியுமா என்ன? அதுதானே சனநாயகம் எமக்குக் கொடுத்திருக்கும் பெரிய வரம்.  

படித்த ரங்கநாத்தால் இந்த ஊராரின் விஷமத்தனங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் எங்கோ தொலைதூர நகரத்திலிருந்து வழிதவறி வந்துவிட்டவனாக உணர்கிறான். அவனது கல்வி, தகுதி எல்லாம் பொருளற்று சிறுத்து விடுகின்றன. அவனுக்கு ஞானம் கிடைக்கிறது. இதுதான் இந்த அமைப்புத்தான் அபாரமானது, அது மெதுவாகவேனும் ஒரு மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருக்கக் கூடியது. ஆக அது அப்படியே மெல்ல அசைந்து கொண்டிருக்கட்டும் என எண்ணிக் கொள்கிறான். தன் உடலையும், உள்ளத்தையும் வளர்த்துக் கொண்டு ஊர் திரும்புகிறான்.

தர்பாரி ராகத்தின் எள்ளல் கூரியது. முள் போல தைக்கக் கூடியது. சனநாயக அமைப்பின் சீரழிவுகளின், வீழ்ச்சியின் ஒவ்வொரு பக்கத்தையும் நுட்பமாகவும், என்று என்றைக்குமான விரிந்த பார்வையுடனும் முன்வைக்கக் கூடியது. எங்களது ஈழ நாவல்களும் அப்படியான கூரிய விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. ஆனால் அத்தகைய படைப்புகள் காலத்தால் பின் நகர்ந்துவிட்டிருக்கின்றன. அவை காலத்தை வென்று நின்றிருக்கக் கூடிய ஆழங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதே அவற்றின் போதாமைக்கு காரணம். அவற்றில் வெளிப்பட்டிருக்கக் கூடிய விமர்சனம் அந்த அமைப்பின் மேற்பூச்சை சுரண்டிப் பார்க்கும் தன்மையிலானவை. ஆனால தர்பாரி ராகம் அதன் அடியாழம் வரை தன்னுடைய அங்கதக் கொடுக்கை சுழற்றி அடிக்கக் கூடியது. இத்தனை காலம் சென்றபின்னும் அதன் அங்கதங்கள் பொருளற்றுப் போய்விடுவதில்லை, சமகாலத்தின் சனநாயக அமைப்புகளின் மோத முடியாத மந்தத்தின் ஏதாவதொரு குண இயல்பை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதை வேடிக்கையாக்கி எம்மை புன்னகைக்க வைக்கிறது. எங்கள் சீழ் பொருக்கை நம்மிடம் காட்டி புன்னகைக்க வைக்கும் ஒரு வகைக் குரூரம் வெளிப்படுவதாலே அது காலம் கடந்து நிற்கும் செவ்வியல் படைப்பும் ஆகிறது.

***

தர்பாரி ராகம்
ஶ்ரீலால் சுக்லா (ஆசிரியர்)
சரஸ்வதி ராம்நாத் (தமிழில்)
National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்

நன்றி  : கலைமுகம்