Prix Émile Guimet de littérature asiatique என்பது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் முக்கியமான பிரெஞ்சு இலக்கிய விருதுகளில் ஒன்று. ஆசிய–பிரெஞ்சு கலாச்சார ஊடாட்டத்தை விரிவுபடுத்துவதும், சமகால ஆசிய இலக்கியங்களை பிரெஞ்சு வாசக உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் அதன் நோக்கம். அதன் 2026 ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவு விருது ஷோபாசக்தியின் Salamalecs — தமிழில் : சலாம் அலைக் — நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்குக் கிடைத்திருக்கிறது.
இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இலங்கையர் ஷோபாசக்தி. முதலாவது இலங்கையர் ஷெஹான் கருணாதிலக. அவருடைய புக்கர் விருது பெற்ற The Seven Moons of Maali Almeida நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான Les Sept Lunes de Maali Almeida நூலுக்காக 2025 ஆம் ஆண்டு இதே விருதைப் பெற்றிருந்தார். இந்த நாவல் தமிழில் மாலி அல்மேதாவின் ஏழு நிலவுகள் என்ற பெயரில் கிடைக்கிறது. ஸ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்த்திருக்கிறார். வாசிக்கச் சரளமான நல்ல மொழிபெயர்ப்பு.
மாலி அல்மேதாவின் ஏழு நிலவுகள் நாவலைத் தமிழ் மொழிபெயர்பில் படித்திருக்கிறேன். விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஷோபாசக்தியின் இரு (இச்சா, ஸலாம் அலைக்) நாவல்களையும் படித்திருக்கிறேன். ஷெஹான் கருணாதிலகவின் நாவல் இலங்கை இனமுரண்பட்டை வெளியிலிருந்து இரும்பு விரலால் தொட்டுப் பார்க்கும் நாவல் முயற்சி. ஓர் உணர்ச்சியற்ற இரும்பு விரலின் தொடுகை. அப்படித்தான் என்னால் அந்த நாவலை வாசிக்க முடிகிறது. அதற்கு, நாவலின் மொழியோ அல்லது நாவல் உருவாக்கி அளிக்கும் புனைவு யதார்த்தமோ காரணமல்ல. காரணம், நாவலில் ஷொஹான் கருணதிலக உரையாட விழையும் இலங்கை இனமுரண்பாட்டு வன்முறை. அது நாவலில் மிக எளிமைப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வெகுளித்தனமான எளிமையே நாவல் மீதான விலக்கத்திற்கு முதன்மைக் காரணம்.
மாலி அல்மேதாவின் ஏழு நிலவுகள் நாவல் கொழும்பு மேற்தட்டு வர்க்கப் பார்வையின் புனைவு வெளிப்பாடு. அல்லது அவர்களது லிபரல் பார்வையின் நாவல் வடிவம். அவற்றை ஷெஹான் கருணாதிலக நல்ல மொழியில், தரமான செம்மையாக்கத்தில், நாவலாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நாவல் சொல்முறை உத்திகூட மிகப் பழையது. தேய்வழக்கானது. இறந்த அல்லது படுகொலை செய்யப்பட்ட பின் மீள முடியாமல் கற்பனையான ஓர் இடையுலகில் சிக்கியிருக்கும் ‘ஆவி’களின் உலகம். அதில் விமர்சனங்கள் இல்லை. ஆனால் அந்த நாவலில் வெளிப்படும் இன வன்முறைகள் குறித்த பார்வை மிகப் பாமரத்தனமானது. ஷொஹான் கருணதிலகவிற்கு சகல வன்முறைகளும் பிழையானவை, சிக்கலுக்குரியவை, குற்றமானவை. அதனால் அந்த வன்முறைகளின் பின்னால் இருக்கக் கூடிய அரசியல், வரலாற்று நியாயங்கள் அவர் கண்ணில்படுவதில்லை. அதுமட்டுமல்ல அந்த வன்முறை ஊற்றின் வேர்களைக் கூட அவர் பொருட்படுத்துவதில்லை. எல்லாம் ஒரே வன்முறைகள் என்ற அளவிலேயே தீர்ப்பிட்டுவிடுகிறார். சமப்படுத்திவிடுகிறார். இது மிக எளிமையான லிபரல் நிலைப்பாடு.
அவருக்கு அரச வன்முறை, ஜே.வி.பி வன்முறை, இந்திய இராணுவ வன்முறை, புலிகளின் வன்முறைகள் எல்லாம் ஒரே தராசிலிட்டு நிறுத்துத் குற்றவாளித் தீர்ப்பிடக் கூடிய ஒற்றைப்படையான ‘வன்முறைகள்’ மட்டுமே. அந்த வன்முறைகளின் பின்னால் இருக்கக் கூடிய அரசியல் நோக்கங்கள், சமூகக்காரணங்கள், வரலாற்று நியாயங்கள் (அப்படி இருந்தால்..) கேள்விகள், பாதைகள் குறித்த தெளிவு இல்லை. இவை எல்லாவற்றையும் ‘வன்முறை’ என்ற ஒற்றை அளவுகோலுடனே அவரால் அணுக முடிகிறது. அதனால் நாவல் முழுவதுமே ஒற்றைப்படையான ‘வன்முறை’ அச்சம் என்ற அச்சிலே சுழல்கிறது. அதன் மையமே ஒற்றைப்படையாகத் தட்டையாக இருப்பதால் அவருடைய நாவலால் விரிந்தெழ முடியவில்லை. அதன் கவனம் கொஞ்சமும் வன்முறையின் ஆதி ஊற்றின் சமூக, வரலாற்று, பொருளியல் காரணிகளின் பக்கமும் திரும்புவதில்லை. ஆகவே அதன் ஊடும்பாவுமாக வெளிப்படக் கூடிய பார்வை நாவலில் அடிபட்டுவிடுகிறது. நாவலின் கதாநாயகனான மாலி அல்மேதாவின் பாத்திரம் கூட அப்படி ஒற்றைப்படையானதே. அவனுடைய இரட்டை அல்லது மூவின இன அடையாளச் சிக்கல் கூட அதன் சரியான முரணில் நாவலில் கையாளப்படவில்லை. அவனுக்கு இருக்கும் இன்னொரன்ன முரண்கள், பிரச்சனைகளுள் அதுவும் ஒன்று. அவ்வளவே நாவலில் ‘இன’ அடையாளத்திற்கான இடம். அதனால் மிக எளிமையானதோர் கணிதச் சமன்பாட்டின் விடைபோலான ஓர் இலங்கை இனமுரண்பாட்டு யதார்த்தத்தையே அந்த நாவலால் உருவாக்க முடிகிறது. ஆனால் இலங்கைப் பிரச்சனையின் அக- உள் காரணிகளின் அரசியல் / இன முரண்பாடுகளில் ஆர்வமில்லாத அல்லது அவற்றை வெறும் செய்திகளாக அறிந்து கொள்ள விரும்பக் கூடிய மேற்கத்தய வாசகர்களுக்கு உகந்த நாவல்.

அதே நேரத்தில், ஷெஹான் கருணாதிலக நோக்கம் வரலாற்று ஆய்வு எழுதுவது அல்ல; நினைவு, மறதி, காணாமற்போக்குதல், தப்பித்துபோதல், தண்டனையின்மை போன்றவற்றை இலங்கை இனமுரண்பாட்டு சிக்கலினுள் எழுதுகிறார். அப்படி நாவலை வாசிக்க முடியாதா? நாவல் சகல வன்முறைகளையும் ஒற்றை அளவுகோலின் முன்னே நிறுத்திவிடுகிறது. தீர்ப்பு அளிக்கிறது. அதுவே நாவலின் அடித்தளம். அப்படித் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் எப்படி நினைவு, மறதி, காணாமல்போதல், தப்பித்தல், வன்முறைகளுக்கான தண்டனையின்மை போன்றவற்றை உரையாட முடியும்? இவற்றையெல்லாம் எந்த அடித்தளதில் நின்று அவரால் புனைவாக்க முடியும்? அதிகாரத்தின் இரும்புக்கைகள், இனமுரண்பாடுகளால் நசிபடும் இலங்கையரின் ‘நினைவை, உடலை, கனவுகளை’ சிதறடிக்கும் இடத்தில் ‘நடுநிலையின்’ தராசுமுள் உடைந்துவிடுகிறது. இது நாவலின் பறத்தலைக் குறுக்கிவிடுகிறது.
ஆனால் ஷெஹான் கருணாதிலகவின் நாவலின் விரிசலில் ஷோபாசக்தியின் புனைவுகள் அச்சொட்டாகப் பொருந்தி விடுகின்றன. தேய்வழக்கு என்றாலும் ஷோபாசக்தி படைப்புக்களுக்கான சரியான ஒற்றை வரையறை ‘அதிகாரத்துக்கு எதிரான ஒரு சாமானியனின் உடல்’ அவரது எல்லாப் படைப்புகளிலும் இந்த முரண் சரியாக வெளிப்படுவதை வாசிக்க முடியும். அது எந்தவகையான அதிகாரமாக இருக்கட்டும். அரச அதிகாரம், அல்லது புலிகளின் அதிகாரம், அல்லது தேசிய அரசுகளின் அதிகாரம் என அது எல்லா வகை அதிகாரத்துக்கும் எதிரான ஒரு கேள்விக் குறியாக நலிந்த எலும்பும் தோலுமான மனித உடலை எழுதுகிறார். அவரது படைப்புகள் அனைத்திலுமே இந்த இழை ஊடுருவிச் செல்வதைக் காண முடியும். ஒருவகையில் இந்த இழையே அவரது படைப்புகள் அனைத்தினதும் ஆதார இழையெனலாம். போர் அவருக்கு வெறும் அரசியல் கருத்தியல் நிகழ்வும் மட்டுமல்ல. அவருக்கு அல்ல, அவரது புனைவின் கதாபாத்திரங்களுக்கு. யுத்தம், விடுதலைப் போராட்டம், இனவழிப்பு, அவமானம் (அவரது படைப்புகளில் அதிகமாக வெளிப்படும் உணர்ச்சி), பசி, அச்சம், நினைவுகள், உடல் அழிப்பு, இழப்பு, தண்டனை, குற்றம், ஏதிலியாதல் என பல வர்ணபேதங்களில் அவரது கதாபாத்திரங்களின் உடலில் போர் வெளிப்படுகிறது. அவர் எல்லா வன்முறைகளையும் ஒருபோதும் தன் படைப்புகளில் ஒன்றாகச் சமன் செய்வதில்லை. அவற்றின் வரலாற்று நியாயங்களூடே, சமூக – பொருளியல் காரணிகளின் பின்புலங்களில் வைத்தே அவற்றையெல்லாம் எழுதியெடுக்கிறார். ஷோபாசக்தி புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் அரச வன்முறையின் வரலாற்றுப் பொறுப்பை ஒருபோதும் அவர் பகிடி செய்யத் தயங்குவதில்லை . அது இலங்கை அரசு அதிகாரத்தை மட்டுமல்ல. புலம்பெயரிகளை நசிக்கும் ஐயோப்பிய அரசுகளையும்தான். அல்லது இரு தரப்புகளுமே சரி, அல்லது பிழை என்ற துருவ நிலைப்பாடுகளுள்ளும் நுழைவதில்லை. அவர் உலாவவிடும் மெலிந்த உடல்கள் அதிகாரத்தின் முன் நின்றிருக்கின்றன. முதுகுக் கூணலுடன்; அவை எந்த வடிவிலான அதிகாரமாக இருந்த போதும். வன்முறையைச் சமப்படுத்தாது, வன்முறையின் சமூக, வரலாற்று, பொருளியல் காரணிகளை கவனப்படுத்துவதே ஷோபாசக்தியின் படைப்புக்களின் தனித்துவம். ஷோபாசக்தி, ஷொஹான் கருணதிலக இருவரும் இலங்கையின் இனமுரண்பாட்டு சிக்கலையே தங்கள் படைப்புகளில் ஆதார இழையாகக்கொண்டு புனைவுகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இரு வேறு திசையில். ஒருவருக்கு எல்லா வன்முறைகளும் ஒருபடித்தானவை. மற்றவர் அதன் வரலாறுப் பின்புலக் காரணிகளையும் கவனத்தில் கொள்கிறார். இந்த ஒப்பீடு இருவரையும் நெருங்கி வாசிக்க சில திறப்புகளை அளிக்கும். கூடவே சுவாரசியமான ஒப்பீடும் கூட.
விருது பெற்ற சலாம் அலைக் நாவலின் கதாநாயகன் ஜெபானந்தனும் அப்படியான நலிந்த எலும்பும் தோலுமான மனித உயிரிதான். அவர் தன் பூர்வீகமான தேனக்கைக் குறிச்சியிலிருந்து புலம்பெயர்கிறார். தொடர்ந்தும் அந்த நலிந்த உடல் அதிகாரத்தால் வேட்டையாடப்படுகிறது. தேசிய அரசுகளின் குரூரமான எல்லைக் கோடுகளின், சட்டங்களின் இராட்சத பற்சக்கரங்களிடையே நெரிபடுகின்றது. ஆனால் ஜெபனந்தனின் இருண்ட மனதின் ஆழத்தில் ஒரு சுடர் சுடர்ந்து கொண்டிருக்கிறது. வெம்மையாக, தீராத வேட்கையுடன். ஜெபானந்தனின் தன்னழிவின் மூல விதை அவருக்கு கிடைக்காத மஞ்சள் கடதாசியால் மட்டும் உருவானதல்ல. அது கிடைத்திருந்தாலும் அவரது அழிவு நடந்தே இருக்கும். அது அவரது விதியோ, ஊழோ கூட இல்லை. புலம்பெயரியின் அழிவுக்கு அப்படியான தற்செயல்களைக் காரணங்களாகச் சுட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஜெபானந்தனின் அழிவு, அவரால் ஒருபோதும் திரும்ப முடியாத தன்னுடைய மனதின் ஆழத்தில் சுடரும் ‘தேனக்கை’ குறிச்சிக்கு மீள்வது குறித்த ஏக்கதில் வேரும், விதையும் கொண்டிருக்கிறது. விசவித்து. மீண்டும் செல்லவே முடிய இருட் பள்ளம் குறித்த ஏக்கம், அவருள் விரிசலிட்டு வளர்ந்து பெரும் வெற்றிடமாகி அவரை அப்படியே விழுங்கிவிடுகிறது. தன்னுடைய மொத்த வாழ்வையுமே குருதிப் பலியிடுகிறார். கடந்தகாலத்தின் நினைவுப் பாரம் அவரை எப்போதும் வீழ்ந்து நொறுங்குபவராக, குடித்து அழிபவராகவே வைத்திருக்கிறது நாவலில். மீட்சி இல்லை. அவர் தொடர்ந்தும் புலம்பெயரியின் தன்னழிவுப் பாதையிலே விரைந்து சென்று கொண்டேயிருப்பார். மலைச்சரிவிலிருந்து உருளும் பெரும் பாறைபோல. நிறுத்தும் விசைகளற்று. எஞ்சிய வாழ்க்கையில் வெறும் சக்கையாக மீந்திருப்பார். தன்னை, தன்னால் ஒருபோதும் ஒட்டமுடியாத புலம்பெயர் அன்றாடத்துடன் இழுத்துப்பிணைத்திருக்கும் அத்தனை தளைகளையும் ஆவேசத்துடன் வெட்டி வீழ்த்தி ‘முன்’னகர்வார். ஒரு அரசியல் புலம்பெயரியால் எதை நோக்கி முன் நகர முடியும்? தன்னை வசீகரித்து, பொய் மயக்கம் காட்டி இழுக்கும் இருட்பள்ளம் நோக்கி. தன்னழிவு நோக்கி. முடிவில், ஒரு புலம்பெயரியின் மகத்தான தோல்வியின் விளிம்பில் நின்று, அபத்தமாக, அருவருப்பாக நடுகளின் எல்லைக்கோடுகளை வரைந்த அதிகாரத்தின் முகத்திரை நோக்கி ஒரு கடவாய் இளிப்புடன் மீள முடியாப் பள்ளத்தில் வீழ்ந்து மறைவார். அவராகவேதான் தனக்கான வீழ்ச்சியைத் தேடிக் கொள்கிறார். அகதி வாழ்வின் வெம்மையில் தான் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத தேனக்கை குறிச்சி மீதான நினைவேக்கத்தின் கனலை பொத்தி வைக்க முடியவில்லை. அதனைக் கொண்டே தன்னை எரித்துக் கொள்கிறார். மீள முடியாத குடியின் மூலம். குடும்பத்தை எட்டி உதைத்து வீழ்த்தி தானும் ஒன்றுமே இல்லாமல் அழிந்து போகிறார்.
அந்த வகையில் Prix Émile Guimet de littérature asiatique விருது கிடைத்திருப்பது முக்கியமானது. ஒரு புலம்பெயரியின் உடல் வாசிப்புக் கவனதிற்குள்ளாகிறது. கூடவே ஷோபாசக்தியின் குரல் போர் நினைவுகளின் அடியாழத்தில் இருந்து எழும் குரல். அது இனமுரண்பாட்டின் இருளில் ஒளியுமிழக் கூடியது. அது ஓர் இனஅழிப்பிலிருந்து அகதியாகத் தப்பித்த உடல். போர் நினைவுகளுடன், இன வன்முறையின் எச்சங்களுடன், விடுதலைப் போரின் கடந்த காலச் சுமைகளுடன், போர் அச்சங்களுடன் வாழும் உடல். அதற்கு வன்முறையின் வரலாற்றுக் காரணங்களும் நன்கு தெரிந்திருக்கிறது என்பதே இங்கு முக்கியமானது.
ஷோபாசக்திக்கு வாழ்த்துகள்.


