தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், போலியுமான முன்வைப்புகள் நிறைந்தவை. ஆகவே உடனடிக் கவனிப்புக்கு உள்ளாகின்றன. அவரது எழுத்துக்குப் பல பாவனைகள் இருக்கின்றன. போலியான முகமூடிகள் போல, நுரை தள்ளும் ஆவேசப் பேச்சுக்கள் போல. அவற்றில் இனவெறுப்பும், போலி வீராவேசமும் தூக்கலாக இருக்கும். அது சமூகத்தை, மக்களை, அரசை பிரித்தறிய முடியாத அறியாமையால் உருவாகுபவை என்பது என்னுடைய அவதானம். கூடவே ஒரு சில சிங்கள முற்போக்கர்களுக்கு தங்கள் குற்றவுணர்வின் வடிகாலாகவும் தீபச்செல்வனின் போலி எழுத்துக்களை முன்வைக்கிறார்கள். அதனால் அவரது படைப்புக்களுக்கு உடனடிக் கவனங்கள் கிடைக்கின்றன. கூடவே அவை ஈழத் தமிழ் தேசியத்தரப்பால், சிங்கள முற்போக்கு தரப்பால் ஆவேசமாக முன்வைக்கப்படுபவை. ஆனால் அது அவரது இலக்கிய இடம், கூர்மையான இலக்கிய மதிப்பீட்டினாலோ அல்லது அவரது படைப்புக்கள் கொண்டிருக்கும் வாழ்க்கை நோக்காலோ அல்லது அவரது படைப்புக்களில் வெளிப்படக்கூடிய கூரிய நேர்மையான வாழ்க்கை, போர் குறித்த மாற்றுப் பார்வைகளாலோ உருவானவை அல்ல என்பது இங்கே முக்கியமானது.

தீபச்செல்வன் தான் எம் தலைமுறையின் முக்கியாமன குரலாக தமிழகத்தில் இருந்தும் முன்வைப்படுபவர். அவரது புத்தகங்கள் கவர்சிகரமான சினிமா வெளியீடுகள் போல, ஈழத்தமிழரின் ஆன்மாவை, வீரத்தை, அந்தரிப்பை, ஒடுக்குமுறையை வெளிப்படுத்துபவை என்பதான பளபளப்பான லேபிள்கள் ஒட்டித் தமிழகத்தில் விற்கப்படுகின்றன. அதற்குப்
பொருத்தமான தலைப்புக்களுடன் அவரும் அதற்கான அத்தனை வீராவேச அரையுண்மைகளையும் தொடர்ந்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கக் கூடியவர். அதற்காக மிகையான போலியான பாவனைகளை அணியக்கூடியவர். அவரது இலக்கிய இடம், அவரது போலி முன்வைப்புக்களினால் ஆனவை என்பதே என்னுடைய வலுவான எண்ணம். சரியாக இந்தப் புத்தகத் தடை விவகாரத்திலும் அதுவே நிகழ்கிறது. அவர் அதனையே சரியாகச் செய்கிறார்.

இலங்கைக்கு சுங்கத்தில் வரும் புத்தகங்கள் அனைத்துமே அதன் உள்ளடக்கங்கள் சந்தேகமிருந்தால் தடுத்து வைக்கப்படுவதும், விசாரணை செய்து பின் கொடுப்பதும் நடைமுறை. அய்ந்து வருடங்கள் முன் என்னுடைய ஆனைக்கோடாரி சிறுகதை தொகுப்பு வந்த போதும் அப்படித்தான் செய்தார்கள். முதலில் என்னைக் கூப்பிட்டு இருவர் விசாரித்தார்கள். ஒரு வார அவகாசம் கேட்டார்கள். மூன்று நாளில் அழைத்து என்னிடம் புத்தகங்களை ஒப்படைப்பதாக ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பின்னர் புத்தகங்களை கொடுத்தார்கள். அது நடைமுறை. பல புத்தகங்கள் அப்படி கொடுக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. லைடன் தீவு படுகொலைகள் அப்படியே தடுத்து வைக்கபட்டவற்றுள் ஒன்று. அதன் உள்ளடக்கம் சார்ந்து சுங்கம் எடுத்த முடிவு அது. இங்கே கவனிக்க வேண்டியவை சுங்கம் ஊடாக பொதிகளில் வரும் புத்தகங்களுக்கே அதிகமும் இந்த நடைமுறை. விமானத்தில் கொண்டு வந்தால் அப்படித் தடுக்கப்பட்டதாக நான் இதுவரையும் அறியவில்லை.

இங்கே தீபச்செல்வன் மறைக்கும் சில உண்மைகள் இருக்கின்றன. இன்றைய விகடன் பேட்டியின் தலைப்பு ’தொடரும் புத்தக முடக்கம்: தமிழரைக் கண்டு இலங்கை அரசு அஞ்சுகிறது’ இப்படி அவர் போலியாக அரையுண்மைகளுடன் தன்னை வெளிப்படுத்துவது இது அல்ல முதல்தடவை. அவரது மொத்த எழுத்துக்களும் இப்படியான போலி முன்வைப்புகளின் மேலே நின்றிருப்பவையே.

ஒரு நாட்டிற்கு வெளியிலிருந்து சுங்கம் வழியாக வரும் புத்தகங்கள் கட்டுப்படுத்துவது இலங்கையில் மட்டும் இருக்கும் நடமுறை அல்ல. பல நாடுகளிலும் இருக்கும் நடமுறை. இலங்கை போன்ற உள்நாட்டு யுத்தத்தால் பாதிப்படைந்த நாட்டில் அப்படியான நடமுறைகள் இறுக்கமாக இருக்கின்றன. ஆனால் அவற்றால் தமிழ் நூல்கள் மட்டுமே கட்டுப்படுத்தபடுகின்றனவா என்பதே கேள்வி? இல்லை. சிங்கள நூல்களுக்கும் அதுதான் நடைமுறை. ஆனால் ஏன் ஒரு சிங்கள நூலாவது அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டதாக பதிவு இல்லை. காரணம் சிங்கள நூல்கள் இலங்கைக்கு வெளியில் அச்சடிக்கப்படுவது அரிது. அவை பெரும்பாலும் இலங்கைக்கு உள்ளேயே அச்சடிக்கப்படுகின்றன. ஆகவே அவை சுங்கத்தால் கட்டுப் படுத்தப்படுவதில்லை. தமிழ் நூல்களே பெரும்பாலனவை தமிழகத்தில் இருந்து அச்சடிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதனால் அதிகமும் தடுத்து வைக்கப்படுகின்றன. அவையும் எல்லாம் நூல்களும் அல்ல அவற்றின் உள்ளடக்கம் சார்ந்தும், அவற்றில் இருக்கும் இனவெறுப்பு பிரச்சாரம் சார்ந்தும், தீவிரவாத ஆதரவு உள்ளடக்கங்கள் (அரச நோக்கில்..) சார்ந்து அரச நோக்கில் அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த உள்ளடக்கங்கள் இலங்கைக்கு உள்ளே அச்சடிக்கப்பட்டால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தீபச்செல்வன் புத்தகங்களும் இலங்கைக்குள் அச்சடிக்கப்பட்டிருந்தால் அது தடை செய்யவோ தடுத்துவைப்பு செய்யவோ வாய்ப்புக் குறைவு. அல்லது அறவே இல்லை. ஆனால் அதன் தலையங்கம், உள்ளடக்கம் சார்ந்து வெளியிலிருந்து வரும் போது சிக்கலாகிறது. தடுக்கப்படுகிறது. அது தமிழ் நூல் என்பதாலோ அல்லது தமிழரைக்கண்டு அரசு அஞ்சுவதாலோ அல்ல. ஆனால் இந்தத் தடையை அப்படித்தான் தீபச் செல்வன் முன்வைக்க விரும்புகிறார். அந்தவகைப் போலி முன்வைப்புத்தான் இலக்கியம், எழுத்து என்று நம்புகிறார். அதனால் தான் அவர் அரை உண்மையாளர் என்கிறேன்.

தீபச்செல்வன் புத்தகத்தடை தொடர்பாக அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் தொனி, சொற்கள் எல்லாம் இந்த விகடன் தலையங்கத்துக்கு முற்றிலும் நேர்மாறானவை. குழைவும், இரத்தலும் கொண்டிருப்பவை. தமிழகத்தின் விகடன் பேட்டியில் எழும் ஊழைச் சத்தம், அமைச்சரிடம் கும்பிடு போட்டுக் குனிந்துவிடுகிறது. இந்த போலியான இரட்டை நிலைப்பாடுதான் அவரை தொடர்ந்தும் விமர்சிக்கக் காரணமாகிறது.

இதனால் இலங்கை அரசு புத்தக உள்ளடக்கங்களை எப்படி படிக்கிறது, எப்படி அதற்கான பொறிமுறையை வைத்திருக்கிறது அதில் இனமேலாதிக்கத்தின் அம்சங்கள் இருக்காது என்று நான் சொல்லவரவில்லை. அவர்களது இனமேலாதிக்கம் வெளிப்படையானது. அதன் ஒவ்வொரு அம்சத்திலும் அதன் கூறுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த அரசும் அதற்கு விதிவிலக்கானதல்ல.

ஆனால் இந்தப் புத்தகத்தடை விவகாரத்தில் தீபச்செல்வனின் இரட்டை முகமும். போலி முன்வைப்புக்களுமே சிக்கலுக்குரியது. ஒரு படைப்பாளியாக இந்த அதிகாரத்தின் முன் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டும், அந்தப்பக்கம் தமிழக ஊடகங்கள் மற்றும் பேஸ்புக்கில் வீராவேசப் பேச்சுக்களும் அருவருப்பூட்டக் கூடியவை.

கடந்த மாதம்தான் வரிப்புலிச் சீருடையில் பொட்டம்மான் படம் அட்டைப்படமாக போட்ட நட்சத்திரன் செவ்விந்தியனின் முகாமுகம் புத்தக வெளியீடு யாழில் நடந்தது. புத்தகங்களும் தடையில்லாமல் கிடைத்தன. புனைவாக இலக்கியமாக முகாமுகாம் நான்காம் தரமானது என்பது வேறு விடயம். அதில் நேரடியாகப் பொட்டம்மான், பிரபாகரன் பெயர்கள் போட்டு எழுதுவதால் வாசகரிடையே உருவாகக் கூடிய ஒரு வகையான ஆர்வத்துக்கு அப்பால் இலக்கியமாக ஒன்றுமே இல்லாதது. போலியான செயற்கையான சம்பவ இணைப்புகள், அரதப்பழசான மொழி வெளிப்பாடு. கூடவே இந்த வகை வெளிப்படுத்தல் எழுத்துகளுக்கு இருக்கவேண்டிய நேர்மையோ, சமநிலையான பார்வையோ நட்சத்திரனிடம் இல்லை. ஒரு பிறழ்வான மூர்க்கம் மட்டும் அவரிடம் இருக்கிறது. இந்தக் கதைகள் 20-30 வருடங்கள் முன்னர் எழுதப்பட்டிருந்தால் கூட அதிகாரத்துக்கு எதிரான குரல் எனச் சொல்லலாம். இலக்கியமாக அல்ல. இன்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் எல்லாத் தரப்பாலும் கைவிடப்படவர்கள். கதைகளாக மட்டும் எஞ்சியவர்கள். நட்சத்திரனுக்கு சிறுகதைக்கான மொழியோ, அல்லது புனைவுக்கான விரிந்த பார்வைகளோ இல்லை. அவரிடம் இருக்கும் ஒற்றைப்படையான மூர்க்கம் பேஸ்புக்குக்கு வேண்டுமானால் உவப்பானதாக இருக்கலாம். சரி, இது வேறு வகை உரையாடல். ஆனால் இந்த மாதிரியான அட்டைப்படங்கள் போட்ட புத்தகங்களும் தடையில்லாமல் இலங்கையில் கிடைக்கின்றன என்பதே கவனிக்க வேண்டியது.

தீபச்செல்வன் போலியாக முன்வைப்பது போல தமிழர்களைக் கண்டு அரசு அஞ்சவில்லை. அதனால் இவருடைய புத்தகத்துக்கான தடையுமல்ல என்பதே.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று தோன்றுகிறது. தீபச்செல்வன் புத்தகம் தடையென்றதும் ஒரு அமைச்சர் வீடு தேடி வந்து விசாரிக்கிறார். இன்னொரு அமைச்சருக்கு கடிதம் எழுத அவர் நடவடிக்கை எடுப்பதாக உடனே பதில் எழுதுகிறார், விகடன் மாதிரியான பெரிய ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார். அவருக்காப் பேச அதிகாரமிக்க பல குரல்கள் இருக்கின்றன.

ஆனால் தங்கள் புத்தகம் தடைசெய்யப்பட்டால் குரல் கொடுக்க ஆட்களே இல்லாத ஏழை எழுத்தாளர்கள் என்ன செய்ய முடியும்? குறிப்பாக கிரிசாந், யதார்த்தன், தர்மு பிரசாத் போன்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் என்னதான் செய்வது? எங்களுக்கு அமைச்சரிடம் இரக்கவும் தன்மானம் விடாது. அது பழைய சிற்றிதழ் மனநிலை. விகடனுக்கு போலியாக அரையுண்மைகளைச் சொல்லவும் தைரியம் இல்லை. மனமும் வராது.

ஆனால் அந்த ஓர்மம் தானே ஒரு எழுத்தாளனின் முதுகெலும்பில் இருக்கவேண்டிய எலும்புகளில் முதன்மையானது இல்லையா?

***

தீபச்செல்வனின் பதிவு.

“நேற்றைய நாளில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தமையால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானேன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற எனது நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டன.

கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்திருந்தது.

ஒருபுறம், எமது இனத்தின் வாழ்நிலை மிகவும் நெருக்கடியும் போராட்டமும் கொண்டது எனில், மறுபுறம் அதனை எழுதுவதும் புத்தகமாக அவை பரிமாறப்படுவதும்கூட போராட்டமாகியதை உணர்கையில் மிகுந்த வேதனையும் அயர்ச்சியும் அடைந்தேன். ஈழ மண்ணில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது என்பது மிகவும் நெருக்கடியானது என்பதை மீளவும் மீளவும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

எனினும் இந்த நிலையில் எனது எழுத்தின் நியாயத்தை உணர்ந்த சிங்கள நண்பர்கள், தமிழ் எழுத்தாளர்கள் இச் சூழலில் விரைந்து எனக்கு ஆதரவு அளித்தனர்.

அவர்கள் வழியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரிடம் இருந்து உடன் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் எனது இல்லத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் அவர்களுக்கு எழுதிய கடிதம்

“நான் ஒரு எழுத்தாளன். கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

போரால் எங்கள் வாழ்வும் காலமும் அழிக்கப்பட்டது. போரில் எனது சகோதரன் ஒருவர் வீரராக சாவடைந்தார். கடந்த கால அனுபவங்கள், நினைவுகளை எதிர்காலத்திற்கான பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக நாவல்களாகவும் கவிதைகளாகவும் எழுதி வருகிறேன்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து அனுப்பட்ட எனது புத்தகங்கள் 360 சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

இவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஒருபோதும் எழுதப்பட்டவையல்ல. அத்துடன் எந்தவொரு அமைப்பையும் மீளமைக்கும் விதத்தில், நான் புத்தகங்களை எழுதவில்லை. கடந்த போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முன்னாள் போராளிகள் பற்றிய கதைகளையே எனது நாவல்களில் எழுதியுள்ளேன். அவற்றை வெளிக்கொணர்ந்து போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு படைப்பாளியாக என்னாலான எளிய பங்களிப்பை எழுத்தில் வழங்குகிறேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் மக்கள், படைப்பாளிகள் மாத்திரமின்றி புத்தகங்களும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உள்ளாகின. ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் நாம் முழுமையான சுதந்திரத்துடன் வாழவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கையை இன்னுமும் பற்றிக் கொண்டுள்ளோம்.

எனது எழுத்துக்கள் மிகுந்த நியாயம் கொண்டவை என்பதால் சிங்கள மக்கள் மத்தியிலும் எனக்கு நிறைய வாசகர்கள் உள்ளனர். இப்போது தடுத்து வைக்கப்பட்ட எனது நூல்களில் சில சிங்களத்திலும் வெளியாகி உள்ளன. அவற்றைப் படித்த சிங்கள மக்கள் எனது வீடு தேடி வந்துள்ளனர். எழுத்தில் வழியாக இரண்டு இனங்களுக்கும் இடையில் பரஸ்பர உணர்வுப் பரிமாற்றத்தை ஏற்படுத்தி நல்ல புரிதலை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும்.

கவிதை, எழுத்து, கலைகள்மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டுள்ள தாங்கள், நல்லெண்ணம் கொண்டு செயற்படும் எனது நூல்களை, விடுவிக்க ஆவணை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.”

இத் தருணத்தில், உடனிருக்கும் உறவுகளுக்கு அன்பும் நன்றியும்”

தீபச்செல்வன்