யாழ் நூலக மீள் திறப்புத் தடை விவகாரத்தில் சாதியத்தின் பங்கை மறுக்கும்; சயந்தன், சோமீதரன் மற்றும் விதை குழுமத்தின் புரிதல்களில் எங்கு சிக்கலும் போதாமையும் இருக்கின்றனவென்றால், அவர்கள் அதை நிறுவ முயலும் வழிமுறை மற்றும் ஆதாரங்களில் தான். அவை போதாமை நிறைந்தவை மட்டும் அல்ல மிக அபத்தமானவையும் கூட. எவ்வளவு அபத்தமானவை என்றால் அவர்களது வழிமுறை, ஆதாரத் தொகுப்பு முறையைக் கொண்டு உலகில் இருக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தி விட முடியும். அவர்கள் நூலக மீள் திறப்புத் தடையை ஒரு தனி நிகழ்வாகச் சுருக்கி விடுகிறார்கள். அதில் செல்வாக்குச் செலுத்தும் பிற காரணிகளையும் தனியானவையாகவும், தனி முரண்படுகளினால் இயங்குபவையாகவும் நிறுவ முயல ஆதாரம் தேடுகிறார்கள். நாளையே இவர்கள்; இளம்பரிதி, கூட்டாகப் பதவி துறந்த ஏனைய நகர சபை உறுப்பினர்கள், ஏன் ஆனந்தசங்கரியின் பார்வையைக் கொண்டுவந்தாலும் மீள் திறப்புத் தடையில் இழையோடியிருக்கும் சாதியத்தின் பங்கை மறுப்பதற்கான அபத்தமான ஆதரங்களாகவே அவை இருக்கும். ஏன் என்றால் இனவாதத்தையோ, இனவெறியையோ, சாதி மேலாதிக்கத்தையோ இத்தகைய ஆதாரங்கள் வழி நிறுவவோ, மறுக்கவோ முடியாது என்பதுதான் இதன் அடிப்படைக் காரணம். சமூக ஒடுக்கு முறையில் இருக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியையும், விளிம்பின் குரலில் நியாயத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளும் போதுதான் எம்மால் அதில் பொதிந்திருக்கும் ஒடுக்குமுறைகளை, சாதியத்தின் பங்கை விளக்க முடியும். யாழில் சாதியத்தின் இருப்பு, மற்றும் அமைப்பாக்கம், அது தன் வரலாற்றில் தலித் மக்களின் உரிமை, வாய்ப்புகளை எப்படிக் கையகப்படுத்துகிறது, நிர்வகிக்கிறது, மேலாதிக்கம் செய்கிறது போன்ற வரலாற்றுப்புரிதலில் இருந்துதான் நாம் அதை விளக்க முடியும்.
தேர்ந்த அமைப்பாகச் செயற்படும், தேவைப்படும் போது தன் மேலாதிக்கத்தை அதிகாரமாகத் திரட்டிக் கொள்ளும் சாதியத்தின் இயல்பை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே அர்த்தம். இதே கருவி, அறிதல் முறை, சமூக நோக்கைக் கொண்டு கிந்திட்டி மயானப் பிரச்சினை, கோயில் தேரை JBC இயந்திரம் மூலம் இழுத்தது எதிலும் சாதியத்தின் பங்கு இல்லை என்று உறுதியாக நிறுவி விட முடியும். சாதியம் அரூபமாக இயங்கக் கூடியது அதுவுமில்லாமல் அதன் வெளி, அதை ஆதிக்கம் செய்பவர்களால் சூழப்பட்டது. இந்தச் சமூகம் அதில் இருக்கும் சாதியத்தின் பங்கை இந்த ஆவணங்கள் வழி, வாய்வழித் தகவல்வழி நிறுவிட முடியுமாக இருந்தால் ஒட்டுமொத்த யாழின் அன்றாடத்திலும் படிந்திருக்கும் சாதியத்தை அப்படி விளக்கி விட முடியுமல்லவா? ஆனால், அது சாத்தியம் அல்ல சாதியத்தின் பங்கைத் துல்லியமாக வேறுபடுத்த நாம் ஆதிக்கத்தரப்பு கையளிக்கும் ஆதாரங்கள் வழி சென்றால், தவறான வழியில் தான் மிதப்போம். உங்களிடம் இருக்கும் சமூக நோக்கு, சாதியம் குறித்த புரிதல், சாதிய சமூக அமைப்புக் குறித்த வாசிப்பு, அதில் தலித்தின் நிலை, ஒரு தலித்திற்குக் கிடைக்கக் கூடிய அதிகாரவெளி எல்லாவற்றிலும் பெற்ற அனுபவங்களின் வழி, கற்ற அறிவின் வழி திரண்டிருக்கும் அறிதலைக் கொண்டுதான் விளக்க முடியுமே அல்லாமல் இப்படியான ஆதாரங்கள் வழி சென்றால் சாதியத்தின் பங்கை உணரவோ, பகுக்கவோ முடியாது. அதனாலே தான் யாழில் பல பிரச்சினைகள் சாதியப் பிரச்சினையாக இருந்தும் அவை வெறும் நிர்வாகச் சிக்கலாகவும், தனிப்பட்ட முரண்பாடுகளாகவும் உரையாடப்படுகிறது.
நூலக மீள் திறப்புத்தடை வெறுமனே ஒரு நிகழ்வு இல்லை, அதற்குத் தமிழ்த் தேசிய வரலாற்றில் ஓர் இடம் இருக்கிறது. அங்கு மறுக்கப்பட்டது தனியே செல்லன் கந்தையாவிற்கான மறுப்பு அல்ல தமிழ்த் தேசியத்தில் தலித் மக்களுக்கான இடம் குறித்த மறுப்பே என்பது அதன் சாரம். முன்னாள் யாழ்.மாநகரபிதா திரு .செல்லன் கந்தையா கோருவது நூலகத்தைத் திறப்பதற்கான உரிமையை மட்டும் அல்ல சாதியத்தின் பெயரால் மறுக்கப்பட்டிருக்கும் அனைத்து உரிமைகளையும் சேர்த்துதான் என்பது அதன் இன்னொரு பொருள். Black Lives Matter போராட்டங்களில் எப்படி George Floyd ஒட்டு மொத்த கறுப்பின மக்களின் பிரதிநிதியோ அப்படித்தான் இங்கு செல்லன் கந்தையாவும், அது அவர் சார்ந்த தனிநபர் பிரச்சினை அல்ல,அது வெறுமனே நூலக திறப்புக்கான கோரிக்கையும் அல்ல.
தமிழ்த் தேசியவாதிகள் மீள் திறப்புத் தடையை தங்கள் வரலாற்றுப் பெருமிதத்தின் மீது இருக்கும் கறையாகப் பார்க்கிறார்கள். அது கறை அல்ல. தமிழ்தேசியத்தின் இதயத்தில் இருக்கும் துளை. அது 2003ம் ஆண்டு நூலக மீள் திறப்புத் தடையோடு விழுந்த துளை அல்ல. தமிழ் தேசியத்தின் பிறப்பில் இருந்தே அதன் இதயத்தில் இருக்கும் துளை. அதை அவர்கள் மறைக்க, கடக்க முயற்சித்துக் கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள். அதன் கொதிநிலை வெடிப்புத்தான் 2003 நூலகத் மீள்திறப்புத் தடை. இதைத் தனி ஒரு நிகழ்வாகக் குறுக்கிக் கொண்டால் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை மறுக்கிறவர்கள் ஆவோம். அது, அதுவரை காலமும் அவர்கள் மூடி மறைக்க விழைந்த இதயத்தின் துளை வெளித்தெரிந்த தருணம் என்பது தலித் மக்கள் மீது தேசியத்தின் பெயரால் மூடி வைக்கப்பட்டிருந்த அவர்களது உரிமை, சுயமரியாதை, வளங்களுக்கான கோரிக்கை வெளிப்பட்ட தருணமேயன்றி வேறல்ல.
அந்த இதயத்தின் துளையை ஏன் அவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்களென்றால், இதயத்தில் இருக்கும் துளை தமிழ்த் தேசியத்தின் ஒட்டு மொத்தச் செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திக் கொண்டும், அதனை முனை குன்றச் செய்தபடியேயும் இருக்கிறது. கூடவே இவ்வளவு காலம் மூடி வைத்த தலித் மக்களின் இடம் தேசியத்துள் என்னவாக இருக்கிறது என்பதில் அது வந்தும் நிற்கிறது. அப்படி என்றால் புலிகளின் முஸ்லீம் வெளியேற்றத்தை தனியே புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடு என்று குறுக்கிவிட முடியுமா? இல்லை அமைப்பில் சிலரின் தனித்த முடிவு எனச் சுருக்க முடியுமா? இல்லைத் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலையின் இஸ்லாமிய வெறுப்பின் அல்லது மற்றமையின் மீதான வெறுப்பின் செயல் வடிவமாகப் புலிகள் இருந்தார்கள் எனக்கூற முடியுமா? ஒட்டு மொத்த தமிழ்ப் பெரும்பான்மை மனநிலையின் செயல்வடிவமாகப் புலிகள் இருந்தார்கள் என்பதற்கு என்ன ஆதரங்களை நாம் கொடுக்க முடியும்? ஏன் அதைக் கூட இவர்கள் கருவிகளைக் கொண்டு அமைப்பில் இருந்த ஒரு சிலரின் விருப்பம் அதற்கும் அமைப்பிற்கு தொடர்பில்லை, தமிழ் மக்களுக்குக் கூட பங்கு இல்லை என்பது வரை நீட்டிக் கொள்ளலாமே, ஆனால் அதில் இருக்கும் கயமையை நம்மால் புரிந்து கொள்ள முடியுமல்லவா?
இதை ஏன் தேசியத் தரப்பு ஆம் இது சாதி ரீதியான தடை தான் எனக் கடந்து போக முடியாமல், சாதியம் இல்லை என்று மறுக்கும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அதை ஏற்றிக் கொள்ள தேசியத் தரப்பிற்கு ஒரு வரலாற்றுக் கடமை கூட இருக்கின்றது. இதுவரை காலமும் தங்களால் ஒடுக்கப்பட்டிருந்த தலித் மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அத்தனை கடப்பாடும் அதற்கு இருக்கிறது. நுாலக எரிப்பின் தவறை, அரசாங்கம் பொறுப்பேற்றுப் புனரமைத்தது போல, இதனை ஏன் தமிழர் தரப்பால் கையாள முடியவில்லை, ஏனென்றால் அது தங்களால் ஒட்டு மொத்த தலித் மக்களின் மீது நிகழ்த்தபட்ட வன்முறைகளுக்கான குற்றவுணர்வையோ, பொறுப்பையோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாததனால்தானே அல்லாமல் அதில் சாதியத்தின் பங்கு இல்லை என்பதால் அல்ல. தமிழரின் வரலாற்றுப் பெருமிதம், கலாசாரம், கல்வி, அதிகாரம், வளங்களில் எல்லாம் தலித் மக்களுக்கான பங்கு என்ற சிக்கலை தமிழ்த் தேசியத்தால் எதிர் கொள்ள முடியவில்லை. ஒரு வகையில் இது இனவழித்தேசியத்தின் சிக்கல் தான், அது சயந்தன் சொல்லிக் கொள்வது போல விமர்சன ரீதியான தேசியம் என்றாலும், சேனன் வலியுறுத்துவது போன்ற முற்போக்கான தேசியம் என்றாலும், நிலாந்தன் தன் நெஞ்சை பிளந்து தலித் மக்களை தான் இதயத்தில் வைத்திருப்பதாகக் காட்டினாலும் அது சென்று சேரும் புதை குழி தலித் தரப்பின் இருப்பை, அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படுவதை அங்கீகரிக்காமை தான். கிட்டதட்ட ஆரம்ப காலத்தில் முஸ்லீம் தரப்பைக் கையாண்ட அதே வழிமுறையைத்தான் தலித் தரப்பிற்கும் பிரயோகிக்கிறது. சரியாக விதை குழும அறிக்கையும் இந்த இடத்தில் அதையே பிரதிபலிக்கிறது, நான் ஒரு போதும் இதை ஒரு தனித்த நிகழ்வாகப் பகுத்துக் கொள்ள மாட்டேன். அப்படிப் பகுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஒடுக்குமுறையை எளிமைப்படுத்தி அதைத் தனிநபர் சிக்கலாகவும், அமைப்பின் சிக்கலாகவும் மட்டும் உரையாட வேண்டியதுதான். அது பிரச்சனையின் தன்மையைக் குறுக்குவதோடு அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை மறுப்பதும் ஆகும். ஆக, இவர்கள் செய்ய வேண்யது இதைத் தனி நிகழ்வாகக் கொள்ளாமல் அது ஒடுக்கப்பட்ட ஒரு தரப்பின் கொதிலைநிலை வெடிப்பாகக் கொண்டால் அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பொருள் இருக்கிறது, அவர்கள் யாரது குரலில் பேசுகிறார்கள் என்பதனை உணர முடியும்.
சிவா சின்னப்பொடி, சரவணன் போன்ற பலரும் தொடர்ந்தும் இப்போது சாதிய ஒடுக்குமுறை இல்லை என்பதாக அடாத்திற்கு நிற்கிறார்கள். உண்மையில் அவர்கள் அறியாமையில் கருத்துரைக்கவில்லை, அவர்களுடைய சாதியம் குறித்த மரபான பார்வையின் போதாமைதான் அது. சாதியத்தை அளக்கும், மதிப்பீடும் அவர்களது கருவிகள் மிகப் புராதனமானவை. அவற்றைக் கொண்டு சமகால சாதிய ஒடுக்கு முறையை விளக்க, மதிப்பிட முடியாது. சாதி மரபார்ந்த முறையில் இப்போது தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதில்லை, இரட்டைகுவளை மனநிலை இப்போதும் இருக்கிறது அதன் வடிவம்தான் மாறிவிட்டது. இரட்டைக்குவளை ‘பிளாஸ்ரிக் கப்’ ஆக உருமாறிவிட்டிருக்கிறது. இது ஓர் உதாரணம்தான். சாதியத்தைப் புரிந்து கொள்ள இரட்டைக் குவளையை அளவுகோலாக எடுத்தால் சாதியம் ஒழிந்து விட்டதுதான். அவர்களது கருத்துகள் பெரும்பாலும் இப்படி இரட்டைக் குவளையை அளவுகோலாகக் கொண்டவையே, ஆக அவர்கள் செய்ய வேண்டியது தற்காலச் சாதியதைப் புரிந்து கொள்ள அம்பேத்கரிய வழி தலித் அறிதல் முறையைக் கற்றுக் கொள்வது தான். அதைக் கற்றுக் கொண்டால் அவர்கள் முதலில் வெளியேறுவது தமிழ்த்தேசியத்தில் இருந்தாகவே இருக்கும்.
வெள்ளாளத்துவம் அதன் நிலப்பிரபுத்துவ சாதிய அமைப்பில் இயங்குவதில்லை, அது தலித் மக்களைத் தன் மேலாதிக்க எல்லையினுள் இருக்கும் இரைகளாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தலித் மக்கள் தங்களுக்கான உரிமை, சுயமரியாதையை, இடத்தைக், அதிகாரத்தைக் கோரிப் பெற்றுக் கொள்ள விழையும் போது அது அவர்களை வேட்டையாடுகிறது, சரியாக நுாலக மீள்திறப்புத்தடையிலும் அதுவே நிகழ்ந்தது.
இன்னொன்று அதற்கு முன்னர் தமிழ் அரசியல் தரப்பு சாதிரீதியாகத் தங்களை எங்கும் முன்வைத்தது இல்லை அது இடதுசாரிகளின் சாதியப் போராட்டங்களைக்கூட அது மொஸ்கோ, சங்காய் பிரச்சினையாகத்தான் அணுகி இருக்கிறது அல்லது சாதிப் பிரச்சினையே ஒன்று இல்லை என்பது போலவே நடந்து கொண்டது. அது இந்த இடத்தில் மட்டும் தன்னைப் புலிகளுக்கு எதிராகச் சாதிரீதியாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன? அல்லது புலிகளிடம் அது தன்னை சாதிரீதியாக வெளிப்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றது என்றால் இதற்கு முன்னர் புலிகள் அப்படியான சாதிப் பிரச்சினைகளின் போதெல்லாம் தலித் மக்களின் பின்னாலா நின்றிருக்கிறார்கள்? அவர்களின் உரிமையையா மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்? இல்லையே. அப்படி என்றால் ஏன் அவர்கள் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஏன் ஒரு பிழையான வழியைத் தெரிவு செய்ய வேண்டும்?
விதை குழுமத்தின் அறிக்கையில் இப்படி ஓர் வாக்கியம் வருகிறது. ‘அரசியலில் ஏதும் அப்பாவித்தனமாக இல்லை’. எவ்வளவு ஒரு அபத்தத்தின் உச்ச வாக்கியம் அது. அப்படியென்றால்,ஒருவர் அப்பாவித்தனம் இல்லாதிருந்தால் அவர் மீது நிகழ்த்தப்படும் சாதி, இன வன்முறைகளையெல்லாம் நியாயப்படுத்தவும், மறுக்கவும் முடியுமா? அவர் மீதான ஒடுக்குமுறையின் பின்னால் இருக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியையும், நியாயத்தையும் அப்பாவித்தனம் இல்லாததன் பொருட்டு மறுத்துவிட முடியுமா என்ன?