
எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது ஓர் சமகால பிரதியாய் எனக்குள் விரிகிறது.
“சமகாலம்” என்ற பதத்தினூடே நெளிகின்ற பாம்பாய் இருக்கும் காலம் எனக்கு புறத்தே இருப்பது அல்ல;அது என் அகத்தினுள்ளே படம் எடுக்கும் பெரும் நாகம். இந்த சமகால பிரதி என்பது மூன்று பரிணாமங்களை கொண்டது.
1.மொழி
2.பாத்திரங்கள்
3.கதை /சம்பவங்கள்
மொழி
தர்மு பிரசாத்தின் “ஆனைக்கோடாரி” தொகுப்பின் வாசிப்பின்போதே அவரின் மொழிவாலயத்தின் பண்புகளை நான் அறிந்து கொண்டேன். அதனை வசீகரம் மிக்கது என்றோ அல்லது தட்டையானது என்றோ கருதி கடந்து விட முடியாது. அது ஒரு படைப்பாளியாக அவருக்குள் முகிழ்ந்து சில இடங்களில் அவரின் வீச்சையும் தாண்டியும் விடுகிறது.
இந்த கதை நிகழும் நிலம், அவரின் மொழியினாலேயே கட்டமைக்கப்படும் ஒன்று. முப்பது வருட போர் முற்றிலுமாய் தாயகத்தில் நிகழ்ந்த முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய மூன்று நிலங்களும் இந்த குறுநாவலில் நிகழ்த்தப்படுகின்றன.
கதையின் பெரும்பாகம் நிகழும் “சித்திரை” முகாம் என்ற பயிற்சி முகாமை நான் என் அகத்தில் கட்டமைத்து பார்க்கையில், சித்திரை என்ற பதத்தினை நான் பால்யத்தில் இருந்து இப்போது வரைக்கும் எவ்விதமாக கடந்து இருந்தேன் என்பதும் நினைவில் முகிழ்ந்தது. சித்திரையின் முதல் நாளில் நிகழும் புத்தாண்டு, பின் தொடரும் விளையாட்டு நிகழ்வுகள், சித்திரை கஞ்சி போன்ற நிகழ்வுகளையும் மேவி நிற்பது அதன் வெம்மையே. இந்த வெம்மையே அந்த முகாமில் “உள் வெக்கையாயும்” “புற வியர்வையாயும்” எஞ்சியும் மிஞ்சியும்.
இந்த “சித்திரையில்” இருந்து வெளியேற விரும்பும் ஒருவனாய் கதைசொல்லியாக வரும் தன்னிலையும் கூட.
அப்பால், கதை சொல்லியின் பால்யம் நிகழும் “நெய்தல்”, ஓர் சமூகத்தின் இருப்பும் இயல்பும் நிலைகொண்ட பண்பாட்டின் வேர்களை தன்னுள்ளே மண்ணோடு பிணித்திருக்கும் ஒன்று. அங்கே தன்னியல்பாய் நிகழும் உரையாடல்களும் கலையாடலும், பண்பாடு சார்ந்த பிடிமானங்கள். வாசிப்பினூடே வாசகன் அறிய வேண்டிய இவற்றை விலாவாரியாக நான் விபரிக்க விரும்பவில்லை.
நெய்தலில் இருந்து மருததிற்கு நிலைமாறும் இருப்பு, அங்கேயும் தன் வேர்களை படர விடுகிறது. நெய்தல் நிலத்தில் நிகழும் உரையாடல் ஒன்றிலேயே “சிறகை” என்ற இந்த குறுநாவலின் தலைப்பு உசாவப்படுகிறது.
நிலத்துக்கு உரியதல்லாத பறவை ஒன்று, நிலத்தின் விதைகளையும் பயிர்களையும் அடியோடு பிடுங்கி “அழிச்சாட்டியம்” செய்வதாக கூறி, அதனை தன்னிலையாகிய கதைசொல்லி எதிர்காலத்தில் செய்யவிருக்கும் காரியத்துடன் பிணைப்பது சிலாகிக்கத்தக்க ஒன்று.
மொத்தத்தில் கனவும் சித்து நிலையும் கொண்ட மொழியில் இந்த நிலங்களை உருவம் செய்திருப்பது இந்த பிரதிக்கான தனித்துவம்.
பாத்திரங்கள்
இந்த கதையின் பெரும்பாகத்தை ஆக்கியிருப்பது கதைச்சொல்லியாகிய தன்னிலையே. இந்த தன்னிலையின் உருவாக்கமும் நடப்பும் மொழியின் வழியே நகர்த்தப்படுகின்றன. தன்னிலையின் அகமும் அதன் உழல்தலுமே கதை. ஆச்சரியம் என்னவென்றால், பூடகமான காரியம் ஒன்றுக்கு தயாராகும் அதன் அகம், நாம் காப்பியங்களில் காணாத வேறொன்றாக சித்தரிக் ப்படுவதுதான்.
நான் வீர யுக கதைகளை வாசிக்கும்போது நினைப்பேன் “இவர்களுக்கு சாதாரண மனிதர்கள் போல் எண்ணங்கள் முகிழாதா” என. ஆனால் தொடர்ச்சியாக அந்த மாதிரி கதைகளை வாசித்தபோது, “இல்லை அப்படி எதுவும் இல்லை” என கூறி என்னுள் எழுந்த அகவுதலை அடக்கி என் குரலையும் உறுமுதலாயே ஆக்கியிருந்தன. இந்த மாதிரி வாசிப்புக்களில் முதன்முதல் கட்டுடைப்பு செய்தது தமிழினியின் “கூர் வாளின் நிழல்” என்ற நூலே. அந்த நூலின் rhythm (ஓட் டம் )என்னுள் முழுதாய் செரிமானமாகவே நிறைய நாட்கள் சென்றன.
இந்த நூலில் வரும் தன்னிலைக்கும், சித்திரை முகாமிலிருந்து தப்பித்து காட்டில் வாழும் சிவப்பு என்ற உருவத்திற்கும் இடையில் நிகழும் உரையாடல் புனைவின் உச்சமும் நுட்பமும்.
இவற்றை விட அம்மாவின் பாத்திரம் மிக கனதியாக உருவாக்கப்பட்டுள்ளது.வாசிப்பின் ஏதோவோர் புள்ளியில் வாசகனாகிய நானும், தன்னிலையும் ஒன்றாகவே பயணிப்பதையும் உணர்ந்தேன். அந்த புள்ளியை சரியாக இனம்காண முடியாது போனாலும், அவ்விதமே நிகழ்வதை நூலின் முடிவில் எனது சுயத்தின் “மீளாமையின்” கணங்களில் அவதானித்தேன்.
கதை /சம்பவங்கள்
கதை தன்னை மொழியினூடே பூடகமாய் நிகழ்த்திக்கொண்டாலும், கதை மாந்தர்களின் பெயர்களும் (புள்ளி மான், முள்ளி ) சில நிகழ்வுகளும் நாம் முன்னறிந்தவற்றின் பொழிப்புக்களாக இருப்பதை காணலாம்.
ஓர் விடுதலை இயக்கம் நிர்வாக அமைப்பாக மாறியதன் பின்னரான மாற்றங்கள் வெறுமனே “அப்ப பாப்பம் ” என்றமைக்குள் சுருக்கப்பட்டமை. அதன் விளைவுகளை ஊகங்களாக்கி பாத்திரங்களினூடே பேசுகின்றமை பின்னால் நடக்க இருக்கின்றமையின் “கட்டியங்கள்”.
சித்திரை முகாமின் பயிற்சி ஆசிரியர் “அம்மானின்” சிரேஷ்டத்துவம் புனையப்படும் குற்றங்களால் ஒதுக்கப்படுகின்றமையும் தலைமுறை மாற்றங்களின் குறியீடு.இந்த செவி வழி கதைகளின் மெய்மையை ” செம்மை யாக்கம் ” செய்வதாக இந்த பிரதி அமைகிறது.
மொத்தத்தில் இந்த குறுநாவல் புனைவின் நுட்பங்களை மொழியினூடே கடத்தி, வாசகனை வேறு ஒரு தளத்திற்கு கடத்தி விடுகிறது. இது ஒற்றை தள வாசிப்புக்கான ஒன்றுமல்ல.
இது எனது முதல் வாசிப்பின் அனுபவமே. பிந்தையை வாசிப் புக்கள் இந்த குறிப்பின் விரிவாக்கத்தை தரலாம்.
நிறைய புத்தகங்களை வாசித்து கடந்து விடுகிறோம். ஏதாவது எழுத நினைத்து “பிறகு” வந்து குழப்பி, அப்படியே சிந்தனைகள் தடம் மாறி சென்று விடுகின்றன. என்னவாயினும் “இப்போதைக்கு எழுதி வைப்போம் ” என்ற அகத்தின் வடிப்பே இது.
***
லலிதகோபன்
காலாறப்போனவள் (தாயதி வெளியீடு) – கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.
மொழிபெயர்பாளர்.

