புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களால் எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து விலகி மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பேசிய நாவல்களென எதையும் தனித்து அடையாளம் காட்டமுடிவதில்லை. பெரும்பாலான புலம்பெயர் படைப்பாளிகள் இயக்கப் பின்புலம் உள்ளவர்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் அடியில் கரும்பரப்பாக உருத்திரண்டிருக்கிறது. அவர்கள் முன்னிருந்த தேவையாக தமது அரசியற் பிரக்ஞைக்கு அதரவு கோரும் முனைப்போடு உருவாக்கிய பிரதிகளில் அவர்களின் அரசியல் நிலைபாடுகளின் பிரசன்னமே மேலோங்கியிருந்தது. பிரச்சாரத்தின் ஊடகமாக தாம் இயங்கிய மிகச்சிறிய இலக்கிய வெளியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் அல்லது அப்படி இயங்கியவர்களை இணைக்கும் குவிமையமாக இலக்கியம் இருந்திருக்கிறது.
போரும் அதன் வலிகளாலும் – அதிகாரம் குறித்த கேள்விகளாலும் – நலிந்த விடுதலையின் குரல்களாலும் – படுகொலையின் இரத்தங்களாலும் நிரம்பியிருந்த புலம்பெயர் நாவற் பிரதிகளில் ஓர் உடைப்பை லெனின் சின்னத்தம்பி நிகழ்த்தியிருக்கிறது. இலங்கையில் வாழ்ந்த கால அளவைவிட புலம்பெயர்ந்து வாழ்ந்த காலஅளவு அதிகமானதாகி விட்டாலும் இன்னும் பலரின் சிந்தனையும், செயல்களும் இலங்கை குறித்தானதே. புலம்பெயர்ந்த நாடுகளின் மையநீரோட்டத்தில் கலக்க முடியாமல் விளிம்புநிலை வாழ்வும், வேலைகளும் செய்து ஒரு தலைமுறை கடந்து விட்ட பின்னரும் அவை குறித்த காத்திரமான பதிவுகள் இலக்கியமாக முன் வைக்கப்பட்டதில்லை. புலம்பெயர்வாழ்வு கொடுத்த அகநெருக்கடிகள், அடையாளச்சிக்கல்கள், மதிப்பீடுகளின்வீழ்ச்சிகள், மொழிச்சிக்கல்கள், கலாசார நெருக்குதல்கள் குறித்த பதிவுகள் இன்னும் விரிவாகப் பிரதிகளில் உரையாடப்படவில்லை. அதனை ஒரு பக்கத்தரப்பாக லெனின் சின்னத்தம்பி செய்திருக்கிறது. ஒரு பக்கத்தரப்பாக முன்வைக்கும் அதன் அரசியல் குறித்து இறுதியில் உரையாடலாம். அது பேச விளைந்த வர்க்க – அடையாளச் சிக்கல்கள் குறித்துப்பார்க்கலாம்.
விளிம்புநிலை வாழ்வு கொடுக்கும் அகநெருக்குதல்கள் சிக்கலானவை. கூடவே அடையாளச் சிக்கல்களும் சேர்ந்து கொள்ளும்போது அதன் போக்குகள் வேலையிடங்களில், தேநீர் அருந்தகங்களில், ஓய்வு அறையில் பொதுப்போக்குவரத்துகளில், விசாரணைகளில் தம் அதிகார வன்முறையை சொல், செயலில் கோரிநிற்கும். இந்நெருக்கடிகளிலிருந்து வெளிவர குடும்பம், வேலை போன்ற அதிகார நிறுவனங்கள் விடுவதில்லை. இப்படியாகப் பதினைந்து வருடங்கள் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கடைநிலைத் தொழிலாளியாக பாத்திரம்கழுவிக் கொண்டும், உலர்ந்த இறைச்சிகளை மெல்லிய சீவல்களாக வெட்டி வடிவாக அடுக்கிக் கொண்டும், சவற்கார நுரைததும்பும் அழுக்கு நீரோடு காலந்தள்ளிய சின்னத்தம்பியின் பதினைந்து வருட வேலையிட அனுபவங்கள் குறித்த பதிவே இந்த லெனின் சின்னதம்பி எனத் தொகுத்துக் கொள்ளலாம்.
வேலையிடத்தில் அதிகாரம் எப்படிப் படிநிலையாகம் செய்யப்படுகிறது, அது செயற்படும் நுண் தளங்கள் குறித்தும் விரிவாகப்பேசுகிறது. காலையில் கை குலுக்கி வணக்கம் செலுத்துவதிலிருந்து, மதியம் ஓய்வறையில் அமரும் இருக்கை வரை அதிகாரப்படி நிலையாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. லெனின் சின்னத்தம்பி கறுப்பராக, ஆசியராக அவர்களிடையே அடையாளப் படுத்தப்படுகிறார். அவருடன் நிற வேறுபாடின்றி பழகும் ஒரு சிலரும் கிழக்கு யேர்மனியிலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். வேலையிடத்தில் லெனின் சின்னதம்பி மாத்திரம் இவ்வடையாளச் சிக்கலில் நெருக்குதற்படவில்லை. முதலாளியின் மனைவியின் ஸ்பெயின் பின்புலம் குறித்த எள்ளல் உரையாடல்களும் வருகின்றன. அவ்வின அடையாள நெருக்குதலினால் அவள் யேர்மனியர்களைக் கடிந்து கொள்ளக் கூட முடிவதில்லை. யேர்மனியர்கள் இனத் துவேசம் மிகுந்தவர்கள் எனும் பொதுப் பார்வையிருக்கிறது. நாவலும் அந்தப் பொதுப்புத்தியைப் பல இடங்களில் திருப்தி செய்கிறது.
சின்னத்தம்பிக்குத் தெரிந்ததெல்லாம் வேலை, வேலை முடிந்தால் வீடு எனும் எளிய வாழ்வு. தினமும் கடிகாரங்களுக்குப் பயந்து கதகதப்பான போர்வையினுள் ஒளிந்து கொள்ளுகிறார். பின்னிரவு தாண்டியும் வரமறுக்கிறது நித்திரை, நினைவுகளும் அடுத்த நாள் வேலையிடத்து நினைவுகளாலேயே நிரம்பியிருக்கிறது. வேலையிட நெருக்கடி கொடுக்கும் வாழ்வு குடும்பத்தினுள் அவரை ஒன்றிப்போக விடுவதில்லை. வேலையிட அக நெருக்கடிகள் அவரைத் தொடர்ந்து தூக்கத்திலும் துரத்துகிறது. கடிகாரங்களுக்கும், நேரத்திற்கும் பயந்து அவர் கடிகாரத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொள்ளுகிறார். தப்பிப்பதற்கான அனைத்து வழிகளும் அடைபட்ட கையறுநிலையில் வேலையிற் தொடர்கிறார்.
வேலையில்லாது இருப்பதையிட்டுக் குற்றவுணர்வு கொள்ளச்செய்யும் உரையாடல்களும், கற்பிதங்களும் நிறைந்திருக்கும் புலப்பெயர் சூழலில் வேலையைத் தக்க வைப்பதென்பது பெரும்பாடு. அதிலும் புலத்தில் இருந்த அதிகாரங்கள், பதவிகள், பெயர்கள், கல்விகள் அத்தனையும் பூச்சியமாக்கப்பட்டுத் தொடங்கப்படும் வாழ்வது. அடையாளம் சிதைக்கப்பட்டு, மதிப்பீடுகள் வீழ்த்தப்பட்டு புதியசூழலில் பொருந்திக்கொள்ளும் போது மொழியும் நெருக்குகிறது. வேலையிடங்களில் கிடைக்கும் அவமதிப்புகளுடன் சதா கொந்தளிக்கும் மனம் அவருடையது. அவரால் துரும்பளவு எதிர்ப்பைக் கூடக் காட்டமுடிவதில்லை.
முதலாளி சப்கோஸ்க்கி, லெனின் சின்னத்தம்பியின் கடைசிச் சொட்டு ஆன்மாவையும் சக்கையாகப் பிழிந்துவிடுகிறார். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் வந்த பொருளாதார நெருக்கடிகள் யேர்மனியிலும் தொடர்கிறது. அது சின்னத்தம்பியின் நிறுவனத்தையும் பாதிக்கிறது. பலர் வேலை இழக்கின்றனர். சின்னத்தம்பியின் வேலை இரட்டிப்பாகிறது. பாத்திரங்கள் கழுவுவதோடு உணவுத்தட்டுகளையும் தயார் செய்ய வேண்டும், கூடவே எடுபிடி வேலைகளும் அவரை வந்தடைகின்றன. இந் நெருக்கடிகளால் நிறுவனத்தில் பல கட்டுப்பாடுகள் வருகின்றன. உபரியாக ஒளிரும் மின்விளக்குகளும் கண்காணிக்கப்படுகிறது. பணம் ஒன்றே இலக்கான முதலாளியும் தொடர்ந்து தொழிலாளர்களைக் கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கண்காணிக்கிறார். தொழிலாளிகள் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுத்தாலும் புதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை. இருப்பவர்களைக் கொண்டே வேலைகள் முடிக்கப்படுகின்றன. இரட்டிப்பாகும் வேலைக்கு மேலதிகச் சம்பளங்கள் வழங்கப்படுவதுமில்லை. அழகான உணவுத்தட்டங்களின் பின்னால் பல்லிளிக்கும் நிதர்சனமது. பிழியப்படும் ஆன்மாவின் சொட்டுகள் முதலாளியின் சட்டைப்பையை நிரப்பிக்கொள்கிறது.
சின்னத்தம்பி மாத்திரமல்ல முதலாளிக்கு விசுவாசமாகப் பல வருடங்களாக மாடாக உழைத்த ஸ்ரைட்டரும் முதலாளியால் கை கழுவப்படுகிறர். முதலாளியின் அப்பாவின் காலத்திலிருந்து நிறுவனத்தின் ஒவ்வொரு அணுவிலும் தன் வியர்வையைச் சிந்திய ஸ்ரைட்டரின் கால் மூட்டுகள் தேய்ந்து படுக்கையில் வீழ்ந்ததும் அவனின் உயிர் பயனற்றதாகி விடுகிறது. அத்தனை வருட உழைப்பும், அர்ப்பணிப்பும் ஒன்றுமில்லாததாகி விடுகிறது. தேய்ந்து, நீர்வற்றிய கால் மூட்டுகளுடன் அவன் வேலைக்குத் திரும்பும் போது முதலாளிக்கு வேண்டாதவனாகி விடுகிறான். அவனுடைய அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, வெறும் சமையற்காரனாக படிநிலையிறக்கம் செய்யப்படுகிறான். அது குறித்தும் அவன் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. தனக்கு இட்ட வேலைகளை அதே விசுவாசத்துடன் செய்து முடிக்கிறான். சின்னத்தம்பியையும் புதிய நிர்வாகிக்கு அடங்கிப்போகும்படி ஆலோசனை வேறு கூறுகிறான். அவன் சிந்தனை, மனம் நுட்பமாக இட்ட கட்டளையை நிறைவேற்றுவதாகத் தூர்ந்துபோயுள்ளது. அவனின் இடத்தை உவ்வ நிரப்பிக் கொள்கிறான். அவ்வளவு அதிகாரங்களையும் தான் எடுத்துக் கொள்கிறான்.
உவ்வா முதலாளிக்கு விசுவாசமாக ஒவ்வொரு இடுக்கிலும் சந்தேகத்தின் கண்களைப் பொருத்துகிறான். வேலையிடத்தில் புதிய நெருக்கடிகள் முளைக்கின்றன. வேலைக்குப் புதிதாக வருபவர்களும் சின்னத்தம்பியின் அனுபவத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. அவரைக் கடைசி வரை ஒரு கடைநிலை ஊழியனாகவே பாவிக்கிறார்கள். அது கொடுக்கும் அக நெருக்கடிகளும் அவரைத் துரத்துகிறது. ஒரு செப் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் தெரிந்திருந்தும், அதன் நுட்பங்கள் அனைத்தும் புரிந்திருந்தும் அவரின் அடையாளம் அவரை ஒதுக்கித் தள்ளுகிறது. மாநகரின் பிரமாண்ட உணவு இயந்திரத்தினுள் சக்கையாகப் புகுந்து சக்கையாகவே வெளியேறுகிறார். அவரின் உழைப்பு உறிஞ்சப்பட்டு பயன்மதிப்பற்ற பொருளாக ஒரு புத்தாண்டில் வெளித் தள்ளப்படுகிறார்.
இந்த முதலாளி – தொழிலாளி குறித்தான வர்க்க அதிகார அடக்குமுறைகள் குறித்த பதிவுகள் நம் சூழலில் நிரம்பவிருக்கின்றன. அவற்றிலிருந்து லெனின் சின்னத்தம்பி நாவல் எங்கு தன்னை வேறுபடுத்திக்கொள்கிறது? எங்கும் அது தன்னை வேறுபடுத்திக் கொள்ளவில்லை. குக்கிராமத்தில் பலசரக்குக் கடையிலிருக்கும் தொழிலாளி – முதலாளியின் சுரண்டலை இது யேர்மனியில் பேசுகிறது. அன்றி அது அதிலிருந்து விலகி அதன் முரண் உண்மைகளைப் பேச முயலவில்லை. தொழிலாளியின் பக்கத் தரப்பை மட்டுமே முன்வைக்கிறது. முதலாளி – தொழிலாளி என்ற இருமைகளில் அது தொழிலாளியின் பக்கமிருந்து பேசுகிறது. முதலாளியைத் தீமைகளின் மொத்த வடிவமாகக் கட்டமைக்கும் நாவல், சின்னத்தம்பியை அப்பழுக்கற்ற புனிதராகவும் கட்டமைக்கிறது. இந்தப் புனிதமாக்கலின் பின்னால் உள்ள அறம் சார்ந்த கேள்வியே நாவலை ஒருபக்கமாகப் புரிந்து கொள்ளவைக்கிறது.
முதலாளியாலும், செப்மாரினாலும் தொடர்ந்து நெருக்குதற்படும் லெனின் சின்னத்தம்பி சமூகத்தில் என்னவாக இருக்கிறார் ? புலத்தில் என்னவாக இருந்தார் ? என்பது குறித்த குறிப்புகள் எவையும் நாவலில் இல்லை. அவர் சாதித் தடிப்பு மிக்க வெள்ளாளராகவோ, அடக்கி ஒடுக்கும் கணவனாகவோ, அதிகாரம் மிக்க விதானையாகவோ, இல்லை இன்னொரு குட்டி முதலாளியாகவோ இருந்திருக்கலாம். ஏன் ? சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் ஒருவர் ஏக காலத்தில் இனவாதியாக இருப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன. இதுவே லெனின் சின்னத்தம்பியை அப்பழுக்கற்ற புனிதராகக் கட்டமைப்பதில் உள்ள இடராகும். இந்தப் புனிதமாக்கல் நாவல் வாசிப்பில் தொடர்ந்து துருத்தியபடி இருக்கிறது.
நாவலில் உருக்கொள்ளும் மொழி புனைவிற்கான மொழியல்ல. அது நேரடியான உணர்ச்சிகளற்ற மொழி. அதில் தேவையற்ற விபரிப்புகளோ, நுண்தகவல்களுக்கோ இடமில்லை. அதுவொரு ஒளிப்படக்கருவியின் இலாகவத்தோடு லெனின் சின்னதம்பியின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. அவரின் அனுபவங்களை எந்தப் பாசாங்குகளுமின்றி அப்படியே பதிவு செய்கிறது. அதனால் ஆவணத்திற்கு நெருக்கமான மொழியுடைய நாவல் போலுள்ளது.
வேலையிடத்தில் நுண்தளங்களிலும் இயங்கும் அடையாள நெருக்கடி குறித்து அதிகம் பேசாத நாவல் ஒட்டு மொத்தமுமான விடுதலையின் மையமாக வர்க்க வேறுபாட்டைச் சுட்டி நிற்கிறது. சின்னத்தம்பியை நெருக்கும் குடும்பம், அடையாளச்சிக்கல்கள் குறித்தும் அதிகம் பேசவில்லை. சிறுகதையிலிருந்து நாவலெனும் வடிவம் உருக்கொண்டதன் நோக்கமே பல் பரிமாணங்களைப் பேசும் வெளியை உருவாக்குவதற்குத்தான். சிறுகதைகள் ஒரு பக்கத் தரப்பை மட்டும் சொல்லிச் செல்லும் போது நாவல் பல் முரண்களையும் பேசும். அதுவே அதன் உள்விரிவும் ஆகும். லெனின் சின்னத்தம்பியில் அந்த இரசவாதம் நிகழவில்லை. அது புதிய களத்தில் வர்க்க வேறுபாட்டு நெருக்கடிகளைப் பேசுகிறது. இன்னமும் உரையாடப்படாத, வலிமையாகப் பதிவு செய்யப்படாத ஆன்மாக்களின் உலர்ந்த வெளியைப் பேச விளைந்திருக்கிறது. முதற் தலைமுறை அரசியல் தஞ்சம் கோரியவர்களின் இருப்பையும், அவர்களின் வேலை நெருக்கடிகள் குறித்தும் பேசுகிறது, முதலாளியின் சுரண்டல் குறித்து விரிவாகப் பேசுகிறது. அந்தவகையில் லெனின் சின்னத்தம்பி முக்கியமானதொரு பதிவாகும். அகதித் தொழிலாளியின் மாதிரி வாழ்வுக்கு உதாரணமான ஒருவராக லெனின் சின்னத்தம்பி இருக்கிறார்.
லெனின் சின்னத்தம்பி – நாவல்
ஜீவமுரளி
உயிர்மெய் பதிப்பகம்,
நோர்வே