
இலங்கையிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – இலக்கிய வாசகர்களால் 1988-ஆம் வருடம், ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு, இந்த முப்பத்தாறு வருடங்களில் அய்ம்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும், கனடாவிலும், தாயகத்திலும் நிகழ்த்தி; அதனது 51வது சந்திப்பை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நிகழ்த்துகிறது.
இந்த 51வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ சிறுகதை மலரைத் தொகுத்து வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் உவகையடைகிறோம். மலரில் எழுதியிருக்கும் ஈழ – புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு எங்களது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 41வது இலக்கியச் சந்திப்பு மலரான ‘குவர்னிகா’வைப் போலவே, ‘இமிழ்’ கதைமலரையும் எங்களுடன் இணைந்து வெளியிடும் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்திற்குத் தோழமை நன்றியை உரித்தாக்குகின்றோம்.
இந்தத் தொகுப்பில், நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் பங்களித்திருக்கிறார்கள். பத்து நாடுகளிலிருந்து எழுதப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகளைத் தொகுத்துள்ளோம்.
கொடிய யுத்தம் நிகழ்ந்த நிலத்தில் வேரோடிய இந்தக் கதைகளின் அடிச்சரடாக யுத்தம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கதைகளில் இல்லை. ஆனால், யுத்தத்தின் கொடூர முகம் சிறு தீற்றலாகவேனும் அநேக கதைகளில் வெளிப்பட்டுவிடுகிறது. இன்னும் அய்ம்பது தலைமுறைகளைக் கடந்தாலும் யுத்தம் அழிந்து போகாத வடுவாக ஈழ – புலம்பெயர் படைப்புகளில் எஞ்சியிருக்கும். கதைகளாக, பாடல்களாக, நினைவுகளாக, குறிப்புகளாக, படிமங்களாக, சித்திரங்களாக ஆழ்மனதில் தங்கியிருந்து நமது இலக்கியத்தில் அந்த நினைவும் வடுவும் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கப் போகின்றன. அதற்குண்டான அத்தனை அழிவுகளையும் கொடுத்துவிட்டே ஆயுதப் போரின் கரங்கள் நம்மைக் கடந்திருக்கின்றன. இன்றும் அரசியல் – பண்பாட்டுத் தளங்களில் நுண்வடிவில் யுத்தம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
யுத்தத்தைப் பற்றிப் பேசுவதும், படைப்புகளில் சித்திரிப்பதும் கூட அந்தக் கொடுமையான யுத்தத்திலிருந்து வெளிவருவதற்கான எத்தனமே. அதன் கொடூரத்தைத் தலைமுறைகளுக்கும் நினைவூட்டிக்கொண்டிருப்பதற்கான ஏற்பாடும் கூட. ஆனால், யுத்தமும் இழப்பும் படுகொலைகளும் இடப்பெயர்வும் புலப்பெயர்வும் இனச்சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் எடுத்துரைக்கப்படுவது மட்டுமே ஈழ – புலம்பெயர் இலக்கியம் என்றாகாது. அது ஒரு முகம் மட்டுமே. அதன் முக்கியமான மறுமுகம் உரையாடப்படுவதோ, பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதோ இல்லை. அந்த விடுபடலை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதே இந்தத் தொகுப்பின் பேறாகிறது.
இதைக் குறுக்கிச் சொல்வதென்றால், இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைப் பன்மைப் பண்பாட்டு உரையாடல் எனலாம். இன்றைய ஈழ – புலம்பெயர் இலக்கியத்தில் பன்முகத்தன்மையோடு வெளிப்படும் நிலமும் பண்பாடும் பழங்குடித் தொன்மங்களும் வீறானவை. அதுவே ஈழ – புலம்பெயர் இலக்கியம் சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு. இதன் ஒரு குறுக்குவெட்டு முகமாக இந்தத் தொகுப்பை வாசிக்கலாம்.
இந்தக் கதைகளினூடே பல்லினப் பண்பாட்டு வெளிகளினூடான பயணத்தையும் உரையாடலையும் ஒருவர் நிகழ்த்த முடியும். இந்த உரையாடல் இன்னும் தன்னுள் சாதிய, மத, இன, பால் மேட்டிமைகளாலும் முரண்களாலும் இறுகிக்கிடக்கும் புராதனத் தமிழ் மனக் கண்ணாடியில் விரிசல்களை ஏற்படுத்தும். சிதறி விழும் ஒவ்வொரு கண்ணாடித் துண்டும் ஒரு கதைசொல்லியின் அடையாளத்தையும் சுதந்திரக் குரலையும் பிரதிபலிக்கும். இத்தகைய சுதந்திரக் குரல்களை முன்னிறுத்துவதே இலக்கியச் சந்திப்புத் தொடரின் வரலாறாகும்.
காலம் நம்பிக்கையற்றதாகவும் கொடுங்கனவாகவும் நம்முன்னே நகர்கிறது. உலகம் முழுதும் யுத்தங்களும் அகதிகளின் அலைவுகளும் பெருகி வருகின்றன. அடுத்த சந்ததிக்கு வரலாற்று முதுசொம்மாக விட்டுச் செல்ல நம்மிடம் எவைதான் உள்ளன? இப்போதைக்குக் கதைகள் மட்டுமே உள்ளன.
இமிழ்
மார்ச் 2024.