தங்கராசு, உணவகம் வந்தபோது அது பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை ஆட்டினார். தன்னிடமும் மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்று நினைத்தவர், உதட்டைக் கடித்தார். ஆவணி மாதம் முழுவதும் உணவகத்தை மூடி விடுவார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் விடுமுறை. கேட்காமல் கிடைக்கும் இந்த ஒரு மாத விடுமுறையை வைத்து என்ன செய்வது என்பது தங்கராசுவிற்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நாளும் உணவகத்தின் வெளியே இருக்கும் நீளவாங்கில் அமர்ந்திருந்து வீதியை வேடிக்கை பார்ப்பார். கால் விறைத்தால் கால் மாற்றி அமர்ந்து பச்சை நிற சென் நதியைப் பார்ப்பார். வீதியும் நதியும் கோடை வெய்யிலில் வெளிப்பாக இருக்கும். பாரிஸின் எந்த மெத்ரோ நிறுத்தத்தில் இறங்கினாலும் நூற்றாண்டு பழமையான கட்டிடங்களைப் பார்க்க முடியும். பல கட்டிடங்கள் அய்ந்து நூற்றாண்டுகள் பின் தங்கிவிட்டவை போலிருக்கும். தங்கராசுவால் அந்தப் பழமையில் தொலைந்து போக முடியவில்லை. பழுப்புக் கட்டிடங்க
ளில் புடைத்து இருக்கும் சிற்பங்களின் அடியில் படரும் மெல்லிய பச்சைப் பாசிகளே அவருக்குத் தெரிந்தன. தீ போன்ற செந்நாக்கை நீட்டியபடி கொடூரமான கண்களினால் எரிக்கும் காளியின் மூர்க்கத்தின் முன்னால் கைகூப்பி நிற்கும் பணிவு அந்தச் சிற்பங்களில் கிடைக்கவில்லை. ஈபில் கோபுரத்தைப் பார்த்த போதும் கூட காந்தியின் சத்திய சோதனையில் படித்த வரிகளே அவருக்கு நினைவில் வந்தன. <வெறும் இரும்புக் குப்பை>. ஆனால் பரிஸ் நகரின் அழகின் மீதிருக்கும் விலக்கம் சென் நதியிடம் அவருக்கு இருந்ததில்லை. சென் நதி பச்சைப் படங்கு போல அசைந்து கொண்டிருந்தது. நதியின் பழுப்புப் பச்சை நீர் நிலாவரைக் கிணற்றின் நீரை போல தடிப்பாகவும், குளுமையானதாகவும் இருந்தது. அந்த நீரின் குளுமையை ஊரிலேயே அனுபவித்திருக்கிறார். சென் நதியில் சிறிய படகுகளின் கொடிகள் தூரமாகத் தெரிந்தன. மெல்லிய நிற இலகு ஆடைகளை அணிந்த சீனப் பயணிகளின் படகு மெதுவாக அவரைக் கடந்து சென்றது.
தங்கராசு இந்த உணவகத்திற்கு வேலைக்கு வந்த போது முன்னால் ஓடும் நதி சென் நதி எனத் தெரிந்திருக்கவில்லை. நான்கு நாட்கள் பயிற்சி முடிந்து முதல் நாள் வேலைக்குத் தாமதமாகவே வந்தார். வாசலில் நின்ற ஸ்டீபன் கையைத் திருப்பி மேல் கண்ணால் நேரத்தை பார்த்தார். ஸ்டீபனின் புளியங்கொட்டை போன்ற சிறிய கண்களில் மெல்லிய சிரிப்புத் தெரிந்தது. தங்கராசு இரண்டு நிமிடங்களும்ம் இருபத்தியேழு நொடிகளும் தாமதம். தன் இடுப்பில் தொங்கிய வெள்ளை துணியில் கை துடைத்தபடி ஸ்டீபன் வணக்கம் சொல்லி தங்கராசுவுக்கு கை கொடுத்தார். ஸ்டீபனின் கனமான கை குளிர்ந்து இருந்தது. <அந்த நதியைப் பார் த்தொங்கராயா சென் நதி யாருக்கும் காத்திருப்பதில்லை, ஒரு போதும் தாமதிப்பதும் இல்லை> என்று விட்டு அவருடைய முதுகில் தட்டி வாழ்த்துகள் சொன்னார்.
உணவகம் மதியப் பரபரப்பு முடிந்து, இரையை விழுங்கிய பாம்புபோல சேர்வாக இருந்தது. தங்கராசு உணவு அனுப்பும் சதுரத்தின் ஊடாக எட்டிச் சமயலறையின் உள்ளே பார்த்தார். செஃப் அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து நீளமான மர அகப்பையால் தக்காளிச் சோஸைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தார். செஃப்பினுடைய கறுப்பு மேற்சட்டையும் நீலக்கோடு போட்ட காற்சட்டையும் அழுக்காக இருந்தன. இடுப்பில் செருகியிருந்த துணி கரிப்பிடித்து சுருண்டு தொங்கியது. பாத்திரத்தின் உள்ளே உலகமே தெரிவது போல ஆர்வமாகப் பார்த்த படி இருந்தார் செஃப். இன்னும் அய்ந்து நிமிடங்களில் பாத்திரத்தின் உட்பக்க அடி கறுத்து சீமெந்துக் கலவை போல இறுகித் தங்கராசுவின் வருகைக்குக் காத்திருக்கும். அதை சவற்கார நீரில் ஊறப்போட்டு தேய்த்துக் கழுவ வேண்டும். பெரிய பாத்திரங்களைக் கழுவி முடிக்க முன்னரே சிறிய பாத்திரங்களும் கோப்பைகளும் வந்து சேர்ந்து கழுவு தொட்டியை நிறைந்துவிடும். பின்னர் கையை- காலை ஆட்டி விரைவாக வேலை செய்ய முடியாது. சாப்பாடு குழைந்த மணத்துடனும் சவற்கார நுரையின் குமட்டலுடனும் ஒன்பது மணி நேரம் கழுவ வேண்டும். வெள்ளைப் பீங்கான் கோப்பைகளில் சிறு விரல் அடையாளம் கூட இல்லாமல் கவனமாகக் கழுவி, உலர்த்தி அடுக்க வேண்டும் என்பதில் செஃப் எப்போதும் கவனமாக இருப்பார்.
செஃப்பை பார்க்கும் போது தங்கராசுவிற்கு அர்ச்சுன ரணதுங்க நினைவில் வருவார். செஃப்பும் ரணதுங்கவைப் போல பருமனானவர், கூடவே சதுர வெள்ளைத் துணியை மடித்து இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அவர் நடக்கும் போது குட்டி நாயின் வால் போல அது தனியே குலுங்கும். செஃப்பின் குள்ளமான குத்தி உடம்பில் எப்போதும் உற்சாகம் இருக்கும். காலையில் இருக்கும் சுறுசுறுப்புடனே வேலை முடியும் போதும் இருப்பார். செஃப் கால்கள், கைகள் உடைய பெரிய எறும்பு என்பது தங்கராசுவின் நினைப்பு. இரவுகளில் அரிதாக வரும் தங்கராசுவின் கனவுகளிலும் செஃப் இராட்சத எறும்பாகவே வந்தார்.வெள்ளை முசுறு எறும்பாக.
தங்கராசுவிற்கு ஒருநாள் இரவு வேலை, மிகுதி நான்கு நாட்களும் செஃப் கூடவே பகல் வேலை. ஒன்பது மணி நேரம் செஃப்புடன் குப்பை கொட்ட வேண்டும். செஃப் கொட்டும் குப்பைகளை அள்ளவும் வேண்டும். செஃப்பின் உதட்டில் சிரிப்பை மருந்துக்கும் பார்க்க முடியாது. அடுப்பிற்கு அருகில் நின்றாலும், தான் ஏதோ அடுப்பின் மேல் நிற்பது போலக் கொதிப்பார். அடுப்பில் சட்டியை வைத்து நீர் ஊற்றுவார். மெதுவாகக் குமிழிகள் விட்டபடி அது கொதிக்க தொடங்க செஃப்பும் கொதிக்கத் தொடங்கிவிடுவார். அதன் பின்னர் தங்கராசுவிற்கு ஒரே ஓட்டம் தான். தினமும் கொலைக் களத்தில் இருப்பது போலிருக்கும். சட்டி – பானை, மர அகப்பைகளுடன் மட்டுமல்ல செஃப்புடனும் தினமும் மல்லுக்கட்ட வேண்டும்.
செஃப் நளனின் தம்பி போல அடுப்பில் சட்டிகளை வைத்து ஓய்வில்லாமல் சமையல் செய்தபடி இருப்பார். அவருடைய கை பாம்பின் நெளிவில், நளினமாகத் தூளையும் உப்பையும் இலை-குழைகளையும் பிய்த்தும் முறுக்கியும் சட்டியினுள் இட்டபடி இருக்கும். வறுத்த மல்லியின் வாசனை குசினி முழுவதும் நிரம்பியிருக்கும். உறைப்பான யாழ்ப்பாணத்தூள் வாங்கி வைத்திருக்கிறார். தூளைப் பிடித்த அளவிற்குக் கூட, தமிழர்கள் ஒருவரையும் அவருக்குப் பிடிக்காது. அதிலும் தங்கராசு என்றால் துளியும் பிடிக்காது. தங்கராசுவிற்கு மூளை இருக்கிறதென வைத்தியர் வந்து சொன்னால் கூட தான் நம்பவே மாட்டேன் என்பார் செஃப். அது போலவே தான் தங்கராசு செய்யும் வேலைகளும் இருக்கும். தங்கராசுவிடம் கேட்டால் செஃப்பின் கரகரத்த பிரஞ்சு உச்சரிப்பைச் சரியாகக் கிரகிக்க முடியவில்லை என்பார் அல்லது நாற்பது வயதுவரை மண்வெட்டி மட்டுமே பிடித்த கை என்பார். தங்கராசு ஆவேசமாகக் கோப்பைகள் கழுவிக் கொண்டிருக்கும் போது <இங்கே ஓடி வா த்தொங்கு மிக மிக அவசரம்> என்று கூவி அழைப்பார் செஃப். தங்கராசு கழுவிக் கொண்டிருந்த கோப்பையை தொட்டிக்குள் வீசி விட்டு அவசரமாக அவரிடம் ஓடிச் செல்வார். செஃப் உதடுகளை குவித்து நாக்கை நீட்டியபடி தன் அலைபேசியின் திரையை தங்கராசுவிடம் காட்டுவார். <இந்தச் சின்னப் பெண்ணிற்கு எவ்வளவு பெரிய கறுப்பு முலைகள் நல்ல பெரிய முலாம் பழங்கள் போல> தங்கராசு திகைத்து அப்படியே விக்கித்து நின்றுவிடுவார்.
நேற்று மதியச் சாப்பாடு கொடுத்து முடிந்ததும் எல்லோரும் பரபரப்பானர்கள். தங்கராசுவிற்கு வேலை ஓடவில்லை. ஒடுக்கமான மரப்படிகளில் கவனமாக இறங்கி நிலவறைக்குள் சென்ற போது டக்மாரா பல்லுத் துலக்கிக் கொண்டிருந்தாள். மதியச் சாப்பாடு முடிந்ததும் அவள் தவறாமல் செய்யும் காரியம். சாப்பாடு பரிமாறுவதற்கு மணப்பெண் தயாராகுவது போல அலங்காரம் செய்வாள். மஞ்சள் வெளிச்சத்தில் அவளின் செம்பட்டை முடிகள் தங்கக்கம்பிகள் போல மினுங்கின. கன்னத்துப் பூனை உரோமங்கள் சந்திராவை நினைப்பூட்டியது. தங்கராசுவைப் பார்த்ததும் உற்சாகமாக இரண்டாவது முறையாகவும் வணக்கம் சொன்னாள். உதடுகளில் பற்பசையின் வெள்ளை நுரை வழிந்தது. கண்களில் சந்தோசம் தெரிந்தது. தங்கராசுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் முகத்தைத் தொங்கப் போட்டபடி சோகையாகவே பல்லுத் துலக்குவாள். அந்தச் சோகத்திற்கும் காரணமிருக்கும். எப்படியும், குறைந்தது இரண்டு உணவுகளையாவது தவறாக அடித்து விடுவாள். அனுப்பும் பொத்தனை அழுத்திய பிறகுதான் தவறாக அடித்தது அவளுக்கு நினைவில் வரும். அனுப்பிய பரபரப்புடன் அதை மாற்றச் சமயலறைக்கு ஓடிவருவாள். அதற்குள் செஃப் கோப்பைகளை எடுத்து வைத்து சிவப்புத்தூள் தூவி அவளுடைய உணவை அனுப்பத் தயாராக இருப்பார். யார் பிழை செய்தாலும் மெல்லிய சிரிப்புடன் உதடுகளை குவித்து நாக்கை நீட்டிக் கடந்துவிடும் செஃப் டக்மாரா பிழையை அனுமதிக்க மாட்டார். நான்கு வசைகளும் அய்ந்தாறு குத்தல் கதைகளும் சொல்லித்தான் உணவை மாற்றிக் கொடுப்பார். அது வரை அவள் சாப்பாடு அனுப்பும் சிறிய சதுர இடைவெளி ஊடாக தலையை நீட்டிக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும். அவளின் கழுத்து நீண்டதன் ரகசியமும் அதுதான்.
<என்ன இவ்வளவு சந்தோசம்?> எனக்கேட்டார் தங்கராசு.
< ஒரு மாதம் ஊரில் அம்மாவின் அருகில் இருக்க முடியும் அவருக்கு கண்களும் பழுதாகி விட்டது, கடந்த வருடம் போயிருந்தபோது வீட்டினுள் எருமை மாடு நுழைந்துவிட்டதாக நினைத்து என்னைச் சிறு குச்சி கொண்டு விரட்டினார், சிறிது நேரம் கழித்துத்தான் என்னை அடயாளம் கண்டு கொண்டார், அவரை அணைத்தபோது அவர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு விழுந்தது> என்றபடி டக்மாரா அவர் அருகில் வந்து கன்னத்தில் உற்சாகமாக முத்தமிட்டாள். வெள்ளைப் பற்பசை தங்கராசு கன்னத்திலும் வழிந்தது. அவர் புன்னகைத்தார்.
<அம்மாவை உன்னுடன் இங்கே வைத்திருக்க வேண்டியது தானே>
< எங்கள் பூர்வீகம் உக்கிரேன், போலந்து எல்லையில் இருக்கும் சிறு கிராமம். வீட்டின் அருகிலே கொழுத்த மீன்கள் பிடிக்க முடிந்த சிறு ஏரியும், எருமைப் பண்ணைகளும் உண்டு. அம்மாவிடம் இங்கு வரச் சொல்லிக் கேட்டால் செத்த மீன்கள் தான் வெள்ளத்தோடு போகும் என்கிறார்> என்றாள்.
கன்னதில் வழிந்த பற்பசை நுரையை அழுத்தமாகத் துடைத்துவிட்டு மேலே வந்தார் தங்கராசு. அவர் மனம் கனத்து இருந்தது. வெள்ளை மார்பிள் கோப்பைகளைப் பொலித்தீன் தாளினால் இறுக்கமாகச் சுற்றி ஒழுங்காக அடுக்கினார். எஞ்சியிருந்த இறைச்சித் துண்டுகளை ஆழ்குளிரில் அடுக்க உதவி செய்தார். செஃப்பும், பெஞ்சமாவும் அவசரப்படுத்தினார்கள். விட்டால் இப்படியே நேராகச் சென்று விடுமுறைக்கான விமானத்தினைப் பிடித்துவிடுவார்கள் போலிருந்தது. செஃப் கண்கள் ஒளிர <முப்பது நாட்கள் முட்டாள் ‘தங்கு’விடமிருந்து விடுதலை> என்று கையை உயர்த்திக் கண்ணடித்தார். தங்கராசு இந்த முப்பது நாட்களும் தனக்கு நரகமாய் இருக்குமென நினைத்துக் கொண்டார்.
இன்னும் அய்ந்து வருடம் காத்திருந்தால் ஃபிரான்ஸ் வந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிடும். தொழில்முறை விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம். அது கிடைத்தால் அடுத்த வருசமே ஊருக்கும் சென்று வரலாம். சின்னவளுக்குப் பத்தும், பெரியவளுக்குப் பதினெட்டும் முடிந்திருக்கும். சின்னவள் பிறந்திருந்த போது தான் தங்கராசுவைத் தேடி இராணுவம் வந்தது. இராணுவம் ஒரு முறை வீடு தேடிவந்தல் பின் நீ நாட்டிலேயே இருக்காமல் ஓடித் தப்பிவிட வேண்டும் இல்லையென்றால் கொழும்பில் கைக்குண்டு வெடித்தாலும் நேராக உன் வீட்டிற்கே இராணுவம் வருவார்கள் என்பார்கள் ஊரார். <நிச்சயமாக இது ஆவரங்கால் தங்கராசுவின் வேலையாகத்தான் இருக்கும் பிடியுங்கள் அவனை> என இரணுவத்தளபதி கொழுப்பிலிருந்து கட்டளை இடுவார் என்றான் சிவராசா. மகள் பிறந்து இரண்டு வாரங்களில், சரியாக அவருடைய அம்மாவை இராணுவப் பாஸ் இல்லாமல் ஊரடங்கு இரவில் ஆஸ்பத்திரி அழைத்துச் சென்ற மூன்றாம் நாள் இராணுவம் அவரைத் தேடி வந்தது.
சின்னவளின் சிவந்த பிஞ்சுக்கால்களைப் பார்த்தும் அவருடைய அம்மா பாக்கியத்தின் நினைப்பே அவருக்கு வந்தது. தன்னுடைய அம்மாவின் முகச்சாயல் சின்னவளில் படிந்திருந்ததில் பூரித்துப்போனார். அவருடைய அம்மா பேத்தி பிறந்ததும் சுடுநீர் வைத்து குளிப்பாட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, சந்திராவிற்குப் பத்தியச் சாப்பாடு சமைப்பது என அனைத்தையும் தனி ஆளாகச் செய்து கொண்டிருந்தார். பின்னிரவில் அரவம் கேட்டு தங்கராசு எழும்பியபோது பாக்கியம் கதவு நிலையில் சாய்ந்து, நெஞ்சை பிடித்தபடி செம்பில் நீர் குடித்துக் கொண்டிருந்தார். பாம்பின் சீறல் போல மூச்சு ஏறி இறங்கியது. செம்பு நழுவி விழுந்த சத்தத்தில் சின்ன மகளுடன் படுத்திருந்த சந்திராவும் எழும்பிவிட்டாள். லாம்பைத் தூண்டி வெளிச்சத்தில் பாக்கியத்தைப் பார்த்தார். மூச்சொலி சீராகி இறுகியது. அவர் மூச்சு விடச் சிரமப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதுதான் அவர்களுக்குச் சரியாகத் தெரிந்தது.
லாம்பு வெளிச்சத்தில் கிரவல் வீதியைக் கடந்த போது நாய்களின் குரைப்பு குறைந்து தூரமாகியது. பாக்கியத்துடன் சைக்கிளை மெதுவாக வயல் வரம்பில் இறக்கினார். அது, ஒரு குலுக்குக் குலுக்கி வரம்பின் வளைவுகளில் இறங்கியது. பாக்கியம் இன்னும் மூச்சு விடச் சிரமப்பட்டார். அவளின் வெப்ப மூச்சு வயல் காற்றில் பனிப்படலமாய் கரைந்தது. தங்கராசு வரம்பின் நெளிவுசுளிவுகளில் வளைத்து சைக்கிளை ஓட்டினார். வேகம் குறையும் போதெல்லாம் சைக்கிள் உலாஞ்சியது. காலை அகட்டிச் சமநிலைப் படுத்தினார்.
பிரதான வீதியால் போனால் நான்கு சந்திகளில் இராணுவத்திற்குப் பதில் சொல்ல வேண்டும். சந்தி வேலிகளின் இருள் மறைவுகளில் இருந்து ஓடி வந்து மறிப்பார்கள். வயல் வரம்பினால் சென்றால் மீனாட்சி அம்மன் கோயில் மிதப்பில் மட்டும் பதில் சொன்னால் போதும். அதில் எப்போதும் நிற்கவும் மாட்டார்கள். அதுவரை லாம்பு வெளிச்சத்தைப் பார்த்து வீதியிலிருந்து யாரும் சுடாமல் இருக்க வேண்டும். மரவள்ளிச் செடிகளும், பயிற்றைக் கொடிகளும் அடர்ந்து வளர்ந்து இருக்கும் தோட்ட வரம்பில் செல்லும் இலாம்பு வெளிச்சம் பிரதான வீதியில் மின்மினிப் பூச்சியின் அசைவாகவே தெரியும். காவலுக்கு நிற்பவர்கள் மின்மினி பூச்சிகளுக்கும் துப்பாக்கிகளால் மட்டுமே பதில் சொல்லி பழக்கமானவர்கள்.
அருகில் இருக்கும் ஆஸ்பத்திரி, ஊரடங்கு இரவில் இன்னும் தூரமாகத் தெரிந்தது. தங்கராசு ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது ஆஸ்பத்திரியில் சிறியபரபரப்பு இருந்தது. நோயாளிகள் காத்திருக்கும் வாங்கில் பெண்ணை வளர்த்தியிருந்தார்கள். அவளின் வயிறு சீராக ஏறி இறங்கியபடி இருந்தது. ஊரடங்கு இரவில் ஓடலிசாமி இரவு வைத்தியராக ஞானஸ்நானம் பெற்றிருந்தார். அவரது கை வைத்தியத்தில் அந்தப்பெண்ணின் வாயிலிருந்து நுரை வழிந்தது. வாசலில் தோள் துண்டால் வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தவரின் முகம் தங்கராசுவைப் பார்த்ததும் பிரகாசமானது. <அய்யா இரண்டாவது ஆளும் வந்து விட்டது மகளை பெரியாஸ்பத்திரிக்கு ஏற்றுங்கோ> என இரைந்து அழுதார். ஆஸ்பத்திரியில் இருந்தது ஒரே நேரத்தில் இருவர் செல்லக்கூடிய அம்புலன்ஸ். ஓடலி சாமிக்குத் தெரிந்தது எல்லாம் இரண்டு நோயாளிகள் இல்லாமல் அம்புலன்சை இஞ்சும் நகர்த்தக்கூடாது. ஊரடங்கு இரவில் அம்புலன்சை சிக்கனமாகப் பயன்படுத்தும் ஏற்பாடு. அதில் அவர் ஒருபோதும் தவறியது இல்லை.பாக்கியத்தையும் அந்தப் பெண்ணையும் ஏற்றிய அம்புலன்ஸின் சத்தம் மறைய முன்னரே தங்கராசு வீடு வந்து விட்டார். எப்படியும் இரண்டு மூன்று சந்திகளில் மறித்துச் சோதனை செய்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டர்.
பாக்கியம் பெரியாஸ்பத்திரி சென்ற மூன்றாம் நாள் இராணுவம் அவரின் வீட்டுக்கு வந்தது. நிலாவரைத் தோட்டத்து வெங்காயத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது சிவராசா வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்தார். <உன் வீட்டுக்கு ஆமி வந்திருக்கு ஆனால் அவர்கள் ஏதோ ரஞ்சன் என்று விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்> என்று ஒற்றைக்காலில் நின்று கத்தினான். அவனுடைய குரலில் சந்தோசம் மிகுந்திருந்ததா இல்லை சோகம் அப்பியிருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவர் ரஞ்சன் என்ற பெயரைக் கேட்டதும் விக்கித்து அப்படியே நின்று விட்டார். பாத்தி உடைத்து நீர் மேவிப் பாய்ந்தது. அந்தப் பெயரை யாரும் அறியாமல் ஆழமே காண முடியாத நிலாவரைக் கிணற்றின் ஆழத்துள் புதைத்து வைத்து விட்டதாக நினைத்திருந்தார். அதை ஒருவராலும் அறிந்து கொள்ளவே முடியாது என்று நினைத்திருந்தார். வெள்ளைத் துரைமார் நீளமான இரும்புச்சங்கிலிகள் கொண்டு வருடக்கணக்காக முயற்சித்தும் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அவர்களால் அறிய முடியவில்லை என்பார்கள். அதன் ஆழத்தில் ஒளித்து வைத்திருந்த பெயரை ராணுவம் தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. தங்கராசு தாடையைத் தடவியபடி ஒரு நிமிடம் யோசித்தார். சிவராசாவிடம் மண்வெட்டியைக் கொடுத்துவிட்டு உழவாரத்தை எடுத்து இடுப்பில் சொருகியபடி வீட்டிற்குச் சென்றார்.
வீட்டு முன் வேலி, ஒழுங்கையில் சரிந்து இருந்தது. முற்றத்து குரோட்டன்கள் மீது சூடடித்தது போல இராணுவத்தின் ‘பீல்ட் பைக்’ ஓடி இருந்தது. வளையில் கட்டியிருந்த சின்ன மகளின் ஏணை வீதியில் இருந்தது. தன்னுடைய அம்மாவின் சேலையில் கட்டி இருந்த ஏணையைப் பார்த்ததும் உழவாரத்தைத் தூக்கி எறிந்து விட்டு, சந்திராவைக் கட்டி அணைத்தார். அவளுடைய முகம் பயத்தில் வெளிறி இருந்தது, கண்களில் அச்சம் தெரிந்தது. அவருடைய கண்களில் நீர் தளும்பியது, உதடுகள் மெல்ல நடுங்கின. சின்ன மகள் சிவந்த மெல்லிய கால்களால் அவருடைய நெஞ்சில் உதைத்தாள். அது தான் மகளின் கால் அவரைத் தீண்டிய கடைசி நொடி. சாரத்தை மடித்துக்கட்டி, தனக்குப் பிடித்த நீலச் சேட்டை அணிந்து கொண்டு வெளிக்கிட்டார். பின் ஏதோ யோசித்தவராக அட்டாளையுள் சீந்தாமல் துருப்பிடித்திருந்த தெருவலை மண்வெட்டியைத் தோளில் போட்டபடி வீட்டை விட்டுக் கிளம்பினார். நிலாவரைத் தோட்டத்தை நோக்கி வரம்பில் நடந்தார். சிவராசா, கடைசிக்கு முதல் பாத்திக்குத் தண்ணிகட்டிக் கொண்டிருந்தார். நிலாவரைக் கிணற்றின் குளிர்ந்த நீரில் முகம், கால் கழுவினார். ஒரு மிடறு தண்ணீரைக் கைகளால் அள்ளிப் பருகினார். நல்ல குளிர்மையாக இருந்தது நீர். வேலியில் சாத்தி இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு சுன்னாகத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டிற்குச் சென்றார்.
கொழும்பு செல்ல பாஸ் எடுக்கக் காத்திருந்த ஊட்டில் சந்திரா மட்டும் ஒரு முறை வந்து தங்கராசுவைப் பார்த்துப் போனாள். அவளின் மெலிந்த விரல்களை நீண்டநேரம் பிடித்திருந்தார். அவளின் கண்களைச் சுற்றி அச்சம் கருவளையங்களாக படிந்திருந்தது.அச்சத்துடன் அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்தபடி இருந்தாள். அவள் குரல் ஒடுங்கியிருந்தது. வீதியால் செல்லும் மோட்டார் வண்டிகள் வீட்டுவாசலை கடக்கும் போது இன்னும் அதிகப் படபடப்பாக இருந்தாள். சின்ன மகள் கால்களையும், கைகளையும் அடித்து, விரல் சப்பிச் சிரிக்கும் நொடியை , பெரியவளது நீளக் கண்களையும் நினைத்துப் பார்த்தார். மெல்லிய பனிப்படலம் போல எல்லாம் கரைந்து போயின.
பனி பொழியும் நாளில் ஃபிரான்ஸ் வந்து இறங்கிய பின்னர் விசா கிடைத்தால் ஒரு வருடத்துள், சந்திராவையும், பிள்ளைகளையும் இங்கே அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். புதிய பனிப்பொழிவைக் கைகளால் அளைந்தபடி விசாவிற்குக் காத்திருந்தார். அதற்கு முன்னர் ஏதாவது வேலைக்குப் போக வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் பாரிஸ் உணவகங்களாக ஏறி இறங்கியதில் வேலை கிடைத்தது. வந்து ஒரு கிழமையில் வேலை கிடைத்தது, எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. சுன்னாகம் பெரியப்பா தன்னுடைய நீண்ட மீசையைத் தடவியபடி அவனின் திறமை அது என்றார். தங்கராசு எல்லாம் மகள் வந்த நேரம் எனச் சொல்லிக் கொண்டார். உடல் உரோமம் உதிர முன்னம் எடுத்த புகைப்படத்துள் அடங்கியிருந்த மகளப் பார்க்கும் போது விரைவிலேயே அவர்களை ஃபிரான்ஸ் அழைத்துக் கொள்ள விரும்பினார். அதற்கு முன்னர் ஃபிரான்ஸ் வர வேண்டியதற்காக ஈடு வைத்த காணியை மீட்க வேண்டும். அதற்கு வேலையில் முதலாளியைக் குளிர்விக்க வேண்டிக் கடுமையாக உழைத்தார்.
அது மிகச் சிறிய சீனச் சூப் கடை. அவர்களின் அளவிற்கு அளந்து செய்திருந்தார்கள். தங்கராசு போல திடகாத்திரமானவர் ஒருவர் நிற்க இட்டு முட்டாக இருக்கும். வட்ட முகமும் கீறல் கண்களுமுள்ள யாரைப் பார்த்தாலும் சீனாக்காரன் என நம்புவது தங்கராசுவின் சுபாவம். அப்படித்தான் அவர் சூப்கடை முதலாளியையும் நினைத்தார். முதலாளிக்கு கருணைக்கிழங்கின் தடித்த தோல் போல இருந்த முகம் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. <முதல் கிண்ணம் சூப்பும், முதல் பெண்ணும் எப்போதும் ருசியானவர்கள் மறக்க முடியாது> என்பார் முதலாளி. அவருக்கே சூப்பின் முதல் கரண்டியை எப்போதும் தங்கராசு கொடுத்தார்.
சில நாட்களின் பின்னர் முதலாளி ஒரு வியட்நாமியன் எனத் தெரிய வந்தபோது வாயடைத்துப்போனார். பின்னர் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் அவருக்குக் கை கொடுக்கும் போது முதலாளியின் கைகளை இன்னும் அழுத்தமாகக் குலுக்குவார். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கரங்களை அழுத்தமாகக் குலுக்குவதில் மிகுந்த பிரியம் அவருக்கு. போதையில் இருக்கும் போது அந்தக் கரங்களை குலுக்கக் கிடைத்திருந்தால் நிச்சயமாக முத்தமிட்டிருப்பார். வேலை நேரத்தில் மது வாசனையை முகர்ந்தும் பார்ப்பதில்லை தங்கராசு. வியட்நாமிய முதலாளிக்குத் துரோகியின் முத்தம் கிடைப்பதில் அம்மாளாச்சிக்கு விருப்பமில்லை என நினைத்துக் கொள்வார். அவரைப்பொறுத்த வரையில் ஊரைவிட்டு வந்தவர்கள் எல்லோரும் துரோகிகள், கோழைகள். தானும் இப்படிப் பயந்து கோழையாக ஓடிவருவேன் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. நினைத்திருந்தால் ஓடிச் செல்பவர்களை கோழைகள், துரோகிகள் என நினைத்திருக்க மாட்டார்.
சூப் கடையை ஏழு நாட்களும் திறப்பார்கள். முதலாளியும் அவரும் மட்டும் தான் வேலை. பகலில் வழி தவறி யாராவது வந்தால் தான் உண்டு. ஆனால் அப்படி வருபவர் திரும்பவும் வருவார் என்பது முதலாளியின் நம்பிக்கை. அவ்வளவு ருசியாக இருக்கும் சூப். இரவில் சொற்ப சனம் நிறையும். விடுமுறை எப்போதாவது அருமையாகத்தான் கிடைக்கும். தங்கராசுவும் விடுமுறையை விரும்பவில்லை. வேலைசெய்யும் ஒவ்வொரு மணிக்கும் அளந்து அளவாக முதலாளி சம்பளம் கொடுத்ததில் இனி சூப்கடை தான் கதியென்று இருந்தார்.
ஆனால், அங்கிருந்தும் அவர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது. மீன்களை மெல்லிய கத்தியால் வருடி சிறு சிறு துண்டுகளாக அறுத்து மீன் சூப் சமைக்கத் தயாரானார். நீளமான வாய் ஒடுங்கிய பாத்திரத்தில் நீர் விட்டு அது கொதிக்கும் நொடியில் மீன் துண்டுகளைக் கவனமாக இட வேண்டும். வந்த சில நாட்களிலே அந்த சூப் செய்யக் கற்றுக் கொண்டுவிட்டார். நீர் கொதிக்கக் காத்திருந்தார். வாசலில் சத்தம் கேட்டது. வெளியில் வந்து எட்டிப் பார்த்தார். முதலாளியை இன்னும் காணவில்லை. மதியத்தின் பின்னரே சனம் வரத்தொடங்கும் கடையில் நான்கு பேர் நேர்த்தியான உடையில் வந்திருந்தனர். மேசைகளைத் துடைத்து சுத்தம் செய்யும் முதியவரிடம் ஏதோ கேட்டார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுத்தம் செய்ய வரும் முதியவர். அவர் புரியவில்லை என்று சொன்னது தங்கராசுவிற்கு விளங்கியது. சரளமாக பிரஞ்சு பேசும் முதியவரின் நாக்கு நொடியில் தடித்துப் போனதில் தங்கராசு விக்கித்து நின்றார். மெதுவாக இடுப்பில் கட்டியிருந்த சிவப்புத் துணியைக் கழட்டி, கைகளை அழுந்தித் துடைத்துவிட்டு, அதை மேசையின் ஓரமாக வைத்துவிட்டு ,பின் கதவால் பாய்ந்து ஓடினார்.
நான்கு மெத்ரோ நிறுத்தங்களைக் கடந்த பின்னர் தான் திரும்பிப்பார்த்தார். யாரும் தன்னைத் துரத்திவரவில்லை எனத் தெரிந்ததும் நின்று நிதானித்தார். முழங்காலில் கைகளை வைத்துக் குனிந்து ஆழ்ந்து காற்றைச் சுவாசித்தார். உணவகத்தின் சிதம்பிய இரும்புச் சப்பாத்தும், அழுக்கேறிய நீலக் கோடுகள் போட்ட காற்சட்டையும் சமையல் வாசனையுடனும் இருந்தார். தூய ஆடைகளில் பிதுங்கி வழியும் சனத்திரளில் இரும்புச் சப்பாத்து பெரிதாகச் சத்தம் எழுப்ப, குதிரையின் கம்பீரத்தில் நடந்தார். அவசரமாக நகரும் சனத்திரளுள் அவர் மட்டும் தேர்ந்த தொழிலாளியின் சாயலில் இருந்தார். பின்னர் சூப் கடைப்பக்கம் போக விரும்பவில்லை. கோழையாகப் பயந்து ஓடி வந்தபின் வியட்நாமிய முதலாளியை எதிர்கொள்ள விரும்பவில்லை. வேலை செய்த நாட்களின் காசை வாங்கவும் செல்லவில்லை. இருபது வேலை நாட்களை முதலாளிக்கு இனாமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டார்.
வேலை இல்லாமல் வீட்டில் படுத்திருந்த நாட்களில் தான் விடுமுறையை வெறுக்கத் தொடங்கினார். நிலவறையில் சரிக்கட்டிய வீட்டில் மாதம் இருநூற்றி அய்ம்பது ஈரோ கொடுத்துத் தங்கிருந்தார். வைன் போத்தல்கள் அடுக்கும் சிறிய ‘காவ்’. அதனைக் கீழே மூன்றடிகள் தோண்டிப் பலகை அடித்து வீடாக மாற்றியிருந்தார்கள். சந்திரா வரும் வரைக்கும் தங்கிக் கொள்ள முற்பணம் கொடுத்தார். நிலவறை எப்போதும் குளிர்ந்திருந்தது. அந்தக் குளிர்மையை வீட்டுக்கிணற்றில் இறங்கும் நாட்களில் உணர்ந்திருக்கிறார். பாசி வாசனை மிகுந்த குளிர்மை. ஒரு கட்டிலும் ஒரு கதிரையும் வைக்கத் தாராளமாக இடம் இருந்தது. அவையே அவருக்கும் போதுமானதாக இருந்தன. நிலவறையுள் அவருக்கு ஒன்றே ஒன்றைத்தான் சகிக்க முடியாமல் இருந்தது. அவரின் தலைமாட்டின் அருகில் தான் வீட்டின் கழிவுநீர்க் குழாய் இருந்தது. இரவில் மேல்வீட்டில் யாரும் மூத்திரம் பெய்தாலும் மூத்திரம் தங்கராசாவின் தலையினுள்ளாகவே ஓடும். தொப் தொப் என மல நீர் சலசலத்துப் பாயும். இரவில் அடிக்கடி மூத்திரம் பெய்யும் வீடு. அந்தச் சலசலக்கும் சத்தத்தை அவரால் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை. மண்டைக்குள் யாரோ மலம் கழிப்பது போலிருக்கும். பியர் குடித்த ஓர் இரவில் அந்தச் சத்தத்திலிருந்து அவருக்குக் கொஞ்சம் விடுதலை கிடைத்தது.
அவருடைய அகதிக்கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்த இரவு பியர் குடித்தார். கறுத்த பொலித்தீன் தாளில் சுற்றி மூன்று பியர் ரின்களை வங்கி வந்தார். உப்பும், மிளகுத்தூளும் தூவி முட்டைப்பொரியல் செய்தார். பாதி பொரிந்ததும் பதமாக இறக்கினார். முட்டைடைப் பொரியலையும், பியரையும் தரையில் பத்திரிகையை விரித்து அதன் மேல் பரப்பி வைத்தார். முட்டையைப் பிய்த்துச் சாப்பிட்டபடி பியர் குடித்தார். இரண்டாவது பியரைத் தனது வயிறைத் தடவியபடி குடித்தார். மூன்றாவதைத் திறக்கவில்லை அப்படியே தரையில் சரிந்து விழுந்தார். தவளை ஒருக்களித்துப் படுப்பது போல நிலத்தில் சரிந்து படுத்தார். பின்னிரவு தாண்டி சின்னச் சின்ன ஆசை பாடலின் இசை அவரின் மண்டைக்குள் கேட்டது. சல சலத்து ஓடும் மூத்திரத்தின் ஓசை சுத்தமாகக் கேட்கவில்லை.
காலையில் எழும்பிய போது அறை பிரகாசமாகத் தெரிந்தது. இரவின் கசடுகள் நீங்கி நேற்றுத்தான் ஃபிரான்ஸ் வந்தது போல விடிந்திருந்தது. லேசாகத் தலை வலித்தது. அடுத்த அரைமணி நேரத்தில் உணவகத்தில் இருந்தார். சந்திராவையும், பிள்ளைகளையும் முகவர் மூலம் பிரான்ஸ் அழைக்கச் சொல்லிப் பலர் ஆலோசனை கூறியும் அவர் மறுத்துவிட்டார். தன்னைப் போல அவர்களும் பயந்து, பயந்து விமானமேறி வருவதில் அவருக்கு விருப்பமில்லை. வந்தால் முறையாகத் தானே விமானநிலையம் சென்று அவர்களை அழைத்து வரவேண்டும் என்றார்.
யேர்மனியிலிருக்கும் சந்திராவின் அண்ணன் பல முறை கேட்டும் அவர் யேர்மனிக்குச் சென்று வர மறுத்து விட்டார். யேர்மன்-ஃபிரான்ஸ் எல்லையில் சோதனைக் கொடுபிடிகளில்லை. அவருக்குப் பிரஞ்சுச் சட்டத்தை மீறி எல்லை கடந்து போவதில் விருப்பமில்லை. சந்திராவின் அண்ணன் மகனின் பிறந்ததினம், பெரிதாக யேர்மன் ரொஸ்ரொக்கில் உல்லாசக்கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டாடினார்கள். சந்திராவின் அண்ணனுடன் வெளிநாடு வருவதற்கு இடையில் மலேசியாவில் ஒன்றாகத் தங்கி இருந்தவர்கள் என்ற உரிமையில் எல்லாம் பலர் ஃபிரான்சிலிருந்தும் கூட பிறந்ததின விழாவிற்கு யேர்மன் சென்றார்கள். தங்கராசு போகவில்லை. சந்திரா எவ்வளவோ சொல்லியும் அவர் இஞ்சும் நகரவில்லை. பிறந்ததினம் அன்று உணவகத்தில் மீன்களைத் துண்டுகளாக அறுத்துக் கொண்டிருந்தார். முதலாளியின் கரங்களை அழுத்தமாகக் குலுக்கினார். அவர் செய்யும் விதிமீறல் இன்னொருவனின் விசாவில் களவாக வேலை செய்வது ஒன்று தான்.
நாள் முழுவதும் உணவகத்தின் வாங்கில் அமர்ந்திருந்தார். விடுமுறை முடிந்து நாளை வேலை தொடங்க இருக்கிறது. முப்பது பகல்கள் முப்பது இரவுகள் கடந்து விட்டிருந்தன. இருட்டிய பின் உற்கமாக வீடு வந்தார். கையோடு வங்கிவந்த கொத்துரொட்டிப் பொதியைப் பிரித்து, கொஞ்சம் அள்ளி வாயில் போட்டார். மிகுதியைச் சுற்றி மேசையில் வைத்தார். சாரத்தினை மாற்றிப் படுக்கும்போது மண்டைக்குள் மூத்திர நீர் சலசலத்து ஓடியது. வேலைக்குச் செல்ல இருக்கும் உற்சாகம் வடிந்தது அவரின் உதடுகள் நடுங்கின. உடனே பியர் அருந்த வேண்டும் போலிருந்தது. ஒரே ஒரு பியர் மாத்திரம் இருந்தது. அதை எடுத்த போது அது கை வழுக்கி விழுந்து உருண்டு கட்டிலின் கீழ் சென்றது. கட்டிலை மெல்ல நகர்த்தி அதன் கீழ் கைகளால் துழாவித் தேடினார். அழுகல் வாசனை முகத்தில் அறைந்தது. பருத்த உடலை வளைத்து உள்ளே நுழைந்தார். நீர்ப்பாசியின் வாசனை வந்தது. நீர்க்கசிவு தெரிந்தது. கால் இடறி எங்கோ ஆழத்தில் விழுந்தார். மிதந்தபோது பெரிய கிணற்றினுள் இருந்தார். தெளிந்த நீர் நிறைந்த சதுரக்கிணறு. நிலமட்டத்திலிருந்து சில அடிகளில் நீரிருந்தது. அதன் படிகளில் ஏறி மேலே வந்த போது அந்தக் கிணற்றை அடையாளம் கண்டு கொண்டார். அது யாராலும் ஆழமே காணமுடியாத நிலாவரைக் கிணறு. அவருடைய வெங்காயத் தோட்டத்தைத்தை தேடினார் கடைசிப் பாத்திக்கு சிவராசா நீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
தை 2016