சிறிய இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஓர் அவநம்பிக்கை இருக்கிறது. அது இக் காலகட்டத்தில் பலருக்கும் எழும் சந்தேகம். சமூக வலைதளங்கள் என்ற பெரிய வெளி இருக்கும் போது இலக்கியக் கூட்டங்களை ஏன் மிகச் சிறியதாக சொற்ப நபர்களுடன் நிகழ்த்தவேண்டும்? அதனால் என்ன பயன்? ஒத்த ரசனை, ஒத்த அறிவுத்திறனான நண்பர்கள் மட்டுமே கூடி கலையுமிடமாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும்? அப்படியான சிறு கூட்டங்களால் அறிவுத்தளத்தில், பண்பாட்டு வெளியில் நீடித்த பயன்கள் ஏதும் உண்டா?
எங்கள் மூத்த எழுத்தாளர்களுக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்க நியாயமில்லை. அவர்கள் யாருக்கும் சமூகவலைத்தளம் எனும் பெரும் திரளை நெஞ்சுக்கு நேரே எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலை வாய்த்திருக்கவில்லை. அவர்கள் தங்களைச் சூழ, தாங்களே கட்டிய கதகதப்பான முட்டையோட்டுக் குகைக்குள் இருந்தபடி சிந்தித்தார்கள். எழுதினார்கள். தனியே தங்களுள் உரையாடிக் கொண்டார்கள். அவர்கள் மிக சொற்ப நபர்களுடன் தங்கள் கருத்த சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார்கள். மிக ஆழமான ஆனால் கூரிய கருத்துக்களும், விமர்சனங்களும் மட்டுமே அதில் இருந்தன. அரிதாக அவை அவர்களது வட்டங்களுக்கு வெளியே இருந்த மக்களின் எருமைத்தோல் மனநிலையில் மீச் சிறு கொந்தளிப்பை சலனத்தை நிகழ்த்தியிருந்தன. அவை மிக அரிதான வரலாற்று நிகழ்வுகள். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரம் நிகழக் கூடியவை.
ஆனால் நம் காலகட்டம் மிக நூதனமான பல இழுவிசைகளின் நடுவே சிக்கிக் கிடக்கிறது. நாம் எல்லோரும் தினமும் ஒரு பெரும் திரளின் முன் கொஞ்சம் அப்பட்டமாக நிர்வாணமாக நின்றிருக்கிறோம். கருத்துகள் உதிர்க்கிறோம். விவாதம் புரிகின்றோம். முக்கியமாக வெறுப்பையும், வசைகளையும் அள்ளி இறைக்கின்றோம். இப்படியான ஒரு மனநிலையும், காலகட்டமும் உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதது. வம்புகளை, வெட்டி அரட்டைகளை, கவைக்குதவாத எளிமையான கருத்துக்களை – அவற்றுக்கு எந்தத் தர்க்க அடிப்படைகளும் இருப்பதில்லை – தினமும் மந்திரம் போல உச்சாடனம் செய்தபடி இருக்கிறோம். அவற்றை அறிவு விவாதங்கள் என்றும், சமூகச் செயற்பாடுகள் எனவும் நம்புகிறோம்.
ஆனால் நாம் பெரும் கூட்டத்தின் முன் நின்றிருப்பதாகத் தோன்றினாலும், அதனுடன் தினம் உரையாடினாலும் கடந்த காலங்களிலும் பார்க்க தனிமையும், இருளும் சூழ்ந்திருக்க தனித்திருக்கிறோம். சீறி வரும் மலைவெள்ளம் போன்ற சமூக வலைத்தள கருத்துக்களின், சொற்களின், வசைகளின், வெறுப்புக்களின் பெருக்கின் முன் தனியன்களாக நின்றிருக்கிறோம். இந்த கட்டாற்று வெள்ளம் எத்தனை பிரமாண்டமானதோ, அது எத்தனை பெரியதோ அத்தனை ஆழம் இல்லாதது. எளிமையான கருத்துகளினால் நிரம்பியது. அபிப்பிராயங்கள் என்ற எல்லையை தாண்ட முடியாதது. ஆக தினமும் இடையறாது சிறு நுரைக்குமிழிகள் போல சொற்களும் கருத்துக்களும் ஒவ்வொருவருடைய மூளையுள்ளே பெருகியபடியே இருக்கின்றன. அந்தக் கருத்துக்களால் உருவாகும் சலனங்கள் அல்லது கொந்தளிப்புகளும் கூட சில நொடிகளிலேயே அப்படியே அனல் மேல் விழும் நீர் துளி போல பொசுங்கி ஆவியாகி அடங்கிவிடுகின்றன. அவற்றின் வேகமும், மறையும் தன்மையும் திகைப்பூட்டக் கூடியவை. அவற்றுக்கு நீடித்த பயன் அல்லது ஏது சிந்தனை உருமாற்றம் இருக்குமா? தெரியவில்லை. ஆனால் அப்படி இருக்க முடியாது? வாய் நுரைதள்ளத் தீவிரமாக சமூகவலைத்தளங்களில் உரையாடும் விவாதிக்கும் ‘புரட்சியாளர்கள்’ பலரை தொடர்ந்தும் அவதானித்துப் பார்த்தது உண்டு. அவர்களது கருத்துக்கள் அரட்டை என்ற தரத்திற்கு அப்பால் நகர்வது இல்லை. அது எத்தனை ஆண்டுகள் சென்றாலும் தங்கள் சிந்தனை தளத்தை விட்டு அவர்களால் ஒரு அடி கூட முன் நகர முடிவதில்லை. ஆனால் தினமும் தர்க்கபூர்வமான விவாதக் களத்தின் நடுவே பரபரப்பாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருப்பது ஒருவகை செக்குமாட்டுச் சுழற்சி. கூடவே சிந்தனை விரிவிற்கான பொறுமை சமூகவலைத்தள சிந்தனையாளர்களுக்கு இல்லை. அதற்கான பொறுப்புணர்வும் இல்லை. அதனால் அவர்களது கருத்துக்களில், சிந்தனையில் வளர்ச்சி ஏதும் இருப்பதில்லை. பெரும்பாலானவர்களின் கருத்துக்களில் தொடர்ச்சி கூட இருப்பதில்லை. அந்த நேரத்து காற்றுக்கு ஏற்ப நுட்பமாகப் பாய்விரித்துக் கொள்பவர்களே அதிகம். ஆனாலும் கேளிக்கை போல ஒரு கொண்டாட்டம் போல அந்தத் வசீகரமான ஆனால் தீய ஜோதியில் ஐக்கியமாகி மன உலைச்சலும், கொந்தளிப்பும், சிடுசிடுப்புமாக எங்களை உருமாற்றிக் கொள்கிறோம்.
சமூக வலைதளங்களால் உருவாக்கப்படுபவை பெரும்பாலும் அரசியல், சினிமா சார்ந்த விவாத(?) உரையாடல்கள். அவையே பெரும் திரளைப் பங்களிக்கச் செய்யக் கூடிய, தொடர்ந்தும் பெரும் திரளால் கூட்டமாகக் கருத்துதிர்க்கச் சாத்தியமான பொதுக் களங்கள். அவற்றில் உருவாகும் கருத்துகளுக்கான பார்வை வீச்சு எவ்வளவு பெரியதோ அத்தனை விரைவாக அவை மறக்கப்படவும்படும். அதுதான் அதன் இயல்பு. எழுத்துப் பதிவுகளாக எஞ்சுவதால் அத்தகைய அபிப்பிராயங்களுக்கு நீடித்த ஆயுள் அல்லது சாசுவதம் இருக்கும் என பிழையாக நம்புகிறோம். ஆனால் அவை நொடிக்கு நொடி கொட்டும் தகவல் நெரிசல்களுள்ளே மீட்கமுடியாமல் புதைந்து விடுகின்றன. புராதன நகரங்கள் மண்ணுள் அமிழ்ந்ததுபோல அமிழ்ந்து காணாமலாகி விடுகின்றன. நான் தீவிரமாகப் பங்கெடுத்த பல விவாத உரையாடல்கள் பின்னால் சில நாட்கள் கழித்து புத்தகங்களாக தொகுக்க வேண்டித் திரும்பப் படித்துப் பார்த்தபோது வெளுறியவையாக சிரிப்பூட்டக் கூடியவையாக இருந்திருக்கின்றன. அவற்றின் கருத்து வலு அல்லது தர்க்க ஒழுங்கு சிந்தனையாக திரளமுடியாத எளிமையான அபிப்பிராயம் என்ற எல்லையுள்ளே இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை சுத்தமாக நினைவில் இல்லாதது மாத்திரமல்ல அவற்றின் தாக்கம் என்னில் கொஞ்சமும் இல்லாதது கூட திகைப்பூட்டக் கூடியதாக இருந்திருக்கிறது. அவை ஒரு கண எழுச்சி மாத்திரம் தான். ஓர் எதிர்வினை மட்டுமே. அதற்கு அப்பாலான தாக்கம் என்பது பெரும்பாலும் அவற்றில் இருப்பதில்லை.
இந்தப் பிரமாண்ட வலைப்பின்னலின் முன்னால் சிறு இலக்கியக் கூட்டங்களின், உரையாடல்களின் தேவை என்ன? அந்தவகை கூட்டங்கள் உரையாடல்கள் எப்படி தொடர்ந்தும் வாழ்க்கை பார்வையை, சிந்தனையை பாதிக்கக் கூடியதாக அமைத்துக்கொள்ள முடியும்?
ஏன் கடந்த சில வருடங்களாகவே எனக்கு இலக்கியக் கூட்டங்கள் குறித்த அவநம்பிக்கையும், எதிர்மறையான எண்ணங்களுமே எஞ்சியிருக்கின்றன. காரணம் அவற்றின் மேம்போக்கான தன்மை. அவற்றில் பெரும்பாலானவை சமூக வலைத்தள உரையாடல்களின் நீட்சி போல இருக்கின்றன. தீவிர உரையாடல்களும், சிந்தனைப் பரிமாற்றங்களும் இருப்பதில்லை. தனித்த பார்வைகள், கோணங்கள், இலக்கிய நுட்பச் சுட்டிக் காட்டல்கள் வெளிப்படுவதில்லை. ஒருவகை சமூக வலைத்தளங்களின் மீச் சிறு எதிரொலி போலான உரைகளும், கருத்துக்களுமே பகிரப்படுகின்றன. ஆகவே அவை சோர்வூட்டுகின்றன. அதுவும் இல்லாமல் இலக்கியம், சிந்தனை, கருத்துகள் குறித்த அறிமுகமோ தேடலோ ஏன் ஆர்வமோ இல்லாத பெரும் கும்பல் என்ற இத்தகைய உரையாடல்களின் மேல் பெரும் படையாக சூழ்ந்து விடுகிறது. உண்மையில் அவர்களுக்கு இத்தகைய சமூக, இலக்கியச் செயற்பாடுகளில் அக்கறையோ, ஆர்வமோ, ஏன் நம்பிக்கைகளோ கூட இருப்பதில்லை. கைநிறைய வெறுப்பும், மூளை நிறைய அறியாமையுடனும் அவர்கள் பெரும் திரளாக இந்தப் பண்பாட்டுச் சூழலைச் சிறுகச் சிறுக அரித்து அழிக்கிறார்கள். அர்த்தமில்லாத கருத்துரைக்கிறார்கள். நிகழ்வுகளைக் கேலி செய்கிறார்கள். அதனால் சிறு கூட்டங்கள், வட்டங்கள் மெல்ல அழிந்து பிரமாண்ட வலைப்பின்னல் வெளியில் அவை இருந்த தடம் தெரியாமல் கரைந்து விடுகின்றன.
சிறு இலக்கியக் குழுக்களின், நேரடியான உரையாடல்களின் தீவிரத்தையும் சிந்தனை விரிவையும் அனுபவபூர்வமாக அறிந்த தலைமுறையில் கடைசித் தலைமுறை எங்களுடையது என்ற எண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு சிறு இலக்கியக் கூட்டங்களின் பின்னும் ஒவ்வொரு வகையிலும் தீவிரமும் பெரியதுமாக என்னை தொகுத்துக் கொள்ள, கருத்துக்களை கூர் தீட்டிப் பரிசீலித்துக் கொள்ளக் கூடியதான சிந்தனைப் பொறிகள் கிடைத்திருக்கின்றன. அவை என்னுடைய மொத்த இலக்கிய மதிப்பீட்டை, பார்வையை சீர் செய்ய உந்தித் தள்ளியிருக்கின்றன. சமூகவலைதளங்கள் உருவாக்கும் அந்த சோர்வூட்டும் மனநிலைக்கு அப்பாலான ஒரு தீவிரம் அத்தகைய பழைய உரையாடல்களில் இருந்ததை இப்போதும் ஆசுவாசமாக எண்ணிப்பார்க்க முடிகிறது.
ஒரு முறை நான் எப்போதும் போல மிக உன்னத மனநிலையில் புதுமைப்பித்தன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். எதிரே கவிஞர் சுகன். அவருடைய பழைய வீட்டு விறாந்தையில் இருவரும் இருக்கிறோம். எங்களைச் சுற்றிலும் கவிஞரின் சேகரிப்பில் இருக்கும் பழைய பொருட்கள் நிறைந்திருக்கின்றன. புத்தகங்கள், மரப்பெட்டிகள். வண்ணப் பைகள். சுவரில் மங்கிய பழுப்பு ஓவியம் ஒன்று தொங்குகிறது. கிளவுட் மொனேயின் ஏதோ ஒரு மலிவுவிலைப் பிரதி. சட்டென்று பார்த்தால் நுட்பமாக பிரதியெடுக்கப்பட்டிருப்பது தெரியாது. கவிஞர் சுகன் விறாந்தையில் இருந்த சுடுநீர் கேத்தலில் இருந்து நீரை எடுத்து தேநீர் போட ஆயத்தமாகிறார். கேத்தலில் தண்ணீர் கொதித்து குமிழியிடும் ஓசை ஓங்குகிறது. நீராவி உருவாக்கும் நீர் குமிழிகள் விறாந்தையின் மேற்சுவரில் படருகின்றன. நான் நூறு ஆண்டுகள் முன்னர் பிறந்த புதுமைப்பித்தனின் மொழியை, அவர் செப்படி வித்தைக்காரனின் சாட்டை போல லாவகமாகச் சுழற்றும் அந்த விமர்சனச் சொடுக்குகளை சிலாகித்துக் கொண்டிருந்ததாக நினைவு. என்னுடைய அபரிமிதமான உணர்வு பீறிடலை மெளனமாக உதடுகளை மடித்த சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த சுகன், எப்போதும் போல சற்றே நாடக பாணியில் திரும்பி “புதுமைப்பித்தன் வெறும் தர்க்கங்களை எழுதியவர். அவரூடாக வாழ்வின் அர்த்த வேறுபாடுகளின் ஆழங்களைச் சென்று அடையவே முடியாது” என்றார். சட்டென்று என் மொத்த உரையாடல் தொடர்புமே அறுந்து விட்டது. நான் சிலாகித்து உருவாக்கிய புதுமைப்பித்தனின் மொழிக் கோட்டை பொல பொலத்து என் காலடியிலேயே உதிர்ந்து விட்டது. அது ஒரு விதத்தில் புதுமைப்பித்தன் பற்றிய கூர்மையான மதிப்பீடு பார்வை. கு.அழகிரிசாமியின் வாழ்க்கைக்கு நெருக்கம் கொண்ட எழுத்துக்களை நெருங்கிச் செல்ல முடிபவர்களுக்கு புதுமைப்பித்தனின் எழுத்துகள் தர்க்கங்களின் தொகுப்பு மாத்திரமே. அவர்கள் புதுமைப்பித்தனின் விமர்சன வீச்சும், தர்க்கங்களும் தாங்கள் நம்பும் வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளே அதிகம். அப்படி பலரும் அதை தொட்டுச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது மட்டுமல்ல புதுமைப்பித்தன். பின் நாட்களின் புதுமைப்பித்தனின் தர்க்கங்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கு மொழியோட்டம், வாழ்க்கைப்பார்வை, அக தரிசனங்கள் குறித்த ஆழமான பார்வைக்கு வித்திட்டது கவிஞர் சுகனுடைய அந்த மதிப்பீடு. ஒரு சிறு சிந்தனைப் பொறி தீயாகிவிட்டிருந்தது. அப்படியான உணர்வெழுச்சிகளையோ, உடைத்துக் கட்டக் கூடியதான பார்வை வீச்சுக்களையோ என்னால் சமூக வலைத்தள விவாதங்களில் ஒருபோதும் அடைய முடியவில்லை. அவை பெரும்பாலும் அந்த நேர டிரெண்ட் சார்ந்தவையாக இருப்பதால் அதில் உடனடிக் கவன ஈர்ப்பு என்பதற்கு அப்பாலான ஆழமே விரிவோ இருக்க முடிவதில்லை.
அதனால் எப்போதும் நேர் உரையாடல்கள் நிகழக்கூடிய இலக்கிய அரங்குகளே உவப்பானவை. அங்கேதான் முழு ஈடுபாட்டுடன் நாள் முழுவதும் அமர்ந்திருக்க முடியும். அப்படியான உரையாடல் வெளிகள் முன் எப்போதையும்விட இப்போது மிக அவசியமானவை. பெரிய வலைப்பின்னல் உருவாக்கும் எதிர்மனநிலையையும், சோர்வையும் விரட்டி ஆக்கபூர்வமான உரையாடல்களும், நேர் பரிச்சயங்களும் நம்மை மீட்டுக் கொள்ள இருக்கும் வழி. இலக்கியத்திற்கு அது எப்போதும் அவசியமான செயன்முறையும் கூட. முன் எப்போதையும்விட அந்த இலக்கிய வெளியின் அவசியத்தை இப்போது இலக்கிய வாசகர்களால் நன்கு உணர முடிகிறது. அதனூடாக உருவாகிவரும் இலக்கியச் சுற்றம் ஒவ்வொருவருடைய வாசிப்பிலும் எழுத்திலும் தாக்கம் செலுத்துவதை அனுமதிப்பதே இலக்கியச் செழுமையைத் தக்கவைப்பதற்கான ஆரோக்கியமான வழி. அந்தச் செழுமை எழுத்தில், வாசிப்பில் இன்னும் நுட்பமும் ஆழமும் உடையவர்களாக்கும்.
அப்படியான ஒரு இலக்கிய உரையாடல் வெளிக்கான தேவை பாரிஸில் எல்லோராலும் எப்போதும் உணரப்படும் ஒன்றுதான். அத்தகையதொரு முயற்சியாக வெள்ளிவீதி என்ற பெயரில் ஓர் இலக்கியக் கூடுகைக்கான வெளியை ஏற்பாடு செய்திருக்கிறோம். சமகாலப் புனைவுகள் உரையாடுவதற்கான வெளி. ஒரு வகையில் சொன்னால், ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமான வெளி. எழுத்தாளர்களுடனான விரிவான உரையாடல் வெளி. சங்கக் கவிஞர் வெள்ளிவீதியார் பெயரில் இலக்கியக் கூடுகை. சங்கத்திலிருந்து இடையறாது ஒழுகும் தமிழின் தொடர்ச்சியில், சமகாலப் புனைவுகளுக்கான உரையாடல்களைச் செறிவாக நிகழ்த்த இருக்கிறோம். நேர் உரையாடல் பாணியிலான இலக்கியக் கூடுகையாக ‘வெள்ளிவீதி’ நிகழவிருக்கிறது. உண்மையான ஆர்வமும், அக்கறையும் உள்ள நண்பர்களை அழைக்கிறோம்.
நாள் : 12.07.2026
இடம் : பாரிஸ், பிரான்ஸ்


