(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து)
சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை உதிர்த்துவிட்டு நவீன உடைக்குள் தன் கூரிய கறைபடிந்த பற்களை மறைத்திருக்கிறது. சொந்த இடம் எது? என்று விசாரிப்பதில் தொடங்கி இன்னாருக்கு சொந்தமா? என விசாரிப்பது வரை சாதியத்தின் எச்சங்கள் இங்கும் மிச்சமிருக்கிறது. உலகம் இலந்தைப் பழம்போல சுருங்கி உள்ளங்கைக்குள் வந்த பின்னரும் , இனக்குழுவின் , சாதியத்தின் , நிறத்தின் பெயரில் தன்னைச் சுற்றி ஒளிபுகும் கண்ணிற்கு புலப்படாத பெரும்சுவரைக் கட்டிய மனிதன் அதனுள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறான்.
சாதி மனிதனிற்கு ஒரு நூதன அதிகாரத்தை வழங்குகிறது. சக மனிதனை அடக்கி அதிகாரம் செய்யும் உரிமையைப் பிறப்பிலேயே கொடுக்கிறது. கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போல சாதி அதிகாரத்தை , புறக்கணிப்பை , அவமானத்தை பிறப்பிலேயே கொடுக்கிறது. இந்த அதிகாரபோதையிலிருந்து விடுபட ,அதை உதற விரும்புவதில்லை, அந்தச் சாதிய நிழலின் கதகதகப்பில் மறைந்து கொள்ளவே விரும்புகிறார்கள். இந்த சாதியத்தின் வலிதரும் வாழ்வை மலினமான உத்திகளை தவிர்த்து திரையில் நிகழ்த்தியிருக்கிறது ஃபன்றி (திணீஸீபீக்ஷீஹ்)என்ற மராத்தியத் திரைப்படம்.
கலை தனது உன்னத வடிவத்தில் பார்வையாளனுடன் அந்தரங்கமாக உரையாட வேண்டும். அப்படியொரு அந்தரங்க உரையாடலை என்னுள் நிகழ்த்தியிருக்கிறது இந்தப்படம். செக்குமாடு போல அந்த ஒரு புள்ளியைச் சுற்றியே நினைவுகள் வட்டமிடுகின்றன. அதிக திருப்பங்களோ , கிளர்ச்சியடையச் செய்யும் நிகழ்வுகளோயில்லாத எளிய வாழ்வு மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படிருக்கிறது. பதின்ம வயதுப் பொடியனின் காதல் கதைதான் என்றாலும் அதைத் திரையில் சொன்னவிதம் முகத்திலறைவதாய் இருக்கிறது.
காலுறையினுள் குறுணிக் கல் அகப்பட்டது போல ஒரு நிகழ்வு இன்னும் நினைவிலிருக்கிறது. அப்பொழுதெல்லாம் எங்கள் பள்ளிக்கென்று சொந்தமாக விளையாட்டு மைதானமில்லை. விளையா ட்டுப் போட்டி தொடங்குகிறது என்றால் பிரதான வீதி தாண்டித் தேடுவாரற்றுக் கிடக்கும் தரைவை வெளிதான் எங்களுக்குத் தற்காலிக மைதானம். கடைசி இரண்டு பாடவேளையும் ஒவ்வொரு இல்லங்களும் அவரவர் ஆசிரியர்களுடன் விளையாட்டு பழகத் தரவை வெளிக்குப் போவோம். விளையாட்டு பழகுவதைவிட இன்னொன்றுதான் எல்லோருக்கும் சந்தோசமானது. கொழுத்தும் உச்சி வெய்யிலில் விளையாடிக் களைத்து வேர்த்து பள்ளி திரும்பும் போது, சிவன்கோயில் கிணற்றுத் தண்ணீர் குடித்தால் நெல்லிக்காய் தின்றுவிட்டு தண்ணீர் குடிப்பது போல சுவையாக இருக்கும். அந்த வேகாத வெய்யிலிலும் அதன் குழுமை ‘சில்’ என்றிருக்கும். தண்ணீரைக் குடித்து விட்டு மிச்சத் தண்ணீரை அப்படியே முகத்திலடித்தால் விளையாடிய களைப்புத் தெரியாது.
விளையாட்டு முடிந்து விட்டதென லோகுசேர் விசிலூதும் கணத்திற்குக் காத்திருப்போம். விசில் ஊதினதுதான் தாமதம் சிட்டாய் பறந்து யார் கிணற்றடிக்கு முதலில் போய் தண்ணிர் அள்ளிக் குடிப்பது என்பதுதான் அசல் விளையாட்டுப் பயிற்சி. வயித்து வலி என்று ‘மாச்சிங்’ செய்யாமல் சவுக்கம் மரநிழலில் குறுகி நின்று வேடிக்கைபார்க்கும் வைத்தி கூட சொன்ன பொய்யை மறந்து பருத்த உடலைக் குலுக்கி,குலுக்கி வாளியெடுக்க ஓடுவான் . நீளம், உயரம் பாய்தலில் தனிஸை அடிக்கப் பள்ளி மட்டத்தில் ஆளேயில்லை. ஆனால் ஓட்டம் என்று வந்தால் மணி தான் முதலிடம். வாளி எடுப்பதிலும் அவன்தான் வெல்லுவான்.
தனீஸ் தான் ஓட்டக்காரன் போலிருப்பான் . நீண்ட கால்களும் , விரிந்த பாதங்களுமாய் வயதை மீறிய வளர்ச்சியிருந்தது அவனிடம். அதிசயமாக அன்று தனீஸ் தான் வாளியை எடுத்தான். வாளியைக் கிணற்றில் போட்டதுதான் தாமதம், காற்றிலிருந்து முளைத்த இரு திரண்ட கைகள் எட்டி அவனை கன்னத்தோடு அறைந்தது. அவன் நீர்ப் பாசியில் வழுக்கிச் சேற்றில் விழுந்தான். வெள்ளைச்சட்டை சேற்றில் ஊறியது. ஒடுங்கிய முகத்தில் மெல்லிய பூனை மயிர் மீசை துடித்தது. உதடு கிழிந்திருந்து, கடைவாயிலிருந்து பச்சை ரத்தம் கசிந்தது. ஒரு நொடியில் நடந்த அந்த நிகழ்வு அவன் சட்டையில் படிந்த சேற்றுக்கறை போல இன்னும் நினைவிலிருக்கிறது. மாணவர்கள் சுற்றி நின்று பார்க்க அவன் சேற்றில் விழுந்து கிடந்தகோலம் , யாரும் கை கொடுக்காத வன்மமும் துல்லியமாக நினைவிலிருக்கிறது. இது நடந்து மூன்றாம் நாள் அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். அவனின் சைக்கிள் மட்டும் பள்ளிக்கூட கோணப்புளி மரநிழலில் சில நாட்கள் நின்றது.
கோயில்கிணறு , குச்சு ஒழுங்கை , பள்ளிமைதானம் எங்கும் ரகசியக் கண்கள் தலித்துகளை சதா நோட்டம் விட்டபடி இருக்கின்றன. சிறிய மீறல்களையும் அக்கண்கள் சாதியின் போர்வையில் நினைவூட்டியபடி இருக்கின்றன. கிராமம் தன்னுள் உச்ச வன்முறையை அதக்கிக்கொண்டு சுருண்டுகிடக்கிறது. அதன் இருப்பின் பகுதி போல இயல்பாய் நிகழும் அடக்குமுறைகள் சாதியத்தின் , மதத்தின் பெயரால் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஃபன்றி திரைப்படம் சாதியின் பெயரால் நிகழும் வன்முறையைப் பதின்வயதுக் காதலில் சொல்லுகிறது. காலங்காலமாக நாம் பார்த்துச் சலித்த தமிழ்ச் சினிமாவின் அபத்தக் காதலிலிருந்து விலகி அது சாதியத்தின் ஊமை வலியைப் பேசுகிறது. சாதியை சம்மட்டியால் ஒங்கி ஒரு தொன்னில் அடித்து, ஓரிரு பக்க நீள் வசனம் பேசி, ஒரே நாளில் சாதியை ஒழித்து விடுகிறேன் பார் என்ற திராபையான காட்சிகள் எதுவுமில்லாதது மிகுந்த ஆசுவாசமாயிருக்கிறது. வெறும் காட்சிகள் இயல்பாய் விரிகிறது படத்தில். அதில் பார்வையாளனுக்கு முகத்திலறையும் காட்சிகள் நிரம்பிக்கிடக்கின்றன. கல்லெறிகளும் கிடைக்கின்றன. பிரச்சாரத்தின் வாடையற்று கிராம வாழ்வின் சாதியத்தைச் சொல்லுகிறது.
உலர்ந்த பொட்டல் வெளிகளும் , காய்ந்த மரங்களும் அதன் உண்மைத் தன்மையோடு காட்சிகளில் விரிகிறது. யபைய எனும் பதின்ம வயதுச் சிறுவனின் மையம்தான் மொத்தப்படமும். யபையா இரட்டைவால் குருவி பிடிக்க செல்லும் காட்சியில் நாமும் அவனுடன் குருவிக்காக காத்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவும் , இசையும். இந்த வலிமைதான் படத்தின் பலமும். ஒரு இயல்பான கிராமத்தின் நெடுக்குவெட்டுத் தோற்றம் படத்தில் முழுவதுமாய் பதிவாகியிருக்கிறது. தொழில் முறை நடிகர்களைத் தவிர்த்துக் கிராமத்து இயல்பானவர்களைக் கொண்டு வந்திருக்கிறது இப்படம் .அதுதான் படத்தினுள் எம்மை இயல்பாய் உள்ளிளுக்கிறது.
இரட்டைவால் குருவியை பிடிக்க அலையும் யபையாவில் தொடங்குகிறது படம். அவனை சுற்றிய நிகழ்வுகள் தான் முழுப்படமும். யபையாவிற்கு இரண்டு எளிய விருப்பங்கள் இருக்கின்றன. ஒன்று இரட்டைவால் குருவியைப் பிடித்து அதனை எரித்துச் சாம்பலாக்க வேண்டும்(சாம்பலாக விரும்புவதன் காரணம் சுவரசியமானது , பல பதின்ம வயது கனவுகளைக் கிளறக்கூடியது). மற்றது கூடப் படிக்கும் ஷாலுவின் காதல் கிடைத்திட வேண்டும். பதின்ம வயதுகளிலிருக்கும் எளிய விருப்பங்கள் அவை. ஆனால் அவையிரண்டையும் அடைய அவன் முன்னிருக்கும் சமூகத்தடைகள் மலைப்பானவை. கூப்பிடு தூரத்திலிருக்கும் பெண்தான் என்றாலும், இருவருக்கும் இடையில் தாண்டவேமுடியாத சாதியப் பள்ளமிருக்கிறது. சாதியத்தின் வலியை மெல்லிய கத்தியால் பார்வையாளனின் சாதியில் உலர்ந்த வன்தசைகளில் கீறிச் செல்கிறது படம்.
ஊரின் சில்லறை வேலைகளைச் செய்து பிழைக்கிறார் யபையாவின் தந்தை. அதில் கிராமத்துள் அலையும் பன்றிகளைக் கலைத்தலும் ஒரு தொழில். அவர்கள்தான் ஊரிலிருக்கும் ஒரேயொரு தலித் குடும்பம். அவர்களை அந்தரங்கமாகவும் , நேரடியாகவும் வார்த்தைகளால் குத்துகிறார்கள் ஊரார். அவனை வீட்டு வாசலிலேயே வைத்துக் கதைத்து அனுப்பிவிடுகிறான் கூடப்படிக்கும் நண்பன். வகுப்பில் குத்திக் கதைக்கிறார் ஆசிரியர். குழிக்குள் விழுந்த பன்றியைத் தூக்கச் சொல்லுகிறார் ஷாலுவின் அப்பா(அவனின் தந்தைதான் அந்தப் பன்றியைத் தூக்குகிறார்). பதின்ம வயது யபையாவுக்கோ இந்த அவமதிப்பு பெருத்த அவமானமாக இருக்கிறது. அவன் தன் தொழிலை மறைப்பவனாக இருக்கிறான். குறிப்பாகத் தான் காதலிக்கும் ஷாலுவிடம் மறைக்க நினைக்கிறான். அது அவ்வளவு எளிதானதல்ல. பன்றியைப் போலவே அவர்களையும் ஊர் நடத்துகிறது. அவர்களும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.
வகுப்பறையில் படிக்கும் போது அருகில் சுள்ளி முறிக்கும் அவன் அம்மாவையும் ,அக்காக்களையும் யன்னலூடு காணும் போது அவன் கொள்ளும் உடல் மொழியில் யபையாவின் நடிப்பு இயல்பாய் இருக்கிறது. மகன் படிப்பதை ஆர்வமாய் எட்டிப்பார்க்கும் தாய் அதை ‘கிளுக்’ எனச் சிரித்து அவமதிக்கும் மாணவர்களென அசல் வகுப்பறையைப் பார்க்கலாம். எளிய நிகழ்வுகள் மூலம் கதை இயல்பாய் நகருகிறது. பன்றி முட்டியதையே தீட்டாக கருதும் பழமையில் ஊறிய கிராமம். அந்த பன்றியைத் துரத்துவதையே தொழிலாகக் கொண்ட ஒரு எளிய குடும்பம். அதில் நிகழும் பதின்ம வயதுப் பொடியனின் காதல். காதலிக்கும் பெண் உயர் சாதி. அந்தப் பெண்ணும் கிராமத்தவர்களுள் ஒருத்தி என அவன் உணர்ந்து கொள்ளும் நொடி மிக முக்கியமானது. அவளும் அந்தக் கிராமத்துக் கூட்டு மனச்சாட்சியின் ஒர் எளிய புள்ளியே.
மெல்லிய விளக்கொளியில் கோயில் திருவிழா நடக்கிறது. பீரிட்டு கிளம்பும் இசைக்கு ஏற்ப நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறான் யபையா. ஷாலு மதிலிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஷாலுவின் ஓரக்கண் பார்வைக்காக கூட்டதினுள் குற்றவுணர்வுடன் ஆடும் யபையாவை அவன் தந்தை கூப்பிடுகிறார். அடுத்த காட்சியில் யபையா தூக்குவிளைக்கைத் தலையில் தூக்கி வைத்திருக்கிறான். அந்த ஒளியில் உயர் சாதி நண்பர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நொடியில் வந்து போகும் இந்தக் காட்சி தரும் உணர்வுகள் வலிமிகுந்தவை.
கடைசிக்காட்சியில் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கப் யபையாவின் முழுக் குடும்பவும் பன்றி யை பிடிக்க அல்லற்படுகிறது. பற்றைகளையும் ,கற் குவியலையும் இடறி ஓடுகிறது பன்றி. ஊரார் மேட்டிலிருந்து பார்க்கிறார்கள். இவர்கள் பள்ளத்தில் பன்றியை சுருக்குக் கயிற்றுடன் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். மைதானத்தில் ஆர்வமாய் விளையாட்டை ரசிப்பது போல் அவர்களை ரசிக்கிறது ஊர். அதில் ஷாலுவும் ஒருத்தி. பிரமாண்ட மைதானத்தின் அபரிமிதமான ஒளியின் முன் வரக் கூச்சப்படுபவன் போல் ஓடி ஒழிந்து கொள்ளுகிறான் யபையா. அப்போது அவனருகில் இரட்டைவால் குருவி ஒன்று அமர்ந்திருக்கிறது.அவன் குருவியைப் பிடிக்கும் கணத்தில் தந்தை இவனைக் கல்லைக் கொண்டு விரட்டுகிறார். இவர்கள் பன்றியை நெருங்கும் கணத்தில் ஊர்ப் பாடசாலையில் தேசியகீதம் ஒலிக்கிறது. எல்லோரும் அசையாமல் நிற்கிறார்கள். பன்றி மெதுவாக நடந்து இவர்களினூடே போகிறது. இதை விட வேறப்படி சகதியில் தோய்ந்த தேசத்தை பகடி செய்யமுடியும். தேசியகீதம் ஒலிக்கும் அந்த நிசப்தமான நேரத்தில் பன்றி குறுக்காக நடந்து செல்லும் காட்சியில் உறைந்து போயுள்ளது சாதியத்தின் வன்மம்.
பன்றியை மடக்கிப் பிடித்து நீண்ட தடியில் கட்டி தூக்கிச் செல்லுகிறார்கள் யபையாவின் குடும்பத்தினர். பள்ளிக்கூட மதிற் சுவரில் அம்பேத்கர் முதலிய அத்தனை தேசத்தலைவரின் படங்களும் வரிசையாய் வருகிறது. தேசத் தலைவர்களின் முன்னால் சாதியமெனும் பன்றி உயிப்புடன் போகிறது.
பன்றியுடன் செல்லும் யபையாவின் அக்காவை வம்பிழுக்கிறார்கள் உயர்சாதிப் பெடியள். ஆத்திரமடையும் யபையா கல் எடுத்து அவர்களை நோக்கி ஆவேசமாக வீசுகிறான். அதில் ஆயிரம் ஆண்டுகளின் ஆவேசமிருக்கிறது. கல் திரையை நோக்கி வந்து திரை கறுப்பாகிறது. அந்தக் கல் எம் எல்லோரின் முகத்திலும் எறியப்பட்ட கால்லாகவேயிருக்கிறது. சாதியச் சகதியில் உழலும் அத்தனை பேரையும் நோக்கி எறியப்படும் கல். அந்தக்கல்லில் வஞ்சிக்கப்படுபவர் அனைவரினதும் கைரேகைகளிருக்கிறது.
■
ஆக்காட்டி – 6