ஆதிரை : குழிமுயலெய்த அம்பு கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
// 36 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போராட்டத்தில், ஒரு பகுதி மட்டுமே ஆதிரையில் எழுதப்பட்டுள்ளது.
நாவலில் சொல்லப்படும் பல சம்பவங்கள் எனக்கு நெருக்கமானவை. அந்தக்காலத்தில் நான் அந்தப் பகுதியில் தான் வாழ்ந்தேன்.
ஈழப்போரின் முழுக் கதையையும் சொல்வதற்கு ஆதிரை ஒன்றும் வரலாற்று நூல் அல்ல. நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு.
எதைவைத்துப் போதாமை என்று அளவீடு செய்கிறீர்கள்? //
Spn karan
நான் முகநூலில் இல்லை. ஆகவே நண்பரின் கேள்விக்கான பதிலை என்னுடைய தளத்தில் எழுதுகிறேன்.
ஆதிரை நாவல் மீதான என்னுடைய விமர்சனத்தில் ஆதிரையை நான் நாவல் அல்லது புனைவு எனும் எல்லையுள்ளிருந்து மட்டுமே அணுகியிருக்கிறேன். என்னுடைய இந்த அடிப்படைப் பார்வையை கட்டுரையை முழுமையாகப் படித்தாலே புரிந்துகொள்ள முடியும். அப்படித்தான் சு.வேணுகோபாலும் ஆதிரையை அணுகியிருக்கிறார். அதாவது யதார்த்தவாத நாவல் எனும் வரையறையில் இருந்தே நாங்கள் இருவரும் எங்கள் விமர்சனங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம். ஒரு யதார்த்தவாத நாவலாக ஆதிரை கொண்டிருக்கும் போதாமைகளை இருவரும் எங்களுக்குரிய இலக்கியப் பார்வை, புரிதலின் அடிப்படையில் சுட்டியிருக்கிறோம். இருவருமே ஆதிரை வரலாற்று நாவல் என்றோ, அல்லது அது ஈழப்போராட்டத்தின் மொத்த வரலாற்றைச் சொல்லவில்லை ஆகவே போதாமையான நாவல் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் அது விமர்சனமும் அல்ல.
ஆதிரை நாவலின் மீது நான் முன்வைக்கும் போதாமைகள் இரண்டு புள்ளிகளில் மையங்கொண்டிருக்கிறது.
- ஆதிரை நாவலின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செவ்வியல் நாவல் முன்னொட்டு.
- ஆதிரையின் யதார்த்தவாத உள்ளடக்கம்.
இவை இரண்டுக்குமே கொஞ்சமும் தகுதியில்லாத நாவல் ஆதிரை என்பதே என்னுடைய விமர்சனம். அது நம் சூழலில் மிகையாக மதிப்பிடப்படுகிறது என்னுடைய என்னுடைய வாதம். அல்லது வேறு நாவல்கள் இல்லாததால் அதனை அப்படிச் சுட்டவேண்டிய இக்கட்டான நிலை எமக்கு வாய்த்திருக்கிறது. கூடவே ஈழ நாவல்கள் என வரும்போது தமிழக விமர்சன அளவுகோல்கள் நம்பமுடியாத அளவிற்குத் தளர்ந்து விடுகின்றன. எங்களைக் கருணையுடன் கைதூக்கிவிட வேண்டியவர்களாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். எமக்கு அப்படியான கழிவிரக்கப் பார்வைகள் வேண்டியதில்லை. ஆனால் சமீபமாக தமிழகத்வர்கள் தங்கள் சொந்தப் படைப்புக்களையும் அப்படியாகச் சளைக்காமல் பாராட்டிக் கொள்கிறார்கள். எழுதி அச்சடித்து வெளியிட்டால் போதும் அது நாவல்தான் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வந்துவிடுகிறார்கள். அல்லது தமிழ் திரைப்படக்காரர்கள் போல ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி வெட்கமே இல்லாமல் மிகையாகப் பாராட்டிக் கொள்கிறார்கள். சு.வேணுகோபால் விமர்சனக் கட்டுரையில் அந்தக் கழிவிரக்கப் பார்வை வெளிப்படவில்லை. அவர் மிக நேர்மையாகவே ஆதிரை நாவலின் பல போதாமைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது பாராட்டுகள்மட்டுமே நிறைந்த உன்னத சூழ்நிலையில் மிக முக்கியமான பார்வை. அதனால் அது எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது.
நான் ஆதிரையின் அடிப்படைக் குறைபாடுகளின் பட்டியலை என்னுடைய கட்டுரையில் ஓரளவுக்குப் பட்டியலிட்டிருக்கிறேன். வேறு வேறு கட்டுரைகளிலும் அவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். சு.வேணுகோபாலும் அத்தகைய குறைபாடுகள், அதனால் யதார்த்தவாத நாவலுள் (கவனிக்க : புனைவனுபவமாக) இருக்கவேண்டிய குறைந்தபட்ச மொழி, பண்பாட்டு உசாவல், மனித உணர்வுகள் என விரிவாகக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆதிரையின் யதார்த்தவாத உள்ளடக்கத்திற்கு இசைவதாக அதன் மொழியோ, அது உருவாக்கியளிக்கும் மானுட உணர்ச்சித் தருணங்களோ, ஏன் விரிவான வாழ்க்கைப் பார்வையோ, கதாபாத்திரங்களின் ஊடும்பாவுமான மனவோட்டங்களோ சரியாக எழுதப்பட்டிருக்கவில்லை. அது அடிப்படையில் செய்திவடிவிலானது. அறிந்த தெரிந்த கேட்ட செய்திகளின் தொகுப்பு மட்டுமே. அவையும் மொத்த ஈழப்போராட்ட வரலாற்றின் பல முக்கிய செய்திகளின் தொகுப்புகளாக மட்டும் பதிவுசெய்திருக்கிறது. ஆக அது செய்தித் தொகுப்பு என்பதற்கு அப்பாலான நல்ல புனைவாக அதன் இடம் என்ன என்பதே என்னுடைய கேள்வி. ஈழ இலக்கியத்தில் மட்டுமல்ல, மொத்த தமிழ் இலக்கியத்திலுமே.
இரண்டாவது அது ஈழச் செவ்வியல் படைப்பு எனச் சுட்டப்படும் அளவிற்கு விரிவான வாழ்க்கைப் பார்வைகளோ, ஈழப் பண்பாட்டுச் செறிவோ கொண்டிருக்கவில்லை. அது ஈழத்தின் இன்னொரன்ன யதார்த்தவாத நாவல்களைப் போலவே ஈழப்போராட்டத்தின் அழிவுச் சித்திரத்தை செய்திகளாகத் தொகுத்தளிக்கிறது. அதனால் அதை ஒரு விரிவான பண்பாட்டை தொட்டெடுக்கும், அதன் சத்தான கூறுகளை தன் உடலெல்லாம் விதைகளாகக் கொண்டிருக்கும் செவ்வியல் ஆழங்களும், பண்பாட்டு விரிவும் அதன் புனைவுவெளிக்குள் இல்லை.
ஒரு புனைவில் நமக்குத் தெரிந்த சம்பவங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு போதும் அது நல்ல நாவல் ஆகிவிடாது. அது புனைவாக மொழியில் எப்படி நிகழ்கிறது, புனைவில் வாழ்க்கை அனுபவத்தை எப்படி உருவாக்குகிறது, அதன் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் இரத்தமும் சதையுமாக இருக்கின்றனவா, கதாபாத்திரங்களின் அக, புற முரண்கள் எப்படி ஆசிரியரால் கையாளப்பட்டிருக்கின்றன, மொழி அந்த அனுபவத்தைத் தாங்குகிறதா, பண்பாடு ஆழம் இருக்கிறதா, நிகழ்வுகளை ஒற்றைப்படைத் தன்மையுடன் மட்டும் அணுகுகிறதா, அது தொகுத்தளிக்கும் மொத்த வரலாற்றுப் பார்வை என்ன? என்பதே கேள்வி. இவையே இலக்கிய மதிப்பீட்டின் அடிப்படைகளாக இருக்கமுடியும்.
அதனால் நமக்குத் தெரிந்த அல்லது அறிந்த செய்திகளின் சம்பவங்களின் தொகுப்பாக இருப்பதால் மட்டும் ஒரு படைப்பு நல்ல படைப்பு ஆகிவிடாது. அப்படி இருப்பது அதன் மிக அடிப்படையான ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே. அல்லது யதார்த்தவாத நாவலின் அடிப்படையான இயல்பு. அது தனித்தகுதியோ, இலக்கியச் சிகர சாதனையோ அல்ல. சரி அப்படி என்றால் உங்களால் கற்பனையில் கூட வாழமுடியாத ஒரு நிலத்தின் கதையை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள். அதன் வாழ்க்கைச் சூழலோ, நில அமைப்போ, பண்பாட்டு நுட்பங்களோ தெரியாதபோது உங்கள் சிறிய அனுபவப் பார்வையை மட்டும் கொண்டு எப்படி அத்தகைய படைப்புக்களை அணுக அல்லது புரிந்து கொள்ள முடியும்? சாத்தியமே அல்ல என்பதல்ல பதில். அது வழிமுறை அல்ல.
மங்கோலியாவின் மேய்ச்சல் நில வாழ்க்கையை மிகவிரிகாக நுண் தகவல்களால் எழுதிய ஓநாய்குலச் சின்னமோ, அல்லது பழுத்த யதார்த்தவாத நாவலான டான் நதி அமைதியா ஓடிக் கொண்டிருக்கிறதோ, அல்லது விசக்கன்னி நாவலோ, அல்லது டேவிட் கிரஸ்மனின் நிலத்தின் விளிம்புக்கு நாவலோ அவற்றின் உண்மைத்தன்மை என்பதற்கும் அப்பால், அறிந்த தெரிந்த வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதற்கும் அப்பால் எப்படி உங்களைப் பாதிக்கிறது. எப்படி அவை நிகழ் வாழ்வனுபவமாக உங்கள் நினைவுகளுள் சேகரமாகவிடுகின்றன. அத்தகைய படைப்புக்களை எப்படி அவற்றின் செய்திகளின் அல்லது சம்பவங்களின் உண்மைத்தன்மை அல்லது செய்திகளைச் சரியாகச் சொன்னதா என்பதை மட்டும் வைத்து அது நல்ல நாவலா இல்லையா என்று வகைப்படுத்த முடியும்? இதுவல்ல இலக்கிய விமர்சனத்தின் வழிமுறை. நிகழ்வாழ்வனுபவத்தை உருவாக்கி அளிக்கும் மொழியனுபவம், விரிவான புறச்சூழல் சித்திரம், மனித உணர்ச்சிகள், வாழ்க்கைப் பார்வை என அது ஒட்டு மொத்தமாக அவை திரட்டியளிக்கும் புனைவனுபவமாக மாறும் ரசவாதநிலையே அவற்றை மதிப்பிட அல்லது அளவிடக்கூடிய வழிமுறைகளுள் பிரதானமானது. ஆக அது உங்களுக்கு தெரிந்த உண்மைச் சம்பவங்களைச் சொல்கிறதா இல்லையா என்பது புனைவில் ஒருபோதும் முக்கியமானதல்ல.
“தெரிந்த சம்பவங்கள் அல்லது செய்திகள் இருப்பது மட்டும் நல்ல புனைவிற்குப் போதுமானதல்ல. அந்தச் சம்பவங்கள் புனைவனுபவமாக, மனித மனதின் ஆழங்களாக, கதை நிகழும் நிலத்தின் பண்பாட்டு நுண்மையாக, மொழி மற்றும் வடிவமாக எந்தளவிற்கு எழுத்தாளரால் மாற்றியளிக்க முடிந்திருக்கிறது எனபதே என் கேள்வி”
***
ஆதிரை : குழிமுயலெய்த அம்பு கட்டுரைக்கான இணைப்பு

